மீண்டும் ஃபார்முக்கு வந்த ஹீரோ எலெக்ட்ரிக்... ஓலா எலெக்ட்ரிக், ஏத்தருக்கு அடி இடி மாதிரி விழுந்திருக்கு!
ஹீரோ எலெக்ட்ரிக் (Hero Electric) நிறுவனம் மீண்டும் விற்பனையில் ஃபார்முக்கு வந்துள்ளது. இதன் விளைவாக இந்தியாவின் முன்னணி இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமாக அது மீண்டும் மாறியிருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

எலெக்ட்ரிக் வாகன சந்தையில் முன்னணி நிறுவனமாக ஹீரோ எலெக்ட்ரிக் (Hero Electric) நிறுவனம் விளங்கிக் கொண்டிருந்தது. இந்த இடத்தை கடந்த சில மாதங்களாக ஓலா எலெக்ட்ரிக் தொடங்கி ஒகினவா நிறுவனம் வரை ஆளாளுக்கு போட்டிப் போட்டுக் கொண்டு தட்டிப் பறித்து வந்தன. அதாவது, இந்தியர்கள் அளித்த அமோக வரவேற்பின் காரணத்தினால் இரு நிறுவனங்களும் விற்பனையில் மாறி மாறி முதல் இடத்தைப் பிடித்து வந்தன.

இதன் விளைவாக ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனம் கடந்த சில மாதங்களாகவே பின் தங்கிய நிலையில் காணப்பட்டது. இந்த மாதிரியான சூழ்நிலையிலேயே ஹீரோ எலெக்ட்ரிக் மீண்டும் ஃபார்முக்கு வந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது, ஓலா எலெக்ட்ரிக் மற்றும் ஏத்தர் எனெர்ஜி போன்ற மின்வாகன உற்பத்தியாளர்களை மீண்டும் விற்பனையில் பின்னுக்கு தள்ளி ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனம் முதல் இடத்தைப் பிடித்திருக்கின்றது.

ஒட்டுமொத்தமாக 2022 ஜூலையில் 8,786 யூனிட் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனைச் செய்ததன் வாயிலாக முதல் இடம் என்ற பதவியை பிற நிறுவனங்களிடம் இருந்து ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தட்டிப் பறித்திருக்கின்றது. நிறுவனத்திற்குக் கடந்த காலங்களில் கடுமையான போட்டியை வழங்கி வந்த ஒகினவா, ஓலா எலெக்ட்ரிக் மற்றும் ஏத்தர் எனெர்ஜி உள்ளிட்ட நிறுவனங்கள் ஹீரோ எலெக்ட்ரிக் விற்பனைச் செய்திருப்பதைவிட குறைவான எண்ணிக்கையையே விற்றிருக்கின்றன.

அந்தவகையில், ஒகினாவா நிறுவனத்தின் தயாரிப்புகள் நடந்து முடிந்த 2022 ஜூலையில் ஒட்டுமொத்தமாக 8,093 யூனிட்டுகள் வரை விற்பனையாகியிருக்கின்றன. முந்தைய ஜூன் மாதத்தில் இதே நிறுவனத்தின் தயாரிப்புகள் 6,944 யூனிட்டுகள் விற்பனையாகியிருந்தன என்பது குறிப்பிடத்தகுந்தது.

இதே நிறுவனம் கடந்த ஆண்டு ஜூலையில் வெறும் 2,580 யூனிட்டுகளை மட்டுமே விற்பனைச் செய்திருந்தது. இதனுடன் ஒப்பிடுகையில் 214 சதவீத விற்பனை வளர்ச்சியையே ஒகினாவா நடப்பாண்டில் பெற்றிருக்கின்றது. இருப்பினும், ஹீரோ எலெக்ட்ரிக்கை முந்த முடியாமல் அது இரண்டாவது இடத்தை மட்டுமே பிடிக்க முடிந்துள்ளது.

இதற்கு அடுத்தபடியாக மூன்றாவது இடத்தை ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் பிடித்துள்ளது. நிறுவனத்திற்கு பேரடி என்றே கூறலாம். மக்கள் மத்தியில் இந்நிறுவனத்தின் தயாரிப்பின்மீது ஏற்பட்ட அதிருப்தியே இதற்கு காரணம் என கூறலாம். இதன் விளைவாக நிறுவனம் 35 சதவீத விற்பனை வீழ்ச்சியை 2022 ஜூலையில் சந்தித்துள்ளது. இதே நிறுவனத்தின் தயாரிப்புகள் 2022 ஜூனில் 5,886 யூனிட்டுகள் விற்பனையாகியிருந்தன என்பது குறிப்பிடத்தகுந்தது.

இந்த நிறுவனத்திற்கு அடுத்த இடத்தை ரிவோல்ட் பிடித்துள்ளது. நிறுவனம் ஆர்வி400 மோட்டார்சைக்கிளை இந்திய சந்தையில் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. இந்த ஒற்றை மாடல் தனி ஆளாக நின்று 2,316 யூனிட்டுகள் வரை விற்பனையாகியிருக்கின்றன. இதே இருசக்கர வாகனம் 2022 ஜூனில் 2,424 யூனிட்டுகள் மட்டுமே விற்பனையாகியிருந்தன என்பது குறிப்பிடத்தகுந்தது.

கடைசியாக ஐந்தாவது இடத்தை ஏத்தர் எனெர்ஜி பிடித்துள்ளது. கடந்த காலங்களில் முதல் மற்றும் இரண்டாம் இடங்களை பிடித்து வந்த இந்நிறுவனம் போட்டி அதிகரித்துக் காணப்படுவதனால் இம்முறை ஐந்தாவது இடத்திற்கு தள்ளப்பட்டிருக்கின்றது. 2022 ஜூன் மாதத்தைக் காட்டிலும் 67 சதவீதம் குறைவான விற்பனை எண்ணிக்கையே ஏத்தர் எனெர்ஜி பெற்றிருக்கின்றது. அதாவது, 3,829 யூனிட்டுகள் 2022 ஜூனில் விற்பனையாகிய நிலையில் நடந்து முடிந்த ஜூலையில் வெறும் 1,279 யூனிட்டு ஏத்தர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களே விற்பனையாகியுள்ளன.

கடந்த காலங்களில் அதிகளவில் வாகனங்களை விற்பனைச் செய்த மின் வாகன உற்பத்தி நிறுவனங்கள் நடந்து முடிந்த 2022 ஜூலை மாதத்தில் மிக குறைவான எண்ணிக்கையில் வாகனங்களை விற்பனைச் செய்ய தொடர் மின்சார இருசக்கர வாகன தீ விபத்து நிகழ்வே முக்கிய காரணமாக உள்ளது. இதுதவிர, சந்தையில் புதுமுக எலெக்ட்ரிக் வாகனங்களின் வருகை பல மடங்கு அதிகரித்துக் காணப்படுகின்றது. இதனாலும் பல நிறுவனங்கள் விற்பனை வளர்ச்சியைப் பெற முடியாமல் சில நிறுவனங்கள் தவித்துக் கொண்டிருக்கின்றன.


Click it and Unblock the Notifications








