இ-ட்யூக் என்ற பெயரில்... எலக்ட்ரிக்கில் வருகிறதா கேடிஎம் ட்யூக்125!! எப்போது அறிமுகம்?
ஆஸ்திரியாவை சேர்ந்த கேடிஎம் -இன் தாய் நிறுவனமான பையர் மொபைலிட்டி (Pierer Mobility) புதியதாக 4 எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிள்களின் வடிவமைப்பு பணிகளில் உள்ளதை உறுதிப்படுத்தி உள்ளது. இந்த வகையில் தயாரிக்கப்பட உள்ள எலக்ட்ரிக் கேடிஎம் பைக்கை பற்றி இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

கேடிஎம் பிராண்டில் இருந்து களமிறக்கப்பட உள்ள எலக்ட்ரிக் பைக்குகள் பையர் மொபைலிட்டியின் ஓர் அங்கமாக விளங்கும் ஹஸ்க்வர்னாவின் பைக் பாகங்களின் மூலமாக தயாரிக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஸ்வீடன் நாட்டை சேர்ந்த ஹஸ்க்வர்னா கடந்த 2021ஆம் ஆண்டில் அதன் இ-பைலன் எலக்ட்ரிக் பைக் கான்செப்ட்டை காட்சிப்படுத்தி இருந்தது.

இந்த இ-பைலனின் பவர்ட்ரெயின் உள்பட முக்கிய அம்சங்களை புதிய கேடிஎம் எலக்ட்ரிக் பைக்குகள் பகிர்ந்து கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதற்கட்டமாக கேடிஎம் நிறுவனத்தின் நாக்டு ஸ்ட்ரீட்ஃபைட்டர் பைக்குகளான ட்யூக் வரிசையையே இந்த எலக்ட்ரிக் பைக்குகள் அடிப்படையாக கொண்டிருக்கும் என்பதை கடந்த 2021இல் கிடைத்த முக்கிய வருவாய்களை பற்றிய பையர் மொபைலிட்டி நிறுவனத்தின் சமீபத்திய அறிக்கையின் மூலம் அறிய முடிகிறது.

ஏனெனில் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ள இது தொடர்பான பையர் மொபைலிட்டியின் அறிக்கையில், வடிவமைப்பு பணிகளில் உள்ள எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிள்கள் பிரிவில் ஹஸ்க்வர்னாவின் இ-பைலன் உடன் கேடிஎம் இ-ட்யூக் பைக்கும் இடம்பிடித்துள்ளது. இதில் குறிப்பிடப்பட்டுள்ள விபரங்களின்படியே, இ-பைலனும், கேடிஎம் இ-ட்யூக்கும் ஒரே மாதிரியான பவர்ட்ரெயின் உட்பாகங்களுடன் வடிவமைக்கப்பட உள்ளதாக கூறுகின்றோம்.

இந்த வகையில் ஹஸ்க்வர்னா இ-பைலன் மற்றும் கேடிஎம் இ-ட்யூக் பைக்குகளில் 10 கிலோவாட்ஸ் ஆற்றல் கொண்ட எலக்ட்ரிக் மோட்டார், 5.5kWh பேட்டரி தொகுப்புடன் வழங்கப்பட உள்ளது. மேலும், இவற்றில் பேட்டரிகள் பைக்கில் இருந்து நீக்க முடியாத வகையில் நிலையானதாக வழங்கப்பட உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இவற்றின் செயல்படுதிறன் தற்போதைய கேடிஎம் ட்யூக்125 பைக்கிற்கு இணையானதாக இருக்கும்.

ஏனெனில் குறிப்பிட்ட செயல்திறன் கொண்ட பைக்குகளையே குறைந்த விலையில் பலத்தரப்பட்ட வாடிக்கையாளர்களை கவரும் வகையில் கொண்டுவர கேடிஎம் விரும்பும். மற்றப்படி இந்த எலக்ட்ரிக் பைக்குகளின் அறிமுகம் குறித்து எந்தவொரு குறிப்பும் இல்லை. அதேபோல் கேடிஎம் இ-ட்யூக்கின் தோற்றத்தையும் இந்த படங்களில் தெளிவாக காண முடியவில்லை.

கேடிஎம் ட்யூக் பைக்குகளின் வழக்கமான தோற்றத்திலேயே இ-ட்யூக் பைக்கும் இருக்குமா அல்லது புதிய தோற்றத்தில் இருக்குமா என்பது இனி வரும் மாதங்களில்தான் தெரியவரும். ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம், ஹஸ்க்வர்னா இ-பைலனை காட்டிலும் கேடிஎம் எலக்ட்ரிக் பைக்கில் அதிகளவில் கூர்மையான லைன்களை சுற்றிலும் உடல் பேனல்களில் எதிர்பார்க்கலாம். எலக்ட்ரிக் மோட்டார் & பேட்டரி மட்டுமின்றி சஸ்பென்ஷன் & ப்ரேக்கிங் பாகங்களையும் ஹஸ்க்வர்னா மாடலுடன் கேடிஎம் இ-ட்யூக் பகிர்ந்து கொள்ளலாம்.

இவை இரண்டுடன் கேடிஎம் இ10 மற்றும் ஃப்ரீரைட் இ எல்வி என்கிற மேலும் இரு எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிள்களின் அறிமுகத்தையும் பையர் மொபைலிட்டி நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. இதில் இ10 ஆனது இளம் பைக் ஆர்வலர்களுக்கான சகதி பைக்காகவும், ஃப்ரீரைட் இ எல்வி ஆனது ஸ்க்ராம்ப்ளர் பைக்காகவும் விளங்கவுள்ளன.

ஹஸ்க்வர்னா இ-பைலனையும், கேடிஎம் இ-ட்யூக் பைக்கையும் பையர் மொபைலிட்டி நிறுவனம் எப்போது இந்தியாவில் அறிமுகம் செய்யும் என்பதை தற்போதைக்கு உறுதியாக கூற இயலவில்லை. இந்தியாவில் ஹஸ்க்வர்னா & கேடிஎம் பைக்குகள் புனேவில் உள்ள பஜாஜ் ஆட்டோவின் சாகான் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இங்கிருந்து இந்த ஐரோப்பிய பிராண்ட்களின் பைக்குகள் வெளிநாட்டு சந்தைகளுக்கும் அனுப்பி வைக்கப்படுகின்றன.

அதேநேரம், இந்தியாவில் இதில் எந்த பிராண்டின் எலக்ட்ரிக் பைக் முதலாவதாக அறிமுகமாகும் என்பது இப்போதைக்கு தெரியவில்லை. கேடிஎம் நாடு முழுவதும் நன்கு சந்தையை விரிவுப்படுத்தியுள்ளதால் இந்த ஆஸ்திரிய பிராண்டில் இருந்து முதலாவதாக களமிறக்கப்படலாம். இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனங்களை தயாரிப்பதற்காகவே புதியதாக ஒரு தொழிற்சாலையை பஜாஜ் கட்டமைத்து வருகிறது.

ரூ.300 கோடி முதலீட்டில் மீண்டும் மஹாராஷ்டிராவிலேயே நிறுவப்பட்டுவரும் இந்த புதிய தொழிற்சாலையில் தனது புதிய எலக்ட்ரிக் வாகனங்களையும் பஜாஜ் ஆட்டோ நிறுவனம் தயாரிக்க உள்ளது. பஜாஜ் ஆட்டோவின் சிறந்த விற்பனை மாடலாக பல்சர் விளங்குகிறது. கடந்த மாதத்தில் உள்நாட்டில் விற்பனை செய்யப்பட்ட மற்றும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட பல்சர் பைக்குகளின் எண்ணிக்கை 86,979 ஆகும். தற்சமயம் 125சிசி-யில் இருந்து 250சிசி வரையில் பல்சர் பைக்குகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.


Click it and Unblock the Notifications








