60 ஸ்கூட்டர்கள், 500 ஹெல்மெட்டுகளை வாரி வழங்கிய ஹீரோ மோட்டோகார்ப்! நிறுவனத்தை பாராட்டி தள்ளிய மத்திய அமைச்சர்!
பெண்கள் தினத்தை முன்னிட்டு ஹீரோ மோட்டோகார்ப் (Hero MotoCorp) நிறுவனம் 60 ஸ்கூட்டர்கள் மற்றும் 500 ஹெல்மெட்டுகளை குறிப்பிட்ட நகர காவல்துறையிடம் வழங்கியிருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே காணலாம்.

இன்று (மார்ச் 8) சர்வதேச பெண்கள் தினம் ஆகும். 18ம் நூற்றாண்டுகளில் நிலவி வந்த பெண்களுக்கு எதிரான சூழலை களையும் விதமாக முன்னெடுக்கப்பட்ட 'பெண்கள் உரிமை' போராட்டமே தற்போது உலக பெண்கள் தினமாகக் கொண்டக் காரணமாக இருக்கின்றது. ஒவ்வொரு ஆண்டும் வெகு விமரிசையாக இந்த நாள் கொண்டாடப்படுக்கின்றது.

குறிப்பாக, பெண்களுக்கு சிறப்பு சேர்க்கும் விதமான நிகழ்வுகள் பல இந்த நாளில் அரங்கேறும். அந்தவகையிலான ஓர் சிறப்பு சம்பவமே இந்தியாவின் நாக்பூரில் அரங்கேறியிருக்கின்றது. பெண்கள் தினத்தை முன்னிட்டு பிரபல இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமான ஹீரோ மோட்டோகார்ப் (Hero MotoCorp), 60 ஸ்கூட்டர்கள் மற்றும் 500 ஹெல்மெட்டுகளை வழங்கியிருக்கின்றது.

நாக்பூர் காவல்துறை மற்றும் தீயணைப்பு துறைக்கே இவை வழங்கப்பட்டுள்ளன. வழக்கமான ஹீரோ ஸ்கூட்டர்களில் இருந்து பல மடங்கு மாறுபட்ட அம்சங்களுடன் தற்போது வழங்கப்பட்டிருக்கும் ஹீரோ ஸ்கூட்டர்கள் காட்சியளிக்கின்றன. அவை, சைரன்கள், ஒலிப்பெருக்கி மற்றும் காவலர்களுக்கு தேவையான பிற வசதிகளை வழங்கக் கூடிய முக்கிய அம்சங்களும் இந்த ஸ்கூட்டர்களில் வழங்கப்பட்டுள்ளன.

ஆகையால், வழக்கமான ஹீரோ ஸ்கூட்டர்களைக் காட்டிலும் இது சற்று வித்தியாசமானதாகக் காட்சியளிக்கின்றது. அவசர காலங்களில் காவலர்கள் மற்றும் தீயணைப்பு துறையினர் விரைந்து செயல்பட இந்த ஸ்கூட்டர்கள் உதவும் என ஹீரோ நிறுவனம் நம்பிக்கைத் தெரிவித்திருக்கின்றது.

ஹீரோ ஸ்கூட்டர்கள் வழங்கும் நிகழ்வில் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்காரி பங்கேற்றார். இவரின் முன்னிலையிலேயே ஹீரோ ஸ்கூட்டர்கள் மற்றும் ஹெல்மெட்டுகள் ஆகியவற்றை நாக்பூர் காவல் ஆணையர் மற்றும் தீயணைப்பு பிரிவினர் கைகளில் ஹீரோ நிறுவனத்தின் செயல் இயக்குநர் விக்ரம் கஸ்பேகர் ஒப்படைத்தார்.

இவர்களுடன், நாக்பூர் காவல் ஆணையர் அமிதேஷ் குமார் மற்றும் காதி மற்றும் கிராம தொழில் ஆணையத்தின் உறுப்பினர் ஜெய்பிரகாஷ் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களும் கலந்துக் கொண்டனர். இவர்களின் முன்னிலையிலேயே சிறப்பு வசதிகள் கொண்ட ஹூரோ ஸ்கூட்டர்களே தற்போது நாக்பூர் காவலர்கள் மற்றும் தீயணைப்புத் துறையினரின் பயன்பாட்டிற்காக வழங்கப்பட்டுள்ளது.

ஹீரோ நிறுவனத்தின் இந்த முன்னெடுப்பிற்கு மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தனது பாராட்டுக்களை தெரிவித்தார். மேலும் பேசிய அவர், "மக்களை பாதுகாப்பாக வழிநடத்த கார்பரேட் மற்றும் உள்ளூர் அதிகாரிகள் இணைந்து செயல்பட தொடங்கியிருப்பது மிக சிறந்த செயல்பாடு. குறிப்பாக, பெண்கள் பாதுகாப்பிற்காக களமிறங்கியிருப்பது பாராட்டிற்குரியது" என்றார்.

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் ஸ்கூட்டர்களை வழங்கிய கையோடு அரசின் ஆறு முக்கிய பிரிவுகளில் சிறந்து செயல்படும் பெண் அதிகாரிகளுக்கு சிறப்பு சேர்க்கும் பணியையும் ஈடுபட்டிருக்கின்றது. இதுமாதிரியான முயற்சிகளின் காரணத்தினால் ஹீரோ நிறுவனத்திற்கு தற்போது பாராட்டுக்கள் குவிந்து வருகின்றது.


Click it and Unblock the Notifications








