ஹீரோ ஸ்பிளெண்டர் பைக்கை இனி இந்த நிறத்தில் வாங்கிட வேண்டியதுதான்!! விலையும் ரொம்ப குறைவு...
ஹீரோ ஸ்பிளெண்டர் ப்ளஸ் மோட்டார்சைக்கிள் ரூ.72,978 என்கிற விலையில் புதிய சில்வர் நெக்ஸஸ் நீல நிறத்தேர்வை பெற்றுள்ளது. இந்த புதிய ஸ்பிளெண்டர் பைக் எப்படி உள்ளது? புதியதாக ஏதேனும் அப்டேட்கள் சேர்க்கப்பட்டுள்ளனவா என்பது குறித்த விரிவான விபரங்களை இனி பார்க்கலாம்.

இந்தியாவில் தற்சமயம் அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்படக்கூடிய மோட்டார்சைக்கிள் என்று பார்த்தால் அது ஹீரோ மோட்டோகார்பின் ஸ்பிளெண்டர் பைக் தான். எந்தவொரு இடையூறுமின்றி விற்பனையில் சக்கைப்போடு போட்டுவரும் ஸ்பிளெண்டர், அதே சூழலை தக்க வைத்து கொள்ள வேண்டும் என்பதற்காக அவ்வப்போது ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் அப்டேட் செய்தும் விடுகிறது.

இந்த வகையில் தான் தற்போது புதியதாக சில்வர் நெக்ஸஸ் நீல நிறத்தேர்வு சேர்க்கப்பட்டுள்ளது. இந்த புதிய நிறத்தேர்வானது குறிப்பாக ஸ்பிளெண்டர் ப்ளஸ் மாடலுக்கு வழங்கப்பட்டுள்ளது. புதிய சில்வர் நெக்ஸஸ் நீல நிறத்தேர்வில் ஸ்பிளெண்டர் ப்ளஸ் பைக்கின் விலை ரூ.70,658 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய பெயிண்ட் தேர்வு சேர்க்கப்பட்டுள்ளதினால் இந்த அன்றாட பயன்பாட்டு மோட்டார்சைக்கிளுக்கு வழங்கப்படும் பெயிண்ட் தேர்வுகளின் எண்ணிக்கை 6ஆக அதிகரித்துள்ளது. புதிய சில்வர் நெக்ஸஸ் நீலம், பர்பிள் உடன் கருப்பு, ஸ்போர்ட்ஸ் சிவப்பு உடன் கருப்பு, பச்சை உடன் அடர் க்ரே, மேட் ஷீல்டு கோல்டு மற்றும் சில்வர் உடன் கருப்பு என்பவை அந்த 6 பெயிண்ட் தேர்வுகளாகும்.

புதிய பெயிண்ட் தேர்வை தவிர்த்து ஹீரோ ஸ்பிளெண்டர் ப்ளஸ் பைக்கின் தோற்றத்தில் எந்த மாற்றமும் இல்லை. ஏற்கனவே கூறியதுதான், இந்தியாவின் சிறந்த விற்பனை மோட்டார்சைக்கிளாக விளங்கும் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் ஸ்பிளெண்டர் ஒவ்வொரு மாதத்திலும் சராசரியாக 2.5 லட்ச யூனிட்கள் விற்பனை செய்யப்படுகிறது.

ஸ்பிளெண்டர் பைக்குகளின் விலை எப்போதும் குறைவாகவே இருப்பதற்கு முக்கிய காரணம் இதில் 100சிசி என்ஜின் பொருத்தப்படுவதே. ஸ்பிளெண்டரின் 97.2சிசி, சிங்கிள்-சிலிண்டர், ஏர்-கூல்டு, ஃப்யுல்-இன்ஜெக்டட் என்ஜின் அதிகப்பட்சமாக 8,000 ஆர்பிஎம்-இல் 7.9 பிஎச்பி மற்றும் 6,000 ஆர்பிஎம்-இல் 8.05 என்எம் டார்க் திறன் வரையில் வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது.

இந்த என்ஜின் உடன் 4-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்பட, ஸ்பிளெண்டர் ப்ளஸ் பைக்கில் ஹீரோ பிராண்டின் ஐ3எஸ் ஐடியல் ஸ்டார்ட்/ஸ்டாப் அமைப்பும் வழங்கப்படுகிறது. சஸ்பென்ஷனுக்கு இந்த பைக்கில் முன்பக்கத்தில் டெலெஸ்கோபிக் ஃபோர்க்குகளும், பின்பக்கத்தில் இரட்டை சுருள் ஷாக் அப்சார்பர்கள் வழங்கப்படுகிறது. பிரேக்கிங் பணிகளை இரு சக்கரங்களிலும் ட்ரம் பிரேக்குகள் கவனித்து கொள்கின்றன.

தற்போதைய 2022ஆம் ஆண்டில் தயாரிக்கப்படும் ஹீரோ ஸ்பிளெண்டர் பிளஸ் பைக்குகளின் விலைகள் ரூ.70,658இல் இருந்து ரூ.72,978 வரையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடைசியாக ஸ்பிளெண்டர் பைக்குகள் வரிசையில் ஸ்பிளெண்டர் எக்ஸ்டெக் என்ற ஹை-டெக் வெர்சனை ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் கடந்த மே மாதத்தில் அறிமுகப்படுத்தி இருந்தது. ஸ்பிளெண்டர் எக்ஸ்டெக் பைக்கின் அறிமுக விலையாக ரூ.72,900 நிர்ணயிக்கப்பட்டது.

தோற்றத்தை பொறுத்தவரையில் மற்ற ஸ்பிளெண்டர் வேரியண்ட்களுடன் ஒப்பிடுகையில், எக்ஸ்டெக் வெர்சனில் பெரியதாக எந்த மாற்றமும் இல்லை. பாடி பேனல்களில் புதிய கிராஃபிக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் ஹெட்லேம்ப்பிற்கு மேலாக எல்இடி டிஆர்எல் பொருத்தப்பட்டுள்ளது. ஸ்பிளெண்டர் எக்ஸ்டெக் மாடலுக்கு பெடா நீலம், கான்வாஸ் கருப்பு, டோர்னாடோ க்ரே மற்றும் பேர்ல் வெள்ளை என்ற 4 வெவ்வேறான பெயிண்ட் தேர்வுகள் வழங்கப்படுகின்றன.

ஸ்பிளெண்டர் பைக்குகளிலேயே பிரீமியம் தரமானதாக விளங்கும் எக்ஸ்டெக் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டரை ப்ளூடூத் இணைப்பு மூலமாக ஏகப்பட்ட தகவல்களை வழங்கக்கூடியதாக பெற்றுள்ளது. ப்ளூடூத் வாயிலாக மொபைல் போனுக்கு வரும் குறுஞ்செய்தி & அழைப்புகளை இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டரில் அறியலாம்.

அத்துடன் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் அமைப்பில் இரட்டை ட்ரிப் மீட்டர்கள் மற்றும் நிகழ்-கால மைலேஜ் இண்டிகேட்டர் உள்ளிட்டவையும் உள்ளது. இவற்றுடன் யுஎஸ்பி மொபைல் சார்ஜிங் வசதி மற்றும் சைடு-ஸ்டாண்டு போடப்பட்டிருந்தால் என்ஜின் ஆஃப் ஆகும் உள்ளிட்டவற்றையும் ஸ்பிளெண்டர் எக்ஸ்டெக் பைக் பெற்றுவந்துள்ளது.

மற்றப்படி என்ஜினிலோ அல்லது கியர்பாக்ஸிலோ எந்த மாற்றமும் இல்லை. ஐ3எஸ் ஸ்டார்ட்/ஸ்டாப் சிஸ்டம் எக்ஸ்டெக் வேரியண்ட்டிலும் உள்ளது. ஹீரோ ஸ்பிளெண்டர் பைக்கிற்கு மாற்றாக பைக்கை எதிர்பார்க்கிறீர்கள் எனில், ஹீரோ எச்.எஃப் டீலக்ஸ், பஜாஜ் பிளாட்டினா, ஹோண்டா சிடி110 ட்ரீம் உள்ளிட்டவற்றை பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications








