சிபிஆர்150ஆர் பைக்கை மீண்டும் இந்தியா கொண்டுவருகிறதா ஹோண்டா? காப்புரிமையை பதிவு செய்து கொண்டது!!
சிபிஆர்150ஆர் பைக்கின் டிசைனிற்கான காப்புரிமையை இந்தியாவில் ஹோண்டா மோட்டார்சைக்கிள் நிறுவனம் பதிவு செய்து கொண்டுள்ளது. இதுகுறித்தும், இந்த ஹோண்டா மோட்டார்சைக்கிளை பற்றியும் இனி தொடர்ந்து பார்ப்போம்.

இந்திய சந்தையில் 150சிசி மோட்டார்சைக்கிள்கள் பிரிவில் ஹோண்டா பிராண்டில் இருந்து பெரியதாக சொல்லி கொள்ளும் அளவிற்கு ஸ்டைலிஷான எந்த மாடலும் தற்சமயம் இல்லை. முன்பு இந்த ஜப்பானிய பிராண்டில் இருந்து இந்த பிரிவில் சிபிஆர்150ஆர் பைக் விற்பனையில் இருந்தது. ஆனால் இதன் விற்பனையை சில வருடங்களுக்கு முன்பு ஹோண்டா நிறுத்தியது.

இந்த நிலையில் தற்போது மீண்டும் இந்த பந்தய-கள பைக்கை இந்தியாவிற்கு கொண்டுவரும் திட்டத்தில் ஹோண்டா இறங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதனை உறுதிப்படுத்தும் வகையிலேயே தற்போது இந்த பைக்கின் டிசைனை ஹோண்டா பதிவு செய்துக்கொண்டுள்ளதாக காப்புரிமை படம் ஒன்று இணையத்தில் கசிந்துள்ளது. அந்த படத்தினை கீழே காணலாம்.

இந்தோனிஷியா உள்ளிட்ட தென்கிழக்கு ஆசிய சந்தைகளில் பிரபலமானதாக விளங்கும் இந்த ஹோண்டா ஸ்போர்ட்ஸ் பைக்கிற்கு விற்பனையில் யமஹாவின் ஆர்15 முக்கிய போட்டி மாடலாக விளங்குகிறது. ஹோண்டா சிபிஆர்150ஆர் ஆனது கூர்மையான லைன்களுடன் முன்பக்கத்தை கொண்ட ஒரு பக்கா மினி ஸ்போர்ட் பைக்காகும்.

முன்பக்க லைன்கள் பெட்ரோல் டேங்கின் பக்கவாட்டிற்கும் வழங்கப்படும் அதேநேரம் பைக்கின் பின்பக்க முனையானது மேல்நோக்கியவாறு வடிவமைக்கப்படுகிறது. ஹோண்டா ரேசிங் முத்திரை உடன் சிபிஆர்150ஆர் -இன் பக்கவாட்டு பேனல்கள் மிக நேர்த்தியாக ஒருங்கிணைக்கப்படுவதை இந்த படங்களில் பைக்கின் தோற்றத்தை பார்க்கும்போதே தெரிந்திருக்கும்.

முன்பக்கத்தில் எல்இடி டிஆர்எல்-களுடன் இரட்டை எல்இடி ஹெட்லேம்ப்களை பெறுகின்ற இந்த பைக்கில் ஹெட்லேம்ப் அமைப்பிற்கு மேலே சிறிய அளவிலான எதிர்காற்று தடுப்பு கண்ணாடி பொருத்தப்படுகிறது. அத்துடன் ஸ்போர்ட்ஸ் பைக்கிற்கான பண்பிற்கு ஏற்ப அகலமான ஹேண்டில்பார் சற்று தாழ்வாக இதில் பொருத்தப்படுகிறது. இவற்றுடன் முழு-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல் இந்த பைக்கில் வழங்கப்படுகிறது.

இருக்கை அமைப்பை படிக்கட்டு வடிவில் பெறும் சிபிஆர்150ஆர் பைக்கிற்கு சர்வதேச சந்தைகளில் விக்ட்ரி கருப்பு சிவப்பு, ஹோண்டா ரேசிங் சிவப்பு, ஆதிக்க மேட் கருப்பு, இளம் கேண்டி சிவப்பு என்கிற நிறத்தேர்வுகள் வழங்கப்படுகின்றன. அத்துடன் மோட்டோஜிபி எடிசனிலும் இந்த ஹோண்டா பந்தய பைக் வெளிநாட்டு சந்தைகளில் கிடைக்கிறது. ஆனால் இந்தியாவில் இவை இல்லாமல் புதுமையான நிறத்தேர்வுகள் இந்த பைக்கிற்கு வழங்கப்படும் என எதிர்பார்க்கிறோம்.

தொழிற்நுட்ப அம்சங்களை பொறுத்தவரையில், எல்இடி விளக்குகள் மற்றும் நெகட்டிவ் எல்சிடி இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் உள்ளிட்டவற்றை ஹோண்டா சிபிஆர்150ஆர் மோட்டார்சைக்கிள் பெறுகிறது. இந்த ஸ்போர்ட்ஸ் பைக்கில் 149.2சிசி, சிங்கிள்-சிலிண்டர், லிக்யுடு-கூல்டு என்ஜின் பொருத்தப்படுகிறது. இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 17.1 எச்பி மற்றும் 14.4 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது.

அதுவே யமஹா ஆர்15 வி4 பைக்கில் வழங்கப்படுகின்ற 155சிசி, லிக்யுடு-கூல்டு என்ஜின் அதிகப்பட்சமாக 18.4 எச்பி மற்றும் 14.2 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது. டைமண்ட் சட்டகத்தில் வடிவமைக்கப்படுகின்ற சிபிஆர்150ஆர் பைக்கில் சஸ்பென்ஷன் யூனிட்களாக முன்பக்கத்தில் யுஎஸ்டி ஃபோர்க்கும், பின்பக்கத்தில் மோனோஷாக்கும் வழங்கப்படுகின்றன.

இதில் முன்பக்க யுஎஸ்டி ஃபோர்க் பைக்கில் இருந்து தனித்து தெரியும் வகையில் தங்க நிறத்தில் பெயிண்ட் செய்யப்படுகிறது. பிரேக்கிங் பணியை கவனிக்க இருசக்கரங்களிலும் ஒற்றை டிஸ்க் பொருத்தப்படுகிறது. இவற்றுடன் பயணிகளின் கூடுதல் பாதுகாப்பிற்கு ஏபிஎஸ் மற்றும் அவசரகால ஸ்டாப் சிக்னலையும் (இஎஸ்எஸ்) சிபிஆர்150ஆர் பெறுகிறது.

பரிமாண அளவுகளை பொறுத்தவரையில், ஹோண்டா சிபிஆர்150ஆர் பைக்கும், யமஹா ஆர்15 வி4 பைக்கும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாகவே உள்ளன. ஆனால் இதில் யமஹாவின் மாடல் ஆசிய நாட்டு சந்தைகளில் மிக பிரபலமானதாக இருப்பதை கூறியே ஆக வேண்டும். சிபிஆர்150ஆர் பைக்கின் டிசைனிற்கான காப்புரிமையை இந்தியாவில் ஹோண்டா பதிவு செய்துள்ள போதிலும், இந்த 150சிசி ஸ்போர்ட்ஸ் பைக் எப்போது இந்தியாவிற்கு கொண்டுவரப்படும் என்பது தற்சமயம் கேள்வியாகவே உள்ளது.

ஹோண்டா சிபிஆர்150ஆர் பைக்கின் அட்வென்ச்சர் வெர்சனாக சிபி150எக்ஸ் விளங்குகிறது. இதுவும் இந்தியாவில் விற்பனையில் இல்லாவிடினும், சில ஆசிய நாடுகளில் சந்தைப்படுத்தப்பட்டு வருகிறது. இதன் 2022 வெர்சன் சமீபத்தில்தான் இந்தோனிஷிய நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டது இங்கு குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








