எலெக்ட்ரிக் அவதாரம் எடுக்கிறது லூனா! 2கே கிட்ஸ்கள் எல்லாம் இந்த பக்க ஓடியாங்க!
ஒரு காலத்தில் ஜாம்பவானாக இருந்த கைனடிக் நிறுவனத்தின் லூனா மொப்பட் தற்போது எலெக்ட்ரிக் அவதாரம் எடுக்கப்போவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த இ-லூனா குறித்த விரிவான விபரங்களைக் காணலாம் வாருங்கள்
இந்தியாவில் 50 ஆண்டுகளுக்கு முன்பு வாகனம் என்பதே மிகப்பெரிய விஷயமாக இருந்தது. பெரிய பெரிய செல்வந்தர்களின் வீடுகளில்தான் வாகனங்கள் இருக்கும். வாகனம் என்பது ஒரு ஆடம்பரத்தின் அடையாளமாக மட்டுமே இருந்தது. இந்த அடையாளத்தை முதன்முறையாக மாற்றியமைத்தது என்றால் அது கைனடிக் என்ற நிறுவனம் தான். இந்நிறுவனம் தான் முதன் முதலாகக் குறைந்த விலையில் டூவீலர்களை தயாரித்தது.

இப்படியாக இந்நிறுவனம் தயாரித்து வெளியிட்ட மொப்பட் தான் லூனா, இந்த மொப்பட் அந்த காலத்தில் வெறும் ரூ2 ஆயிரத்திற்கு விற்பனையானது. பலர் இந்த மொப்பட்டை வாங்கி பயன்படுத்தினர். ஆண்கள், பெண்கள் என அனைவரும் இதைப் பயன்படுத்தத் துவங்கினர். இந்த மொப்பட் முதன் முதலாக 1972ல் அறிமுகப்படுத்தப்பட்டது. அப்பொழுது வெறும் 50 சிசி இன்ஜினை கொண்டு உருவாக்கப்பட்டது.
இந்த மொப்பட்டை முதன் முதலாகக் காப்புரிமையாக வைத்திருந்த நிறுவனம் பியாஜியோ சியாயோ என்ற நிறுவனம் தான் பின்னர் இதை கைனடிக் நிறுவனம் வாங்கி அதை அதிகமாக மேம்படுத்தியது. சுமார் 22 ஆண்டுகள் அதாவது 2000மாவது ஆண்டில் இந்த மொப்பட்டின் தயாரிப்பு நிறுத்தப்பட்டுவிட்டது. இருந்தாலும் இன்றும் இந்த மொப்பட்டின் பெயர் பலருக்கு மறக்கவில்லை. பலர் இதை இன்றும் நினைவில் வைத்திருக்கின்றனர். ஆனால் இன்று ரோட்டில் இந்த மொப்பட்டை பார்ப்பது மிகவும் அரிதான ஒரு விஷயம் தான்.
இந்நிலையில் கைனடிக் இன்ஜினியரிங் நிறுவனம் தற்போது இந்த லூனாவை மீண்டும் மார்கெட்டிற்கு கொண்டு வரப்போவதாக அறிவித்துள்ளது. அதன்படி கைனடிக் நிறுவனத்தின் சார்பு நிறுவனமான கைனடிக் கிரீன் எனர்ஜி மற்றும் பவர் சொல்யூஷன்ஸ் நிறுவனம் சார்பில் இந்த லூனாவை எலெக்ட்ரிக் ஸ்கூட்டராக அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளனர். இந்த லூனா இ-ஸ்கூட்டருக்கான உதிரிப் பாகங்களான மெயின் சேஸிஸ், ஸ்டாண்டு, சைடு ஸ்டாண்டு, ஸ்விங் ஆர்ம் ஆகியவற்றை கைனடிக் இன்ஜினியரிங் நிறுவனம் தயாரித்து வழங்குகிறது.
இந்த இ-லூனா விற்கான மோட்டார் உள்ளிட்ட மற்ற பாகங்களைத் தான் கைனடிக் கிரீன் எனர்ஜி நிறுவனமே தயாரிக்கிறது. மாதம் 5 ஆயிரம் இ-லூனாக்களை தயாரிக்கும் வகையில் இதன் உற்பத்தி ஆலையை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக கைனடிக் இன்ஜினியரிங் லிமிடெட் நிறுவனம் ரூ3 கோடி முதலீட்டை இந்த இ-லூனாவை தயாரிக்கத் தகுந்த வகையில் தனது பெயிண்டிங், பிரஸ் மற்ற ஃபேப்ரிகேஷன் ஒர்க் ஷாப்களை நிறுவச் செலவு செய்துள்ளது.
இது குறித்து கைனடிக் இன்ஜினியரிங் நிறுவனம் நிர்வாக இயக்குநர் அஜின்கியா ஃபிர்ரோடியா என்பவர் கூறும் போது : "நாங்கள் இந்த இ-லூனாவிற்கான சப் அசம்பிளை செய்வதற்குப் பெருமிதம் கொள்கிறோம். ஒரு காலத்தில் தினமும் 2 ஆயிரம் லூனா மொப்பட்கள் விற்பனையானது. அதே போல இதன் புதிய அவதாரமும் சிறப்பான வரவேற்பைப் பெறும் என நம்புகிறோம்." எனக் கூறினார்.
90ஸ் கிட்ஸ்களுக்கே விபரம் தெரியாத வயதில் பிரபலமாக இருந்த மொப்பட் இது, இது மீண்டும் வந்தால் இன்றைய 2கே கிட்ஸ்கள் ரசிக்கும் வகையில் இருக்கும் என எதிர்பார்க்கலாம். பலர் இதை விரும்பி வாங்க வாய்ப்பிருக்கிறது. குறிப்பாக இளைஞர்களைக் கவரும் வகையில் விலையும், ஸ்டைலும், சிறப்பான ரேஞ்சும், இருந்தால் இது நகர்ப் புறங்கள் மட்டுமல்ல கிராமப்புறங்களிலும் சிறப்பான விற்பனையைப் பெறும் என எதிர்பார்க்கலாம். இது குறித்த உங்கள் கருத்தை கமெண்டில் சொல்லுங்கள்


Click it and Unblock the Notifications








