இந்தியாவின் முதல் க்ரூஸர் இ-பைக்கின் விலையை அறிவிச்சுட்டாங்க... சீக்கிரமே புக்கிங்கும் தொடங்க போறாங்களாம்!
இக்னைட்ரான் மோட்டோகார்ப் (Ignitron Motocorp) நிறுவனம் அதன் சைபோர்க் (CYBORG) பிராண்டில் மிக விரைவில் விற்பனைக்கு வர இருக்கும் அனைத்து எலெக்ட்ரிக் பைக்குகளின் விலையையும் வெளியிட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

இந்தியாவை மையமாகக் கொண்டு மின்வாகன உற்பத்தி பணிகளை மேற்கொண்டு வரும் நிறுவனங்களில் இக்னைட்ரான் மோட்டோகார்ப் (Ignitron Motocorp)-ம் ஒன்று. இந்நிறுவனம் மிக விரைவில் சைபோர்க் (CYBORG) எனும் பிராண்டின் கீழ் யோடா (CYBORG Yoda), ஜிடி120 (CYBORG GT 120) மற்றும் பாப்-இ (CYBORG Bob-e) ஆகிய மூன்று புதுமுக மின்சார மோட்டார்சைக்கிள்களை நாட்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கின்றது.

இந்த நிலையிலேயே வாடிக்கையாளர்களின் கவனத்தை திசை திருப்பும் வகையில், அதாவது, தங்களின் பக்கம் மின் வாகன பிரியர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில், நிறுவனம் அதன் அனைத்து மின்சார மோட்டார்சைக்கிள்களின் விலையையும் இன்று (மார்ச் 4) வெளியீடு செய்திருக்கின்றது. சைபோர்க் யோடா மின்சார மோட்டார்சைக்கிளுக்கு ரூ. 1,84,999 என்ற விலையை அது நிர்ணயித்துள்ளது.

இதேபோல், ஜிடி 120 மாடலுக்கு 1,64,999 ரூபாயும், பாப்-இ மாடலுக்கு 1,14,999 ரூபாயும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்தியாவின் பல்வேறு மாநில அரசுகள் மின் வாகன பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில், அவற்றிற்கு மானியம் வழங்கி வருகின்றன. ஆகையால், அந்தந்த மாநில அரசுகளின் சலுகைகளைப் பொருத்து தங்களின் மின்சார மோட்டார்சைக்கிள்கள் இன்னும் குறைவான விலையில் விற்பனைக்குக் கிடைக்கும் என இக்னைட்ரான் தெரிவித்துள்ளது.

தொடர்ந்து, மிக விரைவில் தங்கள் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலை தளப்பக்கத்தின் வாயிலாக அனைத்து புதுமுக மின்சார மோட்டார் சைக்கிள்களுக்கும் புக்கிங் பணிகளைத் தொடங்க இருப்பதாகவும் நிறுவனம் அறிவித்துள்ளது. ஆகையால், இதுகுறித்த அறிவிப்பு மிக மிக விரைவில் எதிர்பார்க்கலாம். நிறுவனத்தின் இந்த தகவல் மின் வாகன பிரியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது.

நிறுவனத்தின் மின்சார மோட்டார்சைக்கிள் அனைத்தும் பிரீமியம் தரத்திலானவை என கூறப்படுகின்றது. மேலும், புதுவிதமான ரைடிங் அனுபவத்தை வழங்கும் வகையிலும் அவை வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. சிறப்பம்சங்கள், கவர்ச்சியான தோற்றம் மற்றும் தொழில்நுட்பம் ஆகிய அனைத்திலும்கூட அவை மிக சிறப்பானதாக காட்சியளிக்கின்றன. ஏஐ (AI) தொழில்நுட்பம் மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் பலவும் இந்த மின்சார மோட்டார்சைக்கிள்களில் இடம் பெற்றிருக்கின்றன.

இந்த மூன்று மின்சார பைக்குகள் பற்றிய முழுமையான விபரத்தை பட்டியலாகக் கீழே காணலாம் வாங்க.

யோடா:
யோடா, இது இந்தியாவின் முதல் எலெக்ட்ரிக் க்ரூஸர் பைக்காகும். இந்த பைக்கில் 3.24 kWH லித்தியம் அயன் பேட்டரி பேக் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 150 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 90 கிமீ ஆகும். இரு விதமான நிற வேரியண்டுகளில் இது விற்பனைக்குக் கிடைக்கும்.

பாப்-இ
பாப்-இ ஓர் இந்தியாவின் முதல் காம்பேக்ட் ஸ்போர்ட்டி தோற்றம் கொண்ட மின்சார மோட்டார்சைக்கிள் ஆகும். இதில் சிறப்பு தொழில்நுட்ப வசதியாக ஏஐ அம்சம் கொடுக்கப்பட்டுள்ளது. 2.88 kWH லித்தியம் அயன் பேட்டரி பேக் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதனை முழுமையாக சார்ஜ் செய்தால் அதிகபட்சமாக 110 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். மேலும், இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 85 கிமீ ஆகும். கருப்பு மற்றும் சிவப்பு என இரு விதமான நிற தேர்வில் இது விற்பனைக்குக் கிடைக்க இருக்கின்றது.

ஜிடி120
ஸ்போர்ட்ஸ் வாகனத்தைப் போல் காட்சியளிக்கும் இந்த மின்சார பைக்கில் இக்னைட்ரான் மோட்டோகார்ப் நிறுவனம் 4.68 kWH லித்தியம் அயன் பேட்டரி பேக்கை பயன்படுத்தியுள்ளது. இதனை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 180 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். மேலும், இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 125 கிமீட்டராக இருக்கின்றது. இதன் வாயிலாக ஜிடி 120 எலெக்ட்ரிக் தோற்றத்தில் மட்டுமல்ல திறன் வெளிப்பாட்டிலும் ஸ்போர்ட்ஸ் பைக்கிற்கு இணையானதாக இருக்கும் என்பது தெரிகின்றது.


Click it and Unblock the Notifications








