இந்த வண்டியை எல்லாம் இந்தியா கொண்டு வர மாட்டீங்களே.. ஐரோப்பாவிற்காக ஹோண்டா தயாரித்திருக்கும் சூப்பரான இ-மொபட்!
ஹோண்டா நிறுவனம் பிரத்யேகமாக ஐரோப்பிய சந்தைக்காக உருவாக்கியிருக்கும் இஎம்1 (Honda EM1) எலெக்ட்ரிக் மொபட் பற்றிய விரிவான தகவலைக் கீழே உள்ள பதிவில் பார்க்கலாம், வாங்க.

2022 இஐசிஎம்ஏ (EICMA) வாகன கண்காட்சி இத்தாலி நாட்டின் மிலன் பகுதியில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இதில் உலகளவிலான வாகன உற்பத்தியாளர்கள் பங்கேற்று தங்களது புதுமுக வாகனங்களை காட்சிப்படுத்தி வருகின்றனர். அந்தவகையில், நம் தமிழகத்தைச் சேர்ந்த ராயல் என்பீல்டு நிறுவனம் அதன் பெரிதும் எதிர்பார்க்கப்படும் சூப்பர் மீட்டியோர் 650 பைக்கை முதல் முறையாக காட்சிப்படுத்தியது.

விரைவில் இந்த பைக்கை உலகளவில் விற்பனைக்குக் கொண்டு வர இருப்பதை முன்னிட்டு இஐசிஎம்ஏ-வில் இப்பைக்கை வெளியீடு செய்தது. இதேபோல் இன்னும் பல நிறுவனங்கள் தங்களின் புதுமுக மற்றும் எதிர்கால தயாரிப்புகளை இந்த கண்காட்சியில் வெளியீடு செய்து வருகின்றனர். அந்தவகையில், இஐசிஎம்ஏ கண்காட்சியில் இணைந்திருக்கும் உலக புகழ்பெற்ற ஹோண்டா நிறுவனமும் அதன் எதிர்கால தயாரிப்புகளில் ஒன்றான இஎம்1 (Honda EM1) எனும் இருசக்கர வாகனத்தைக் காட்சிப்படுத்தியிருக்கின்றது.

இது ஓர் எலெக்ட்ரிக் மொபட் (electric moped) ரக வாகனமாகும். இதைக்குறிக்கும் வகையிலேயே பெயரில், 'EM' என சேர்க்கப்பட்டுள்ளது. நிறுவனம் வெகுவிரைவில் உலகளவில் 10 புதுமுக மின்சார இருசக்கர வாகனங்களை அறிமுகம் செய்ய இருக்கின்றது. 2025ம் ஆண்டிற்கு இந்த இலக்கை அடைய நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இந்த மாதிரியான சூழலிலேயே ஹோண்டா நிறுவனம் அதன் அட்டகாசமான இஎம்1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலை வாகன கண்காட்சியின் வாயிலாக இந்த உலகிற்கு அறிமுகம் செய்திருக்கின்றது. பிரத்யேகமாக இந்த வாகனத்தை ஐரோப்பிய சந்தைக்காக ஹோண்டா தயாரித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆகையால், முதலில் ஐரோப்பாவிலேயே இந்த வாகனம் விற்பனைக்குக் கொண்டு வரப்பட இருக்கின்றது. இதற்கு பின்னர் வேண்டுமானால் உலக நாடுகள் பிறவற்றில் இந்த வாகனம் விற்பனைக்குக் கொண்டு வரப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்தவகையில், இந்தியாவில் இந்த மின்சார டூ-வீலர் விற்பனைக்கு வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

தற்போது இந்திய சந்தையில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு நல்ல வரேவற்புக் கிடைத்துக் கொண்டிருப்பது குறிப்பிடத்தகுந்தது. இதை வைத்தே இந்தியாவில் ஹோண்டா நிறுவனம் இவ்வாகனத்தை விற்பனைக்குக் கொண்டு வரலாம் என கருதப்படுகின்றது. அதேவேலையில், இதன் வருகை குறித்த எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவலையும் நிறுவனம் இதுவரை வெளியிடவில்லை என்பது கவனிக்கத்தகுந்தது.

ஹோண்டா நிறுவனம் இந்த மின்சார வாகனத்தை இளம் தலைமுறையினரைக் கவரும் பொருட்டு உருவாக்கியிருக்கின்றது. அதாவது, காம்பேக்ட்டான (அடக்கமான) தோற்றத்தில் இவ்வாகனத்தை ஹோண்டா உருவாக்கியிருக்கின்றது. மேலும், இலகுவான எடையிலும் இவ்வாகனத்தைக் கட்டமைத்திருக்கின்றது. போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலைகளில் சுலபமான இயக்க அனுபவத்தை இவ்வாகனம் வழங்க வேண்டும் என்பதற்காக இந்த மாதிரியான யுக்திகளை ஹோண்டா கையாண்டிருக்கின்றது.

சதுரமான பெட்டி போன்ற அமைப்பில் இருசக்கர வாகனம் காட்சியளிப்பதை நம்மால் காண முடிகின்றது. கச்சிதமான தோற்றத்தில் இந்த வாகனம் உருவாக்கப்பட்டிருந்தாலும், சிறப்பம்சங்களை அதில் வாரி வழங்க ஹோண்டா தயங்கவில்லை என்பது தெளிவாகத் தெரிகின்றது. பெரிய கால் வைக்கும் இடம், பெரிய மற்றும் அகலமான இருக்கை மற்றும் பொருட்களை ஏற்றி செல்ல ஏதுவாக கேரியர் செட்-அப் உள்ளிட்டவை இஎம்1 எலெக்ட்ரிக் மொபட்டில் வழங்கப்பட்டிருக்கின்றது.

தினசரி பயன்பாட்டைக் கருத்தில் கொண்டு இவ்வாகனம் உருவாக்கப்பட்டிருப்பதால் இதில் மிக சிறிய பேட்டரி பேக்கையே ஹோண்டா பயன்படுத்தியிருக்கின்றது. ஓர் முழு சார்ஜில் 40 கிமீ ரேஞ்ஜ் மட்டுமே வழங்கக் கூடிய சிறிய பேட்டரி பேக்கே இஎம்1 இ-மொபட்டில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இதேபோல் மிக மிகக் குறைவான வேகத்தில் பயணிக்கக் கூடிய மின்சார மோட்டாரே இவ்வாகனத்தில் பயன்படுத்தப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அனைத்தும் தினசரி பயன்பாட்டைக் கருத்தில் கொண்டே இந்த வாகனத்தில் வழங்கப்பட்டுள்ளது. சிறிய பேட்டரி பேக் பயன்படுத்தப்பட்டிருப்பதால் இதன் விலையும் குறைவானதாக இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்னும் ஒரு சில மாதங்களில் இவ்வாகனத்தை நிறுவனம் உலக சந்தையில் விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது.


Click it and Unblock the Notifications








