ராயல் என்பீல்டோட மோத முடிவு பண்ணியாச்சு.. இதகூட செய்யலனா எப்படி? மலிவு விலை பைக்கை களமிறக்கும் சீன நிறுவனம்!
இந்தியாவின் முன்னணி இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமான ராயல் என்பீல்டுக்கு டஃப் கொடுக்கும் விதமாக சீன நிறுவனம் ஒன்று மலிவு விலை ரெட்ரோ மாடர்ன் ரக மோட்டார்சைக்கிளை இந்திய சந்தையில் விற்பனைக்குக் கொண்டு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.
2023 ஆட்டோ எக்ஸ்போ ஜனவரி 13 மற்றும் 18 ஆகிய தேதிகளில் இந்தியாவில் நடைபெற இருக்கின்றது. நொய்டாவில் உள்ள எக்ஸ்போ மார்ட் அரங்கிலேயே இந்த நிகழ்வு நடைபெற உள்ளது. இதில் பங்கு கொள்வதற்கான பணியில் வாகன உற்பத்தியாளர்கள் மிக தீவிரமாகக் களமிறங்கி இருக்கின்றனர். சீனாவைச் சேர்ந்த பிரபல இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமான கீவேவும் இதில் பங்குக் கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

நிறுவனம் அதன் குவார்டர் லிட்டர் ரக இருசக்கர வாகன மாடலான எஸ்ஆர்250-ஐ இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கின்றது. இதன் வருகை ராயல் என்பீல்டு நிறுவனத்தின் சமீபத்திய அறிமுகமான ஹண்டர் 350, கவாஸாகி டபிள்யூ 175 மற்றும் டிவிஎஸ் ரோனின் 225 உள்ளிட்ட மோட்டார்சைக்கிள்களுக்கு போட்டியாக அமையும் என்பது குறிப்பிடத்தகுந்தது. குறிப்பாக, ராயல் என்பீல்டின் அதிகம் விற்பனையாகும் இருசக்கர வாகன மாடலாக மாறியிருக்கும் ஹண்டர் 350க்கு இது மிக பெரிய போட்டியாளனாக விளங்க இருக்கின்றது.
இந்த பைக்கை கீவே நிறுவனம் சற்று குறைவான விலையில் விற்பனைக்குக் கொண்டு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ரூ. 1.20 லட்சம் வரையிலான குறைவான விலையிலேயே கீவே எஸ்ஆர் 250 விற்பனைக்குக் கொண்டு வரப்பட இருப்பதாகக் கூறப்படுகின்றது. இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். கீவே எஸ்ஆர் 250 ஓர் ரெட்ரோ மாடர்ன் ரக மோட்டார்சைக்கிள் ஆகும். இந்தியாவில் இருசக்கர வாகனங்களுக்கு டிமாண்ட் மிக அதிகம்.

இந்த நிலையிலேயே இந்த சூப்பரான மற்றும் ஸ்டைலான மோட்டார்சைக்கிளை விற்பனைக்குக் கொண்டு வரும் முயற்சியில் கீவே களமிறங்கி இருக்கின்றது. நிறுவனத்தின் சமீபத்திலேயே கீவே எஸ்ஆர் 125 மாடலை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. இதைத் தொடர்ந்து இந்த மாடலின் சற்று அதிக திறன் கொண்ட மோட்டார்சைக்கிளான எஸ்ஆர் 250-யையும் விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது. கிளாசிக் லுக்கை இந்த மோட்டார்சைக்கிள் வழங்க வேண்டும் என்பதற்காக ஸ்போக் வீல்களே முன் மற்றும் பின் பக்கத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இத்துடன், மெல்லிய தோற்றத்திலான ஃப்யூவல் டேங்க், டூயல் பர்போஸ் ப்ளாக் பேட்டர்ன் டயர்கள், அப்ரைட் ஹேண்டில் பார், வட்ட வடிவ ஹெட்லேம்ப் உள்ளிட்டவையே இந்த பைக்கில் வழங்கப்பட்டு உள்ளன. இதுதவிர பைக்கின் கூடுதல் கவர்ச்சியான தோற்றத்திற்காக ஒற்றை துண்டு அமைப்புடைய இருக்கை செட்-அப், கவர்ச்சிகரமான ஃபென்டர் உள்ளிட்டவையும் இந்த பைக்கில் பயன்படுத்தப்பட்டு இருக்கும். 250 சிசி மோட்டாரே இந்த பைக்கில் பயன்படுத்தப்பட்டு உள்ளது.

குறிப்பு: படங்கள் உதாரணத்திற்கு வழங்கப்பட்டவை.
இது ஓர் 250 சிசி சிங்கிள் சிலிண்டர், ஏர் கூல்டு மோட்டார் ஆகும். இந்த மோட்டார் 5 ஸ்பீடு டிரான்ஸ்மிஷனுடன் கிடைக்கும். இந்த பைக்கில் மிக சிறந்த பிரேக்கிங் வசதிக்காக முன் மற்றும் பின் பக்கத்தில் டிஸ்க் பிரேக்குகள் வழங்கப்பட்டுள்ளது. இதுதவிர ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டமும் இந்த பைக்கில் எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும், மிக சிறந்த பிரேக்கிங் அனுபவத்திற்காக பைக்கின் முன் பக்கத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க்கும், பின் பக்கத்தில் டூயல் ஷாக் அப்சார்பரும் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இத்தகைய அம்சங்களுடனேயே ராயல் என்பீல்டு ஹண்டர் 350க்கு போட்டி அளிக்க எஸ்ஆர் 250 இந்தியா நோக்கி வந்துக் கொண்டிருக்கின்றது. இந்தியாவில் ராயல் என்பீல்டு ஹண்டர் மோட்டார்சைக்கிள் ரூ. 1.50 லட்சம் என்கிற ஆரம்ப விலையில் இருந்து விற்பனைக்குக் கிடைக்கின்றது. 349 சிசி சிங்கிள் சிலிண்டர் ஏர்-கூல்டு மோட்டாரே இந்த பைக்கில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த மோட்டார் அதிகபட்சமாக 20.2 பிஎச்பி பவரையும், 27 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது.
இரு விதமான வெர்ஷன்களில் இந்த பைக் விற்பனைக்குக் கிடைக்கும். ரெட்ரோ மற்றும் மெட்ரோ எனும் தேர்வுகளிலேயே அது கிடைக்கும். ரெட்ரோ வெர்ஷனில் ஒயர்-ஸ்போக் வீலைும், மெட்ரோ வெர்ஷனில் அலாய் வீல்களும் வழங்கப்பட்டிருக்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது. பிரேக்கிங் வசதிக்காக டூயல் சேனல் டிஸ்க் மற்றும் ஏபிஎஸ் வழங்கப்பட்டுள்ளது. இந்த பைக்கை தனது புத்தம் புதிய ஜே பிளாட்பாரத்தில் வைத்தே உருவாக்கியிருக்கின்றது. இந்த பைக்கின் மூத்த சகோதரனாக சூப்பர் மீட்டியோர் 650 பைக்கையும் நிறுவனம் உருவாக்கிக் கொண்டிருக்கின்றது. வெகு விரைவில் இந்த பைக்கும் இந்திய சந்தையில் விற்பனைக்குக் கொண்டு வரப்பட இருப்பது குறிப்பிடத்தகுந்தது. இதன் வருகை 2023 ஜனவரியில் அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications








