ஹாப் ஆக்ஸோ எலெக்ட்ரிக் பைக்கிற்கு குவியும் புக்கிங்... இன்னும் லான்ச்கூட ஆகல அதுக்குள்ள வரவேற்பு அள்ளுது!
ஹாப் ஆக்ஸோ எலெக்ட்ரிக் பைக் (HOP OXO Electric Motorcycle)-கிற்கு புக்கிங் குவிந்து வரும் நிலையில் முன்பதிவு பணிகளை நிறுவனம் தற்காலிகமாக நிறுத்தியிருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் விபரங்களைக் கீழே உள்ள பதிவில் பார்க்கலாம், வாங்க.

புதுமுக மின்வாகன உற்பத்தி நிறுவனமான ஹாப் எலெக்ட்ரிக் மொபிலிட்டி (HOP Electric Mobility), இந்திய மின்சார இருசக்கர வாகன சந்தையில் ஏற்கனவே இரு எலெக்ட்ரிக் டூ-வீலர்களை விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. ஹாப் லியோ (Hop Leo) மற்றும் ஹாப் லைஃப் (Hop Lyf) ஆகிய இரு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ரக வாகனங்களையே விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது.

இவற்றின் வரிசையிலேயே நிறுவனம் ஓர் புதுமுக இருசக்கர வாகனத்தை சேர்க்க இருக்கின்றது. அதாவது, நிறுவனம் விரைவில் விற்பனைக்குக் களமிறக்க இருக்கின்றது. ஆக்ஸோ (OXO) எனும் பைக் ரக எலெக்ட்ரிக் வாகனத்தையே நிறுவனம் விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது. இந்த வாகனத்தின் வருகையை முன்னிட்டு சமீபத்தில் இதற்கான ப்ரீ புக்கிங்கை தொடங்கி வைத்தது ஹாப் நிறுவனம்.

இந்த பணிகளையே தற்போது தற்காலிக நிறுவனம் நிறுத்தி வைத்திருக்கின்றது. மக்கள் பலர் இந்த இருசக்கர வாகனத்தை ப்ரீ புக் செய்ய குவிந்துக் கொண்டிருக்கின்ற வேலையிலேயே புக்கிங் பணிகளை நிறுவனம் நிறுத்தியிருக்கின்றது. அதிகளவில் புக்கிங் குவிந்துக் கொண்டிருப்பதைக் காரணம் காட்டியே நிறுவனம் இந்த முடிவை எடுத்திருக்கின்றது.

நிறுவனம் இந்த எலெக்ட்ரிக் பைக்கை இன்னும் அதிகாரப்பூர்வமாக லான்ச் செய்யவில்லை. இதற்கு கூடுதல் சில காலங்கள் ஆகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையிலேயே 5 ஆயிரம் புக்கிங்குகள் குவிந்துவிட்டதாக நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கின்றது. இது நிறுவனம் எதிர்பார்த்திராத மிக அதிக எண்ணிக்கையிலான புக்கிங் ஆகும்.

இந்த நிலை காத்திருப்பு காலத்தை பல மடங்கு அதிகரிக்கச் செய்யும் என்கிற காரணத்தினாலேயே தற்போது புக்கிங் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தற்போது எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் சுமார் 1 லட்சம் கிமீ வரை ஓட்டி பார்க்கப்பட்டு சோதனைக்கு உட்படுத்தப்பட்டிருக்கின்றது. இந்தியாவின் பன்முக நிலபரப்பைக் கொண்ட பகுதிகளில் இவ்வாகனம் சோதனையோட்டம் செய்யப்பட்டிருக்கின்றது.

இதுகுறித்து நிறுவனத்தின் முதன்மை மார்க்கெட்டிங் அலுவலர் ரஜ்னீஷ் சிங் தெரிவித்திருப்பதாவது, "ஹாப் ஆக்ஸோ எலெக்ட்ரிக் பைக் இதுவரை 20க்கும் மேற்பட்ட மாநிலங்களில் சோதனையோட்டம் செய்யப்பட்டிருக்கின்றது. வெகு விரைவில் அது ஷோரூம்களில் காட்சியளிக்க உள்ளது. இப்பைக் ஆண்டுக்கு 50 ஆயிரம் யூனிட்டுகள் வரை விற்பனையாகும் என நாங்கள் எதிர்பார்க்கின்றோம்" என்றார்.

தற்போது நிறுவனத்தின்கீழ் 140 விற்பனை மையங்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. இதன் வாயிலாக விரைவில் ஹாப் ஆக்ஸோ விற்பனைக்குக் கொண்டு வரப்பட இருக்கின்றது. இதன் வருகையை முன்னிட்டு நிறுவனம் விரைவில் இன்னும் சில புதிய விற்பனையகங்களை திறக்க ஹாப் திட்டமிட்டிருக்கின்றது.

அதேநேரத்தில் ஏற்கனவே இந்த பணியில் நிறுவனம் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது. கடந்த ஆறு மாதங்களில் மட்டும் நிறுவனம் 60க்கும் மேற்பட்ட விற்பனையகங்களைத் திறந்திருப்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த பைக்கைத் தொடர்ந்து நிறுவனம் வெகு விரைவில் இன்னும் சில புதுமுக எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்களை விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கின்றது.

மணிக்கு 100 கிமீ வேகம் மற்றும் முழு சார்ஜில் 150 கிமீ ரேஞ்ஜ் ஆகிய திறன்களுடனேயே ஹாப் ஆக்ஸோ எலெக்ட்ரிக் பைக் விற்பனைக்கு எதிர்பார்க்கப்ப்டுகின்றது. ஆகையால், இந்த பைக்கின் மீதான எதிர்பார்ப்பு இந்தியர்கள் மத்தியில் அதிகரித்துக் காணப்படுகின்றது. இந்த எதிர்பார்ப்பை கூட்டும் வகையில் நிறுவனம் அவ்வப்போது பைக் பற்றிய டீசர் படத்தை வெளியிட்டு வருகின்றது.

இந்தியாவில் மின் வாகனங்களுக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. குறிப்பாக இருசக்கர வாகனங்களுக்கு மிக சூப்பரான டிமாண்ட் நிலவி வருகின்றது. இந்த நிலையிலேயே இந்தியர்களின் தேடலுக்கு விடைக் கொடுக்கும் விதமாக சூப்பரான தயாரிப்பாக ஹாப் நிறுவனம் அதன் ஆக்ஸோ எலெக்ட்ரிக் பைக்கை விரைவில் விற்பனைக்கு வழங்க இருக்கின்றது. இது ஏற்கனவே இந்திய சந்தையில் விற்பனைக்கு இருக்கும் ரிவோல்ட் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் பைக்கிற்கு போட்டியாக விற்பனைக்கு வர இருக்கின்றது.


Click it and Unblock the Notifications








