குறிப்பிட்ட எல்லையை தாண்டினாலே எச்சரிக்க ஆரம்பிச்சுரும்! தரமான அம்சங்களுடன் எக்ஸ்ட்ரீம் 160ஆர் பைக் அறிமுகம்!
ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160ஆர் ஸ்டீல்த் எடிசன் 2.0 (Hero Xtreme 160R Stealth Edition 2.0) பைக் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகமாகியுள்ளது. இந்த பைக்கின் சிறப்புகள்குறித்த கூடுதல் விபரங்களைக் கீழே உள்ள பதிவில் பார்க்கலாம், வாங்க.

பிரபல இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமான ஹீரோ மோட்டோகார்ப், அதன் எக்ஸ்ட்ரீம் 160ஆர் ஸ்டீல்த் எடிசன் 2.0 (Hero Xtreme 160R Stealth Edition 2.0) மோட்டார்சைக்கிளை இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. எக்கசக்க நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் இந்த பைக் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, மொபைல் இணைப்பு அம்சம் இந்த பைக்கில் வழங்கப்பட்டிருக்கின்றது.

இந்த இணைப்பு அம்சத்தின் வாயிலாக பைக்கை லைவ் டிராக் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது. ஆகையால், புதிதாக விற்பனைக்கு வந்திருக்கும் ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160ஆர் ஸ்டீல்த் எடிசன் 2.0 பைக்கை திருடர்கள் திருடிச் சென்றாலும், நொடிப் பொழுதில் அது இருக்கும் இடத்தைக் கண்டறிந்துவிட முடியும். இந்த அம்சத்தை ஹீரோ நிறுவனம் 'ஹீரோ கன்னெக்ட் டெக்' (Hero Connect tech) என்கிற பெயரில் வழங்குகின்றது.

ப்ளூடூத் கருவியின் வாயிலாகவே செல்போனை இணைக்கும் வகையில் நிறுவனம் இப்பைக்கை வடிவமைத்திருக்கின்றது. இதுமட்டுமின்றி, ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160ஆர் ஸ்டீல்த் எடிசன் 2.0 குறிப்பிட்ட எல்லையை தாண்டினால் அதுகுறித்த எச்சரிக்கையை வழங்கும் வகையிலும் வடிவமைக்கப்பட்டிருக்கின்றது. ஆகையால், திருட்டு பயம் அறவே இருக்காது.

இத்துடன், குறிப்பிட்ட வேகத்தை செட் செய்து அதைத் தாண்டினால் அதுகுறித்த தகவலையும் எச்சரிக்கையாக வழங்கும் தொழில்நுட்பமும் இப்பைக்கில் வழங்கப்பட்டிருக்கின்றது. ஆகையால், வேற லெவல் தொழில்நுட்ப வசதிக் கொண்ட பைக்காக ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160ஆர் ஸ்டீல்த் எடிசன் 2.0 காட்சியளிக்கின்றது.
இந்த பைக்கை நவீன தொழில்நுட்ப வசதியால் மட்டுமில்லைங்க புதிய நிறத்தாலும் ஹீரோ மோட்டோகார்ப் அலங்கரித்திருக்கின்றது.

புதிதாக கருப்பு நிற பெயிண்ட் இந்த பைக்கிற்கு கவர்ச்சி சேர்க்கும் வகையில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இத்துடன், கூடுதல் ஈர்ப்பை பெறும் வகையில் சிவப்பு நிற அக்செண்டுகள் இப்பைக்கில் பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்த சிவப்பு நிற அக்செண்டுகள் ஃபோர்க்கின் அடிப்பகுதி, மோனோஷாக், எஞ்ஜின் ஹெட், பில்லியன் ஃபூட் ரெஸ்ட் மற்றும் ரியர் கிராப் ரெயில் உள்ளிட்ட பகுதிகளில் பயன்படுத்தப்பட்டுள்ளன.

இவை அனைத்தும் பைக்கிற்கு வேற லெவல் லுக்கை வழங்கும் வகையில் உள்ளன. இது போன்ற சிறப்பு அலங்காரங்களுடனேயே ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160ஆர் ஸ்டீல்த் எடிசன் 2.0 விற்பனைக்கு வந்திருக்கின்றது. மோட்டாரை பொருத்தவரை வழக்கமான எக்ஸ்ட்ரீம் 160ஆர் மாடலில் பயன்படுத்தப்படும் அதே 163 சிசி சிங்கிள் சிலிண்டர் ஏர் கூல்டு மோட்டாரே பொருத்தப்பட்டுள்ளது.

இந்த மோட்டார் அதிகபட்சமாக 15.2 எச்பி பவரையும், 14 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது. சஸ்பென்ஷன் செட்-அப்பை பொருத்தவரை 37 மிமீ டெலிஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் 7 ஸ்டெப் ப்ரீலோட் அட்ஜஸ்டபிள் மோனோஷாக் ஆகியவையே பயன்படுத்தப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, மிக சிறந்த பிரேக்கிங் அனுபவத்திற்காக முன் பக்க வீலில் 276 மிமீ பெடல் டிஸ்க்கும், பின்பக்க வீலில் 220 மிமீ டிஸ்க்கும் கொடுக்கப்பட்டுள்ளது.

இத்துடன், சிங்கிள் சேனல் ஏபிஎஸ்-ம் வழங்கப்பட்டுள்ளது. ஆகையால், பிரேக்கிங் அனுபவம் மிக சூப்பராக இருக்கும் என்பதை நம்மால் உணர முடிகின்றது. இந்த பைக்கிற்கு அறிமுகமாக ரூ. 1.30 லட்சம் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது டெல்லி எக்ஸ்-ஷோரூம் விலை ஆகும். முந்தைய ஸ்டீல்த் எடிசனைக் காட்டிலும் ரூ. 7 ஆயிரம் அதிகம் விலையாகும்.

இப்புதுமுக பைக்கின் வருகை டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 1604வி, பஜாஜ் பல்சர் என்160, சுஸுகி ஜிக்ஸர் மற்றும் யமஹா எஃப்இசட்-எஃப்ஐ உள்ளிட்ட பைக் மாடல்களுக்கு போட்டியாக அமைந்துள்ளது. மிகவும் அழகிய தோற்றத்தில் இந்த ஸ்டீல்த் எடிசன் இருப்பதால் போட்டி களம் சற்றே சூடுபிடித்துக் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications








