ரொம்ப வருஷ எதிர்பார்ப்பு... இவ்ளோ கம்மியான விலையில் புதிய பைக்கை அறிமுகம் செய்ய போகுதா கவாஸாகி!
கவாஸாகி நிறுவனம் வரும் செப்டம்பர் 25ம் தேதி புதிய பைக்கை விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவில் வரும் செப்டம்பர் 25ம் தேதி (September 25) புத்தம் புதிய பைக் ஒன்றை விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கு கவாஸாகி (Kawasaki) நிறுவனம் தயாராகி வருகிறது. ஆனால் அதன் அடையாளம் இன்னும் வெளிப்படுத்தப்படவில்லை. அதாவது வரும் செப்டம்பர் 25ம் தேதி என்ன பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும்? என்பதை கவாஸாகி நிறுவனம் இன்னும் வெளிப்படையாக அறிவிக்கவில்லை.

இந்தியாவில் கவாஸாகி டபிள்யூ175 (Kawasaki W175) பைக் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என மிக நீண்ட காலமாகவே யூகங்கள் இருந்து வருகின்றன. எனவே வரும் செப்டம்பர் 25ம் தேதி ஒரு வழியாக கவாஸாகி டபிள்யூ175 பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த யூகங்களுக்கு பலம் சேர்க்கும் வகையில், இந்தியாவில் சாலை சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டபோது பல்வேறு முறை கவாஸாகி டபிள்யூ175 பைக் கேமராவின் கண்களில் சிக்கியுள்ளது. அப்போது எடுக்கப்பட்ட ஸ்பை படங்களும் இணையத்தை கலக்கியுள்ளன. அத்துடன் கடந்த 2021ம் ஆண்டே கவாஸாகி நிறுவனம் டபிள்யூ175 பைக்கை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யும் எனவும் எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் அது இன்னும் நடக்கவில்லை. எனவே வரும் செப்டம்பர் 25ம் தேதி இந்த பைக் இறுதியாக இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. டபிள்யூ175 பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டால், இதுதான் இந்திய சந்தையில் கவாஸாகி நிறுவனத்தின் மிகவும் விலை குறைவான பைக்காக இருக்கும்.

அனேகமாக கவாஸாகி டபிள்யூ175 பைக்கின் விலை வெறும் 1.8 லட்ச ரூபாய் (எக்ஸ் ஷோரூம்) என்ற அளவில் மட்டுமே இருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இது பார்ப்பதற்கு சற்று அதிகமான விலையாக தோன்றலாம். ஆனால் கவாஸாகி நிறுவனத்திடம் இருந்து இவ்வளவு குறைவான விலையில் ஒரு பைக் என்பது உண்மையிலேயே ஆச்சரியமான விஷயம்தான்.

கவாஸாகி டபிள்யூ175 பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டால் அந்த பைக்கில், 177 சிசி, சிங்கிள்-சிலிண்டர் இன்ஜின் பொருத்தப்பட்டிருக்கும். இந்த இன்ஜின் அதிகபட்சமாக 13 பிஎஸ் பவரையும், 13.2 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. டிரான்ஸ்மிஷனை பொறுத்தவரையில், இந்த இன்ஜினுடன் 5 ஸ்பீடு கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டிருக்கலாம்.

ஆனால் கவாஸாகி நிறுவனம் டபிள்யூ175 பைக்கை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளதை இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதிபடுத்தவில்லை. ஒருவேளை வரும் செப்டம்பர் 25ம் தேதி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுவது டபிள்யூ175 பைக்காக இல்லாவிட்டால், கவாஸாகி இஸட்400 ஸ்ட்ரீட்ஃபைட்டர் (Kawasaki Z400 Streetfighter) பைக்காக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது கவாஸாகி நின்ஜா 400 (Kawasaki Ninja 400) பைக்கை அடிப்படையாக கொண்டது ஆகும். ஒருவேளை கவாஸாகி நிறுவனம் இஸட்400 பைக்கை இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்தால் அந்த பைக், கேடிஎம் 390 ட்யூக் (KTM 390 Duke) மற்றும் பிஎம்டபிள்யூ ஜி310 ஆர் (BMW G310 R) போன்ற பைக்குகளுடன் போட்டியிடும்.

கவாஸாகி நிறுவனம் நடப்பாண்டு ஜூன் மாதம்தான், பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிமுறைகளுக்கு இணக்கமான நின்ஜா 400 பைக்கை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. இந்த பைக்கில், 399 சிசி பேரலல் ட்வின்-சிலிண்டர் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 10 ஆயிரம் ஆர்பிஎம்மில் 45 ஹெச்பி பவரையும், 8 ஆயிரம் ஆர்பிஎம்மில் 37 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது.

இந்த இன்ஜினுடன் 6 ஸ்பீடு கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. கவாஸாகி நின்ஜா 400 பைக் இந்திய சந்தைக்கு சமீபத்தில் மீண்டும் திரும்ப வந்திருப்பதால்தான், வரும் செப்டம்பர் 25ம் தேதி அறிமுகம் செய்யப்படவிருப்பது, அந்த பைக்கின் அடிப்படையிலான கவாஸாகி இஸட்400 பைக்காகவும் இருக்கலாம் என கருதப்படுகிறது. இந்த யூகங்களுக்கு எல்லாம் வரும் செப்டம்பர் 25ம் தேதி நம் அனைவருக்கும் அதிகாரப்பூர்வமான பதில் கிடைத்து விடும் என்பது உறுதி.


Click it and Unblock the Notifications








