விரைவில் விற்பனைக்கு வருகிறது ராயல் என்பீல்டு ஹண்டர் 350... நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்!
ராயல் என்பீல்டு நிறுவனத்தின் ஹண்டர் 350 பைக் வெகு விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்திய சந்தையில் பல்வேறு புதிய பைக்குகளை விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ராயல் என்பீல்டு நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. 350 சிசி, 450 சிசி மற்றும் 650 சிசி பைக்குகளை ராயல் என்பீல்டு நிறுவனம் தற்போது இந்திய சாலைகளில் சோதனை செய்து கொண்டுள்ளது. அப்போது எடுக்கப்பட்ட ஏராளமான ஸ்பை படங்கள் ஏற்கனவே இணையத்தில் வெளியாகியுள்ளன.

இந்தியாவின் 350 சிசி செக்மெண்ட்டில் ராயல் என்பீல்டு நிறுவனம் ஏற்கனவே பல்வேறு பைக்குகளை விற்பனை செய்து வருகிறது. கிளாசிக் 350, மீட்டியோர் 350, புல்லட் 350 மற்றும் எலெக்ட்ரா 350 ஆகிய பைக்குகளை இதற்கு உதாரணமாக சொல்ல முடியும். இந்த வரிசையில் வெகு விரைவில் ஹண்டர் 350 பைக் இணையவுள்ளது.

ஆம், ராயல் என்பீல்டு நிறுவனம் தனது தயாரிப்புகளின் விரிவாக்க திட்டத்தில் அடுத்ததாக ஹண்டர் 350 பைக்கைதான் விற்பனைக்கு அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. ராயல் என்பீல்டு நிறுவனத்தின் கிளாசிக் 350 மற்றும் மீட்டியோர் 350 பைக்குகளுக்கு இடையே ஏராளமான ஒற்றுமைகள் இருக்கின்றன. சேஸிஸ், பவர்ட்ரெயின் போன்றவற்றை இதற்கு உதாரணமாக சொல்ல முடியும்.

விரைவில் விற்பனைக்கு வரவுள்ள ஹண்டர் 350 பைக்கிற்கும் இதே ஃபார்முலாதான் பின்பற்றப்படவுள்ளது. ராயல் என்பீல்டு கிளாசிக் 350 மற்றும் மீட்டியோர் 350 பைக்குகளில் பொருத்தப்பட்டுள்ள அதே 349 சிசி, சிங்கிள்-சிலிண்டர் ஏர் மற்றும் ஆயில் கூல்டு ஃப்யூயல்-இன்ஜெக்டட் ஓஹெச்சி ஜே-சீரிஸ் இன்ஜின்தான் ராயல் என்பீல்டு ஹண்டர் 350 பைக்கிலும் வழங்கப்படவுள்ளது.

இந்த இன்ஜின் அதிகபட்சமாக 20 ஹெச்பி பவரையும், 27 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் வகையில் ட்யூனிங் செய்யப்பட்டிருக்கும். இந்த இன்ஜினுடன் 5 ஸ்பீடு கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டிருக்கும். வாடிக்கையாளர்கள் மத்தியில் ராயல் என்பீல்டு ஹண்டர் 350 பைக் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

அனேகமாக அடுத்த மாத இறுதியில் ராயல் என்பீல்டு நிறுவனம் புதிய ஹண்டர் 350 பைக்கை இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய சந்தையில் 1.80 லட்ச ரூபாய் என்ற விலையில் ராயல் என்பீல்டு ஹண்டர் 350 பைக் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது எதிர்பார்க்கப்படும் எக்ஸ் ஷோரூம் விலை என்பது குறிப்பிடத்தக்கது.

விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் நாளில்தான் அதிகாரப்பூர்வமான விலை அறிவிக்கப்படும். ராயல் என்பீல்டு ஹண்டர் 350 பைக்கின் முன் பகுதியில் வட்ட வடிவ ஹாலோஜன் ஹெட்லேம்ப் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. டர்ன் சிக்னல் இன்டிகேட்டர்களிலும் ஹாலோஜன் பல்புகள்தான் வழங்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனால் இந்த பைக்கின் பின் பகுதியில் வட்ட வடிவ எல்இடி ஹெட்லேம்ப் இடம்பெற்றிருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அத்துடன் ராயல் என்பீல்டு ஹண்டர் 350 பைக்கின் முன் மற்றும் பின் பகுதிகளில், டிஸ்க் பிரேக்குகள் வழங்கப்பட்டிருக்கும் எனவும் கூறப்படுகிறது. இதுதவிர ட்யூயல் சேனல் ஏபிஎஸ் வசதியும் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் ட்ரிப்பர் நேவிகேஷன் வசதியுடன் செமி-டிஜிட்டல் ட்யூயல்-போட் இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல் வழங்கப்படுவதற்கான வாய்ப்புகளும் இருக்கின்றன. ஹண்டர் 350 தவிர, ஹார்டுகோர் ஹிமாலயன் 450, புதிய தலைமுறை புல்லட் 350, சிங்கிள்-சீட்டர் கிளாசிக் 350, சூப்பர் மீட்டியோர் 650 க்ரூஸர் மற்றும் ஷூட்கன் 650 பாபர் ஆகிய பைக்குகளை விற்பனைக்கு அறிமுகம் செய்யும் பணிகளிலும் ராயல் என்பீல்டு நிறுவனம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

எனவே ராயல் என்பீல்டு நிறுவனத்திடம் இருந்து அடுத்தடுத்து பல்வேறு புதிய தயாரிப்புகளை விற்பனைக்கு எதிர்பார்க்கலாம். இந்த அனைத்து புதிய பைக்குகளுமே வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளன. எனவே சரியான விலை நிர்ணயம் செய்யப்பட்டால், அவை வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறுவதற்கான வாய்ப்புகள் மிகவும் பிரகாசமாக இருக்கின்றன.
Note: Images used are for representational purpose only.


Click it and Unblock the Notifications








