மலிவு விலையில் வருவது உறுதி?.. மேக்ஸி ரக ஸ்கூட்டர்கள் பிரிவில் புரட்சி செய்ய வருகிறது கீவே ஜிடி270!
கீவே நிறுவனம் விரைவில் இந்தியாவில் கால் தடம் பதிக்க இருக்கின்றது. தனது வருகையைத் தொடர்ந்து பிரபல மேக்ஸி ரக ஸ்கூட்டர் மாடலான ஜிடி270-ஐ நிறுவனம் அறிமுகம் செய்ய இருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

இங்கிலாந்து நாட்டை மையமாகக் கொண்டு இயங்கும் முன்னணி வாகன உற்பத்தி நிறுவனங்களில் கீவே (Keeway)-வும் ஒன்று. இந்நிறுவனம் வெகு விரைவில் இந்தியாவில் கால் தடம் பதிக்க இருக்கின்றது. ஆம், நிறுவனம் அதன் பிரபல இருசக்கர வாகன மாடல்களை இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது.

கீவே அதன் முதல் தயாரிப்பாக கே-லைட் க்ரூஸர் ரக இருசக்கர வாகனத்தை வரும் மே 17 ஆம் தேதி அன்று இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கின்றது. இதுகுறித்த தகவலை நிறுவனம் கடந்த வாரமே உறுதிப்படுத்தியது. இந்த நிலையில் தற்போது புதிய தகவலாக நிறுவனம் மற்றுமொரு அதன் பிரபல ஸ்கூட்டர் மாடலை நாட்டில் அறிமுகம் செய்ய திட்டமிட்டிருப்பதாக வெளியாகியுள்ளன.

கீவே நிறுவனம் அதன் ஜிடி270 மேக்ஸி ரக ஸ்கூட்டரையே அறிமுகம் செய்ய இருக்கின்றது. கே-லைட் க்ரூரஸ் மோட்டார்சைக்கிளுடன் சேர்த்து இந்த மேக்ஸி ரக ஸ்கூட்டரையும் அது அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தற்போது விற்பனையில் இருப்பதைக் காட்டிலும் மிக குறைவான விலையில் விற்பனைக்கு வர இருப்பதாக கூடுதல் மகிழ்ச்சியளிக்கும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜிடி270 மேக்ஸி ஸ்கூட்டரில் பியாஜியோ நிறுவனத்தின் 278.2 சிசி திறன் கொண்ட சிங்கிள் சிலிண்டர், ஃப்யூவர் இன்ஜெக்ட் லிக்யூடு கூல்டு தொழில்நுட்பம் கொண்ட மோட்டார் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த மோட்டார் அதிகபட்சமாக 19 எச்பி பவரை 6,500 ஆர்பிஎம்மிலும், 22.5 என்எம் டார்க்கை 6,000 ஆர்பிஎம்மிலும் வெளியேற்றும்.

மிக சிறப்பான இயக்கத்திற்காக சிவிடி கியர்பாக்ஸ் ஸ்கூட்டரில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இத்தகைய மிக சிறப்பான மேக்ஸி ரக ஸ்கூட்டரையே கீவே வெகுவிரைவில் குறைவான விலையில் விற்பனைக்குக் கொண்டு வர இருப்பதாக புதிய தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. இந்த தகவல் அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்க வைத்திருக்கின்றது.

குறிப்பாக, இருசக்கர வாகன பிரியர்களுக்கு இரட்டிப்பான மகிழ்ச்சியை வழங்கும் வகையில் இந்த தகவல் அமைந்திருக்கின்றது. இதனை இன்னும் பல மடங்கு அதிகமானதாக்கும் வகையில், கீவே ஜிடி270 மேக்ஸி ஸ்கூட்டரில் பன்முக பிரீமியம் அம்சங்கள் இடம் பெற இருப்பதாக கூடுதல் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

அந்தவகையில், கேஒய்பி சஸ்பென்ஷன் செட்-அப் இரு முனைகளிலும் வழங்கப்படும் என கூறப்படுகின்றது. முன் பக்கத்தில் 35 மிமீ ஃபோர்க்கும் இடம் பெற இருக்கின்றது. இத்துடன், உச்சபட்ட பாதுகாப்பான பிரேக்கிங் அனுபவத்தை வழங்குவிம் விதமாக 240 மிமீ டிஸ்க் முன் பக்க வீலிலும், 220 மிமீ டிஸ்க் பின் வீலிலும் வழங்கப்பட உள்ளன.

தொடர்ந்து, எந்த மாதிரியான சாலையையும் சமாளிக்கக் கூடிய டயர்களும் ஸ்கூட்டரில் இடம் பெற இருக்கின்றன. அந்தவகையில், முன்பக்கத்தில் 110/70-R13 அளவுள்ள டயரும், பின் பக்கத்தில் 130/70-R13 டயரும் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் ப்யூவல் டேங்க் 9.5 லிட்டர் கொள்ளளவு கொண்டதாகக் காட்சியளிக்கின்றது. இது உண்மையில் மிகப் பெரிய எரிபொருள் ஸ்டோரேஜ் ஆகும்.

தற்போது இந்தியாவில் விற்பனையில் உள்ள சுஸுகி பர்க்மேன் மற்றும் அப்ரில்லா எஸ்எக்ஸ்ஆர் ஆகிய மேக்ஸி ரக ஸ்கூட்டர் மாடல்களுக்கு போட்டியாக கீவே ஜிடி 270 இந்தியாவில் விற்பனைக்கு வர இருக்கின்றது. இது மட்டுமின்றி பிஎம்டபிள்யூ மோட்டாராட் நிறுவனத்தின் சி400ஜிடி-க்கும் இது போட்டியாக அமைய இருக்கின்றது.

கீவே நிறுவனம் பற்றிய சிறப்பு தகவல்:
கீவே, இது சீனாவை மையமாகக் கொண்டு இயங்கும் க்யூஜே-விற்கு சொந்தமானது ஆகும். பெனெல்லி பிராண்டும் இந்த குழுமத்திற்கு சொந்தமானதுதான். இந்நிறுவனம், சிறிய க்ரூஸர் ரக மோட்டார்சைக்கிள்கள், ஸ்கூட்டர்கள், ஸ்ட்ரீட் ரக பைக்குகள் மற்றும் 125 சிசி திறன் கொண்ட டூ-வீலர்களை உருவாக்கி வருகின்றது.

உலக நாடுகள் சிலவற்றில் வெற்றி நடைப்போட்டுக் கொண்டிருக்கும் இந்நிறுவனம் தற்போது இந்திய சந்தையையும் குறி வைத்து களமிறங்க இருக்கின்றது. விரைவில் விற்பனைக்குக் கொண்டு வரப்பட இருக்கும் இரு டூ-வீலர்களும் பெனெல்லி விற்பனையாளர்கள் வாயிலாக இந்தியாவில் விற்பனைக்கு வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால், இதுகுறித்த உறுதியான தகவல்கள் வரும் மே17 அன்றே தெரிய வரும். அன்றே நிறுவனம் முதல் முறையாக நாட்டில் கால் தடம் பதிக்க இருக்கின்றது.


Click it and Unblock the Notifications








