ஹீரோ-யமஹா இணைவில் உருவாகும் மின்சார வாகனம்... எப்போது பணிகள் தொடக்கம்? வெளியாகியது முக்கிய தகவல்!
ஹீரோ மோட்டார்ஸ் நிறுவனமும், யமஹா நிறுவனமும் கடந்த ஆண்டின் இறுதியில் மின் வாகன உற்பத்தியை மேற்கொள்வதற்காக கூட்டணியைத் தொடங்கின. இந்த நிலையில் இரு நிறுவனங்களும் எப்போது எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியை தொடங்க இருக்கின்றன என்பது பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களைக் கீழே காணலாம், வாங்க.

மின்சாரத்தால் இயங்கும் வாகனங்களுக்கு நாட்டில் வரவேற்பு அதிகரித்துக் காணப்படுகின்றது. இதன் விளைவாக புதுமுக வாகன உற்பத்தி நிறுவனங்கள் தொடங்கி முன்னணி வாகன உற்பத்தியாளர்கள் வரை மின் வாகன தயாரிப்பில் அதிக முனைப்புடன் ஈடுபட தொடங்கியிருக்கின்றன. இந்த பணியை ஒரு படி மேலே எடுத்துச் செல்லும் வகையில் ஹீரோ மோட்டார்ஸ் மற்றும் யமஹா மோட்டார் ஆகிய இரு நிறுவனங்களும் பணிகளை மேற்கொள்ள தொடங்கின.

அதாவது, மின் வாகன உற்பத்தியை மேற்கொள்ளும் பொருட்டு இரு நிறுவனங்களும் கூட்டணியை அமைத்துள்ளன. இந்த நிகழ்வு கடந்த 2021 ஆம் ஆண்டு அக்டோபரில் அரங்கேறியது. அப்போதே இரு நிறுவனங்களும் எலெக்ட்ரிக் வாகனத்தை உற்பத்தி செய்வதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.

ஆனால், இரு நிறுவனங்களும் எப்போது மின் வாகன உற்பத்தி பணியைத் தொடங்கும் என்ற தகவலை வெளியிடவில்லை. வெகு விரைவில் தொடங்க இருப்பதாக மட்டுமே தகவலை வெளியிட்டன. இந்த நிலையிலேயே இரு நிறுவனங்களும் எப்போது எலெக்ட்ரிக் வாகனங்களை உற்பத்தி செய்ய இருக்கின்றன என்பது பற்றிய தகவலை வெளியிட்டிருக்கின்றன.

இரு மாபெரும் வாகன உற்பத்தியாளர்களும் இணைந்து நடப்பாண்டு நவம்பர் மாதத்தில் இருந்து எலெக்ட்ரிக் வாகனங்களை உற்பத்தி செய்ய இருக்கின்றன. இதற்காக லூதியானாவில் உள்ள உற்பத்தி ஆலை தயார் செய்யப்பட்டு வருகின்றது. இங்கு வைத்தே நிறுவனங்களின் கூட்டணியின் அடிப்படையில் எதிர்காலத்திற்கான மின்சார வாகனங்களும் உற்பத்தி செய்யப்பட இருக்கின்றன.

இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவலையே யமஹா-ஹீரோ கூட்டணி இன்று (ஏப்ரல் 4) வெளியிட்டிருக்கின்றன. இத்துடன், 10 லட்சம் யூனிட்டுகளை வெவ்வேறு கட்டங்களாக உற்பத்தி செய்ய திட்டமிட்டிருப்பதாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்கான அடிக்கல்லை கடந்த வாரம் நடைபெற்ற நிகழ்ச்சியின்போதே நிறுவனங்கள் செய்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

உள் நாடு மற்றும் வெளிநாடு என அனைத்து சந்தைகளுக்குமான மின் வாகனங்களும் இங்கு வைத்தே உற்பத்தி செய்யப்பட்டு, ஏற்றுமதி செய்யப்பட இருக்கின்றன. உற்பத்திக்கான ஆலோசனை, தொழில்நுட்பம் பகிர்மானம் உள்ளிட்டவற்றை கூட்டணியின் அடிப்ப்டையில் இரு நிறுவனங்கள் மேற்கொள்ள இருக்கின்றன. ஆகையால், இரு நிறுவனங்களும் சேர்ந்து உருவாக்க இருக்கும் இ-வாகனம் உலக தரம் வாய்ந்த மற்றும் அதி-நவீன தயாரிப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஹீரோ நிறுவனத்திற்கு சொந்தமான இ-சைக்கிள் வேலி ஆலையிலேயே மின் வாகனங்கள் உற்பத்தி செய்யப்பட இருக்கின்றன. இந்த ஆலை சுமார் 100 ஏக்கர் பரப்பளவைக் கொண்டது ஆகும். இங்கு உலக நாடுகள் பலவற்றிற்கான மின் வாகனங்கள் மற்றும் மோட்டார்கள் உள்ளிட்டவற்றை தயாரிக்கப்பட்டு வருகின்றன. இதுமட்டுமின்றி, வாகனங்களுக்கான உதிரி பாகங்களும் இந்த ஆலையில் வைத்து தயாரிக்கப்படுகின்றன.

இந்த நிலையிலேயே ஹீரோ - யமஹா கூட்டணியிலான இ-வாகனங்களும் இங்கு வைத்தே தயாரிக்கப்படும் என நிறுவனங்கள் அறிவித்துள்ளன. ஆகையால், விரைவில் சூப்பரான மின்சார வாகனங்கள் இந்த ஆலையில் இருந்து விற்பனைக்காக உருவாக்கப்பட்டு, வெளியேற்றப்பட இருக்கின்றன. இந்த நிகழ்விற்காக இரு நிறுவனத்தின் ரசிகர்களும் எதிர்நோக்கிக் காத்துக்கிடக்கத் தொடங்கியிருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications








