ரெண்டு உசுரு போனதன் எதிரொலி... தீ எதிர்ப்பு திறனுடைய பேட்டரியை பயன்பாட்டிற்கு கொண்டு வரும் கோமகி!
கோமகி நிறுவனம் மிக விரைவில் அதன் மின்சார இருசக்கர வாகனங்களில் தீ எதிர்ப்பு திறன் கொண்ட பேட்டரி பேக்கைப் பயன்படுத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே காணலாம், வாங்க.

தொடர்ச்சியாக நடைபெற்ற மின்சார இரு சக்கர வாகன தீ விபத்து நிகழ்வு எலெக்ட்ரிக் வாகன பயன்பாட்டாளர்கள் மத்தியில் பதற்றமான சூழலை ஏற்படுத்தியிருக்கின்றது. குறிப்பாக, தமிழகத்தில் அரங்கேறிய தந்தை-மகள் மின் வாகன தீ விபத்தால் இறந்த நிகழ்வு எலெக்ட்ரிக் வாகன பயன்பாட்டையே கேள்விக் குறியாக்கும் வகையில் அமைந்துள்ளது.

இந்த மாதிரியான நிலையில் தன்னுடைய மின்சார வாகனங்களை பாதுகாப்பான வாகனங்களை உருவாக்க இருப்பதாக நாட்டின் முன்னணி எலெக்ட்ரிக் வாகன உற்பத்தி நிறுவனம் ஒன்று அறிவித்திருக்கின்றது. பிரபல கோமகி நிறுவனமே அந்த அறிவிற்புக்கு சொந்தக்கார நிறுவனம் ஆகும்.

அது, எலெக்ட்ரிக் ப்ரூஃப் பேட்டரி வசதிக் கொண்ட இருசக்கர வாகனங்களை விரைவில் விற்பனைக்குக் கொண்டு வர இருப்பதாக தகவல் வெளியிட்டுள்ளது. நிறுவனம், நடப்பாண்டை அலங்கரிக்கும் வகையில் புதிய ரேஞ்ஜர், வெனிஸ் மற்றும் டிடி3000 உள்ளிட்ட புதுமுக மின்சார இருசக்கர வாகனங்களை நாட்டில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது.

2022 தொடங்கி நான்கு மாதங்களே ஆகின்ற நிலையில் இதுவரை மூன்று புதுமுக மின்சார இருசக்கர வாகனங்களை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியிருக்கின்றது. இந்த நிலையிலேயே தனது வாடிக்கையாளர்களுக்கு பாதுகாப்பான ரைடிங் அனுபவத்தை வழங்கும் விதமாக நிறுவனம் தீ எதிர்ப்பு எலெக்ட்ரிக் வாகனங்களை விற்பனைக்கு வழங்கும் முயற்சியிலும் அது களமிறங்கியிருக்கின்றது.

தொடர் தீ விபத்து எதிரொலியால் இந்திய அரசு பாதுகாப்பான மின் வாகனங்களை தயாரிக்க உற்பத்தியாளர்களை அறிவுறுத்தியிருக்கின்றது. இந்தமாதிரியான சூழ்நிலையிலேயே அனைவரின் எதிர்பார்ப்பாக மாறியிருக்கும் ஃபையர் ப்ரூஃப் எலெக்ட்ரிக் வாகன உற்பத்தி பற்றிய தகவலை கோமகி வெளியிட்டுள்ளது.

மின்சார வாகனங்கள் மற்றும் எரிபொருள் வாகனங்கள் இரண்டும் எளிதில் தீ பற்றக் கூடியவையாக காட்சியளிக்கின்றன. இருப்பினும், டெம்ப்ரேச்சர் விஷயத்தில் அவை வித்தியாசத்தைக் கொண்டிருக்கின்றன. எரிபொருள் 210க்கும் அதிகமான செல்சியஸ் வெப்ப சூழ்நிலையிலேயே தீப்பிடிக்கும் தன்மைக் கொண்டுள்ளன.

ஆனால், லித்தியம் பேட்டரிகள் 135க்கும் அதிகமான செல்சியஸ் வெப்பத்திலேயே தீ பற்றிக் கொள்ளும். இதன் காரணத்தினாலேயே தொடர் மின்வாகன தீ விபத்து சம்பவம் அடுத்தடுத்து அரங்கேறியிருக்கும் என யூகிக்கப்படுகின்றது. சமீப காலமாக தமிழகத்தை வெயில் வாட்டி வதைத்து வருவது குறிப்பிடத்தகுந்தது.

அதேநேரத்தில், தீ விபத்திற்கான முழுமையான காரணங்கள் இன்னும் கண்டறியப்படவில்லை. வெப்பம் தான் காரணம் என்பது வெறும் யூகிப்பின் அடிப்படையிலேயே கூறப்பட்டுள்ளது. இந்த மாதிரியான சூழ்நிலையில் கோமகி நிறுவனம் முன்னெடுத்திருக்கும் தீ எதிர்ப்பு தயாரிப்பு மக்களுக்கு நிம்மதியளிக்கும் வகையில் இருக்கின்றது.

உலகமே மின் வாகன பயன்பாட்டை நோக்கி நகர தொடங்கியிருக்கின்றது. மக்களும் காற்று மாசுபாட்டைக் குறைக்கும் பொருட்டு அதிக பயன்பாட்டைத் தரக் கூடிய எலெக்ட்ரிக் வாகன பயன்பாட்டிற்கு மாற தொடங்கியுள்ளனர். இந்த நிலையை இன்னும் பல மடங்கு ஊக்குவிக்க நிறுவனங்களின் இந்த மாதிரியான முயற்சிகள் வழி வகுக்கும்.
குறிப்பு: படங்கள் உதாரணத்திற்கு வழங்கப்பட்டவை.


Click it and Unblock the Notifications








