அடேங்கப்பா.. 2,963 சதவீதம் விற்பனை வளர்ச்சியா... வாயை பிளக்க வைத்த எலெக்ட்ரிக் வாகன உற்பத்தி நிறுவனம்!
இந்தியாவில் மின் வாகனங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருவது அனைவரும் ஒன்றே. ஆனால், இந்தளவிற்கு வரவேற்பா என அனைவரையும் வாயை பிளக்க வைக்கும் வகையில் ஓர் நிறுவனம் பன் மடங்கு அதிக விற்பனை வளர்ச்சியைப் பெற்றிருக்கின்றது. 2,963 சதவீதம் விற்பனை வளர்ச்சியையே ஓர் எலெக்ட்ரிக் வாகன உற்பத்தி நிறுவனம் பெற்றிருக்கின்றது. அது எந்த நிறுவனம் என்பது போன்ற பல்வேறு முக்கிய தகவல்களையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

இந்தியாவில் காற்று மாசுபாடு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. பெட்ரோல்-டீசல் வாகனங்களின் பயன்பாட்டால் இது நாளுக்கு நாள் புதிய உச்சத்தை எட்டி வருகின்றது. ஆகையால், காற்று மாசுபாட்டைக் குறைக்கும் பொருட்டு மத்திய, மாநில அரசுகள் ஐசிஇ எஞ்ஜின் கொண்ட (எரிபொருளால் இயங்கும்) வாகனங்களின் இயக்கத்தைக் குறைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றது.

இந்த நடவடிக்கையின் ஒரு பங்காக அரசுகள் மின் வாகன பயன்பாட்டை ஊக்குவித்து வருகின்றன. இவை சுற்றுச் சூழலுக்கு நண்பனாக செயல்படும். அதே நேரத்தில் குறைந்த பராமரிப்பு செலவில் அதிக லாபத்தை வழங்கும். இதுபோன்று பல்வேறு காரணங்களால் மக்கள் மத்தியில் மின் வாகனங்கள் பன் மடங்கு பிரபலமடைந்துக் காணப்படுகின்றது. மேலும், அரசும் அதன் சார்பில் மின் வாகனங்களை வாங்குவோரை கூடுதலாக ஊக்குவிக்கும் பொருட்டு மானியம் போன்ற சிறப்பு சலுகைகளை வழங்கி வருகின்றது.

எனவேதான் முன்பைக் காட்டிலும் தற்போது சாலையில் அதிகளவில் எலெக்ட்ரிக் வாகனங்களை நம்மால் காண முடிகின்றது. இதுவே நாட்டில் மின் வாகனங்களுக்கான வரவேற்பு அதிகரித்திருப்பதற்கான சான்றாகவும் அமைந்துள்ளது. இந்த நிலையில், எலெக்ட்ரிக் வாகன உற்பத்தி நிறுவனம் ஒன்று ஆயிரக் கணக்கில் விற்பனை வளர்ச்சியைப் பெற்றிருப்பதாக ஆச்சரியமளிக்கும் தகவல் வெளியாகியுள்ளது.

வார்ட் விசார்ட் இன்னோவேசன் மற்றும் மொபிலிட்டி லிமிடெட் (WardWizard Innovations and Mobility Ltd) நிறுவனமே மாபெரும் விற்பனை வளர்ச்சியைப் பெற்றிருக்கின்றது. இந்நிறுவனம் ஜாய் (Joy) எனும் பிராண்டில் எலெக்ட்ரிக் வாகனங்களை உற்பத்தி செய்து வருகின்றது. இவற்றை மட்டுமே முக்கிய இலக்காகக் கொண்டு அது இயங்கி வருகின்றது. இந்நிறுவனத்தின் தயாரிப்புகளே கடந்த 2021ம் ஆண்டு ஜனவரி மாதத்தைக் காட்டிலும் 2022 ஜனவரியில் அதிக எண்ணிக்கையில் எலெக்ட்ரிக் வாகனங்களை விற்பனையாகி இருக்கின்றது.

2022 ஜனவரியில் நிறுவனம் அதிகபட்சமாக 3,951 யூனிட் எலெக்ட்ரிக் வாகனங்களை விற்பனைச் செய்துள்ளது. அதுவே, 2021 ஜனவரி மாதத்தில் நிறுவனம் வெறும் 129 யூனிட் வாகனங்களை மட்டுமே விற்பனைச் செய்திருக்கின்றது. இதனுடன் ஒப்பிடுகையில் 2,963 சதவீதம் விற்பனை வளர்ச்சியை நடப்பாண்டு ஜனவரியில் ஜாய் நிறுவனம் பெற்றிருப்பது தெரிகின்றது.

இது மிக பெரிய வளர்ச்சியாகும். இதுமட்டுமில்லைங்க நிறுவனம் கடந்த ஆண்டில் ஒட்டுமொத்தமாக 21,327 யூனிட் எலெக்ட்ரிக் வாகனங்களை விற்பனை செய்திருக்கின்றது. இதனை நடப்பு நிதியாண்டு முடிவடைவதற்குள் 30 ஆயிரம் யூனிட்டுகளாக உயர்த்த ஜாய் நிறுவனம் திட்டமிட்டிருக்கின்றது. தங்களுக்கு கிடைத்திருக்கும் பாசிட்டிவான விற்பனை வளர்ச்சியை இன்னும் பல மடங்கு உயர்த்த நிறுவனம் திட்டமிட்டிருக்கின்றது.

நாட்டின் முன்னணி இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனங்கள் பல கடந்த ஜனவரியில் விற்பனை வீழ்ச்சியையேச் சந்தித்திருக்கின்றன. அதேவேலையில் ஒரு சில நிறுவனங்கள் மட்டும் கணிசமான விற்பனை வளர்ச்சியைப் பெற்றிருக்கின்றன. அதில், ஒன்றாக ஜாய் நிறுவனம் மாறியிருக்கின்றது. ஹீரோ மோட்டோகார்ப், ராயல் என்பீல்டு, ஹோண்டா உள்ளிட்ட நிறுவனங்களே விற்பனை வீழ்ச்சியைச் சந்தித்திருக்கும் முன்னணி நிறுவனங்கள் ஆகும்.

இவற்றில் இருந்து தனித்து நிற்கும் வகையில் சுசுகி மோட்டார்சைக்கிள் 8 சதவீத விற்பனை வளர்ச்சியைப் பெற்றிருக்கின்றது. இதுபோன்று ஒரு சில நிறுவனங்கள் மட்டுமே விற்பனை வளர்ச்சியைப் பெற்றிருக்கின்றது. அதுவும், மிகவும் குறைவான வளர்ச்சியையே அவை பெற்றிருக்கின்றன. இத்தகைய சூழ்நிலையிலேயே ஜாய் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் வாகனங்கள் 2,963 சதவீத விற்பனை வளர்ச்சியைப் பெற்றிருப்பதாக தகவல் வெளியாகி ஒட்டுமொத்த மின் வாகன சந்தையையுமே ஆச்சரியத்தில் மூழ்க வைத்திருக்கின்றது.

சிறப்பான விற்பனை வளர்ச்சி குறித்து வார்ட் விசார்ட் இன்னோவேசன்ஸ் மற்றும் மொபிலிட்டி நிறுவனத்தின் தலைமைச் செயல்பாட்டு அதிகாரி ஷீத்தல் பலேராவ் கூறியதாவது, "எங்கள் தற்போதைய சந்தை விரிவாக்க உத்திகளின் வெற்றியைக் கண்டு நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளோம். மேலும், எங்கள் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையைப் பெற்றதில் மகிழ்ச்சி அடைகிறோம்" என்றார்.

ஜாய் நிறுவனத்தின் புத்தம் புதிய தயாரிப்பாக உல்ஃப் ப்ளஸ் இருக்கின்றது. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 100 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். பெட்ரோல் ஸ்கூட்டரை காட்டிலும் இது பன்மடங்கு லாபம் வழங்கக் கூடியது என நிறுவனம் தெரிவித்துள்ளது. ஒரு கிமீ தூரத்திற்கு 20 பைசா மட்டுமே செலவாகும் என நிறுவனம் தெரிவித்துள்ளது. எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் 60V 35AH, லித்தியம் அயன் பேட்டரி பயன்படுத்தப்பட்டுள்ளது. கழட்டி மாட்டும் வசதிக் கொண்டது இதுவாகும். ஆகையால் எங்கு வேண்டுமானாலும் எடுத்துச் சென்று இ-ஸ்கூட்டரை நம்மால் சார்ஜ் செய்து கொள்ள முடியும்.


Click it and Unblock the Notifications








