இந்தியாவின் டாப் ஐந்து எலெக்ட்ரிக் பிராண்டுகள் எவை தெரியுமா? தெரிஞ்சுக்கோங்க நாளைக்கே கூட தேவைப்படலாம்!
இந்தியாவின் டாப் ஐந்து மின் வாகன உற்பத்தி நிறுவனங்கள் எவை என்பது பற்றிய தகவலை இந்த பதிவில் வழங்கியிருக்கின்றோம். இதுகுறித்த கூடுதல் தகவலைக் காணலாம், வாங்க.

இந்தியாவில் மின் வாகனங்களுக்கான தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், எந்த நிறுவனத்தின் மின் வாகனங்களுக்கு நாட்டில் நல்ல வரவேற்புக் கிடைத்து வருகின்றது என்பது பற்றிய துள்ளியமான தகவல் வெளிவரவில்லை.

இந்த மர்மத்தை விளக்கும் பொருட்டு நாட்டின் டாப் ஐந்து எலெக்ட்ரிக் பிராண்டுகள் பற்றிய தகவலை இந்த பதிவில் வழங்கியிருக்கின்றோம். கடந்த பிப்ரவரி மாதம் எந்த நிறுவனத்தின் மின்சார இருசக்கர வாகனங்கள் அதிகம் விற்பனையாகியிருக்கின்றது என்ற தரவுகளின் அடிப்படையில் இந்த தகவலை வெளியிட்டிருக்கின்றோம். வாருங்கள் இதுகுறித்த விரிவான தகவலைப் பார்க்கலாம்.

ஹீரோ எலெக்ட்ரிக் (Hero Electric)
இந்திய மின்சார வாகன உலகில் முன்னிலை இடத்தை ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனமே பிடித்திருக்கின்றது. மிக அதிக யூனிட்டுகள் மின்சார வாகனங்களை விற்பனைச் செய்து இந்த இடத்தை அது பிடித்திருக்கின்றது. நிறுவனம் கடந்த பிப்ரவரி மாதத்தில் 7,356 யூனிட் எலெக்ட்ரிக் டூ-வீலர்களை விற்பனைச் செய்திருக்கின்றது.

2021ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தைக் காட்டிலும் இது மும்மடங்கு அதிக விற்பனை எண்ணிக்கையாகும். 2,194 யூனிட்டுகளை மட்டுமே விற்பனைச் செய்திருந்தது என்பது குறிப்பிடத்தகுந்தது. இதேபோல், 2022 ஜனவரியில் 7,763 யூனிட் டூ-வீலர்களை அது விற்பனைச் செய்திருக்கின்றது.

இத்தகைய மிக சிறப்பான விற்பனை எண்ணிக்கையை ஹீரோ எலெக்ட்ரிக் பெற்றிருப்பதனால் நாட்டின் முன்னணி நிறுவனமாக மாறியிருக்கின்றது. 2021ம் ஆண்டில் ஒட்டுமொத்தமாகவே நிறுவனம் 46,260 யூனிட் எலெக்ட்ரிக் டூ-வீலர்களை மட்டுமே விற்பனைச் செய்திருந்தது. இதைவிட பல மடங்கு அதிக விற்பனை எண்ணிக்கையை நடப்பாண்டில் ஹீரோ எலெக்ட்ரிக் பெறும் என்பதை வெளிக்காட்டும் வகையில் தொடர் விற்பனை அதிகரிப்பு நமக்கு எடுத்துரைக்கின்றது.

ஒகினவா ஆட்டோ டெக் (Okinawa)
ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனத்திற்கு அடுத்தபடியாக ஒகினவா நிறுவனத்தின் எலெக்ட்ரிக் வாகனங்களே மிக அதிகளவில் விற்பனையாகுகின்றன. நிறுவனத்தின் பெரும்பாலான தயாரிப்புகள் குறைவான விலையில், அதிக சிறப்பம்சங்களுடன் விற்பனைக்குக் கிடைக்கின்றன. எனவே நாட்டு மக்கள் மத்தியில் இந்நிறுவனத்தின் தயாரிப்புகள் மிக சிறப்பான வரவேற்பைப் பெற்று வருகின்றன.

நிறுவனத்தின் தயாரிப்புகள் 2022 பிப்ரவரியில் 5,923 யூனிட் வரை விற்பனையாகியிருக்கின்றன. இது 2021 பிப்ரவரியைக் காட்டிலும் ஐந்து மடங்கு அதிக விற்பனை ஆகும். வெறும் 1,067 யூனிட்டுகள் விற்பனையை மட்டுமே கடந்தாண்டு பிப்ரவரியில் ஒகினவா பெற்றிருந்தது. நிறுவனம் மிக விரைவில் ஒகி 90 எனும் புதுமுக வாகனத்தை நாட்டில் விற்பனைக்குக் கொண்டு வரும் முயற்சியில் களமிறங்கியிருக்கின்றது.

ஆம்பியர் வெயிக்கிள் (Ampere)
ஆம்பியர் நிறுவனம் இந்தியாவில் பன்முக தேர்வுகளில் மின் வாகனங்களை விற்பனைக்கு வழங்கி வருகின்றது. இந்நிறுவனம், ரியோ, ரியோ எலைட், மேக்னஸ் இஎக்ஸ், மேக்னஸ் ப்ரோ மற்றும் ஜீல் ஆகிய மின்சார வாகன மாடல்களை நாட்டில் விற்பனைக்கு வழங்கி வருகின்றது.

இவை அனைத்திற்கும் நல்ல வரவேற்பு நாட்டு மக்கள் மத்தியில் கிடைக்கின்றது. இதை உறுதிப்படுத்தும் வகையில் கடந்த 2021ம் ஆண்டில் வெறும் 806 யூனிட்டுகளாக இருந்த விற்பனை 2022 பிப்ரவரியில் 4,303 யூனிட்டுகளாக மாறியிருக்கின்றது. இது மிக பெரிய வளர்ச்சியாகும்.

ஓலா எலெக்ட்ரிக் (Ola Electric)
பிரபல கால் டாக்சி நிறுவனமான ஓலா எஸ் 1 மற்றும் எஸ் 1 ப்ரோ ஆகிய இரு விதமான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களை இந்தியாவில் விற்பனைக்கு வழங்கி வருகின்றது. இவை பிரீமியம் தர அம்சங்கள் கொண்ட மின்சார ஸ்கூட்டராகும். எனவே பிரீமியம் தர வாகனத்தை அதிகம் விரும்பும் வாகன பிரியர்கள் மத்தியில் ஓலா எலெக்ட்ரிக்-இன் இரு தயாரிப்புகளுக்கும் நல்ல வரவேற்புக் கிடைத்து வருகின்றது.

இந்நிறுவனம் 2022 பிப்ரவரியில் ஒட்டுமொத்தமாக 3,904 யூனிட்டுகள் வரை டெலிவரி செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விற்பனைக்கு வந்த சில மாதங்களே ஆகின்ற நிலையில் மிக சிறப்பான விற்பனை எண்ணிக்கையை நிறுவனம் பெற்றிருக்கின்றது.

ஏத்தர் எனெர்ஜி (Ather)
கர்நாடகா மாநிலம் பெங்களூருவை மையமாகக் கொண்டு இயங்கும் இந்நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கும் இந்தியர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு நிலவி வருகின்றது. ஆனால், போன மாதம் போதியளவில் அதற்கு வரவேற்புக் கிடைக்கவில்லை. ஆம், லேசான விற்பனை சரிவை அது சந்தித்துள்ளது.

2021 பிப்ரவரியில் 2,825 யூனிட்டுகள் வரை நிறுவனத்தின் மின்சார ஸ்கூட்டர்கள் விற்பனையாகிய நிலையில், 2022 பிப்ரவரியில் 2,229 யூனிட்டுகள் மட்டுமே விற்பனையாகி இருக்கின்றன. இது மிக லேசான சரிவாகும். ஆச்சரியமளிக்கும் வகையில் இந்த சரிவைச் சந்தித்த பின்னரும் ஏத்தர் எனெர்ஜி நிறுவனம் நாட்டின் முன்னணி மின் வாகன பிராண்டுகளின் பட்டியலில் ஐந்தாவது இடத்தை பிடித்திருக்கின்றது.


Click it and Unblock the Notifications