நடுத்தர மக்கள் வாங்க கூடிய பைக்குகளின் விலையை உயர்த்திய ஹோண்டா... பைக் வாங்குற ஐடியாவே போய்டும்போல!
தினசரி பயன்பாட்டிற்கு பெரிதும் உதவும் இருசக்கர வாகன மாடல்களின் விலையை ஹோண்டா நிறுவனம் அதிரடியாக உயர்த்தியிருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் விபரங்களைக் கீழே உள்ள பதிவில் பார்க்கலாம், வாங்க.

முன்னணி இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமான ஹோண்டா, மிக சமீபத்தில் அதன் பிரபல பைக் மாடல் ஒன்றின் விலையை யாரும் எதிர்பார்த்திராத வகையில் பல மடங்கு குறைத்து அறிவிப்பு வெளியிட்டது. சிபிஆர் 1000ஆர்ஆர்-ஆர் ஃபையர்பிளேடு மாடலின் விலையையே நிறுவனம் குறைத்தது.

இந்த பைக் ரூ. 33 லட்சத்திற்கும் அதிகமான விலையில் நாட்டில் விற்பனைக்குக் கிடைத்து வந்தது. இந்த நிலையில், அதன் விலையில் பெரும்பகுதியாக ரூ. 10 லட்சம் வரை ஹோண்டா குறைத்தது. இதனால், சிபிஆர் 1000ஆர்ஆர்-ஆர் ஃபையர்பிளேடு பைக் தற்போது ரூ. 24.02 லட்சத்திற்கே விற்பனைக்குக் கிடைக்கும் சூழல் உருவாகியிருக்கின்றது. ஹோண்டாவின் இந்த செயல் அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

செல்வந்தர்கள் வாங்கக் கூடிய இருசக்கர வாகனத்தின் விலையையே இத்தனை மடங்கு ஹோண்டா குறைத்ததால், அது, ஏழை மற்றும் அடித்தட்டு மக்கள் வாங்கக் கூடிய கம்யூட்டர் பைக்குகளின் விலையையும் இதேபோல் குறைக்குமா என்கிற எதிர்பார்ப்பு பலரின் மத்தியில் எழும்பியது.

ஆனால், இந்த எதிர்பார்ப்பிற்கு ஆப்பு வைக்கின்ற வகையில் ஹோண்டா நிறுவனம் தற்போது செயலாற்றியிருக்கின்றது. ஆமாங்க, நிறுவனம் நடுத்தர மற்றும் எளிய மக்கள் பயன்படுத்தக் கூடிய கம்யூட்டர் பைக்குகளின் விலையை அதிரடியாக உயர்த்தியிருக்கின்றது.

ஹோண்டாவின் இந்த செயல் மக்கள் மத்தியில் "அட என்னங்க இப்புடி பண்ணீட்டீங்க" என கேட்க செய்யும் வகையில் அமைந்துள்ளது. ஏற்கனவே, நாட்டில் எரிபொருளின் விலை ஜெட் வேகத்தில் உயர்ந்துக் கொண்டிருக்கின்றது. இந்த மாதிரியான இது வேறையா எனவும் மக்களை ஹோண்டாவின் இந்த செயல் முனுமுனுக்க செய்துள்ளது.

ஹோண்டா நிறுவனம், இந்த விலையுயர்விற்கு சமீப காலமாக உயர்ந்து வரும் வாகன கட்டுமான பொருட்களின் விலையுயர்வையே காரணமாக கை காட்டியுள்ளது. கடந்த சில மாதங்களாகவே வாகன உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கும் மூலக் கூறுகளின் விலை தொடர்ச்சியாக அதிகரித்த வண்ணம் இருக்கின்றது.

இதனால் ஏற்படும் செலவை சமாளிக்கும் பொருட்டு வாகன உற்பத்தியாளர்கள் அவ்வப்போது வாகனங்களின் விலையை உயர்த்தி வருகின்றன. இந்த மாதிரியான ஓர் நடவடிக்கையையே தற்போது ஹோண்டாவும் கையாண்டுள்ளது. நிறுவனத்தின் கம்யூட்டர் வாகன பிரிவில் விற்பனைக்குக் கிடைக்கும் நான்கு முக்கிய மாடல்களின் விலையே உயர்த்தப்பட்டுள்ளது.

சிடி110 ட்ரீம், ஷைன், லைவ் மற்றும் எஸ்பி125 ஆகிய இருசக்கர வாகன மாடல்களின் விலையே தற்போது உயர்த்தப்பட்டிருக்கின்றது. இதனால் முன்னதாக ரூ. 68,487-க்கு கிடைத்து வந்த சிடி100 ட்ரீம் டீலக்ஸ் தற்போது ரூ. 69,251 ஆக உயர்ந்துள்ளது. இது முன்பை விட 764 ரூபாய் அதிகம் ஆகும்.

இதேபோல் பிற இருசக்கர வாகன மாடல்களின் விலையிலும் கணிசமான தொகை உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலையுயர்வானது இந்த மாதத் தொடக்கத்தில் இருந்த அமலுக்கு வந்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விலையுயர்வின் காரணத்தினால் கூடுதல் சிறப்பு வசதிகள் ஏதாச்சும் வழங்கப்படுமா என எதிர்பார்க்க வேண்டாம்.

நிறுவனம் எந்தவொரு அப்டேட்டுகளையும் விலையுயர்வுக்காக வழங்கவில்லை. முன்பு கிடைத்த அதே அம்சங்களுடனேயே கூடுதல் விலையுடன் அவை விற்பனைக்குக் கிடைக்கும். விலை உயர்வு குறித்த முழுமையான தகவலைப் பட்டியாலகக் கீழே பார்க்கலாம்.
| விலை உயர்த்தப்பட்ட பைக் மாடல்கள் | புதிய விலை | பழை விலை |
| CD110 Dream Deluxe | ₹69,251 | ₹68,487 |
| Livo Drum | ₹73,938 | ₹73,174 |
| Livo Disc | ₹77,938 | ₹77,174 |
| Shine Drum | ₹76,314 | ₹74,943 |
| Shine Disc | ₹80,314 | ₹79,343 |
| SP125 Drum | ₹81,407 | ₹80,587 |
| SP125 Disc | ₹85,407 | ₹84,588 |


Click it and Unblock the Notifications








