ராயல் என்ஃபீல்டு, டிவிஎஸ் போன்ற நிறுவனங்கள் நழுவ விடும் வாய்ப்பு! கட்டியாக பிடித்துக்கொண்ட சுஸூகி
2023 ஆட்டோ எக்ஸ்போவில் சில பெரிய டூவீலர் தயாரிப்பு நிறுவனங்கள் பங்குபெறப்போவதில்லை என அறிவித்துள்ளனர். இதுகுறித்த விரிவான தகவல்களைக் காணலாம் வாருங்கள்.
இந்தியாவில் ஆட்டோ எக்ஸ்போ என்பது ஆட்டோமொபைல் துறைக்கு ஒரு முக்கிய நிகழ்வாகும். இந்தியாவில் உள்ள ஆட்டோமொபைல் சார்ந்த தொழில் செய்யும் நிறுவனங்கள் குறிப்பிட்ட இடத்தில் தங்கள் தயாரிப்புகளை தங்கள் ரசிகர்கள் மற்றும் பொதுமக்களுக்குக் காட்சிப்படுத்தி அதற்கான விழிப்புணர்வு மற்றும் அறிமுகம் செய்யும் ஒரு இடமாக இருக்கும். இதனால் பெரும்பாலும் ஆட்டோமொபைல் நிறுவனங்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கு கொள்வார்கள்.

இந்த நிகழ்ச்சி பொதுமக்களுக்கும், ஆட்டோமொபைல் ஆர்வலர்களுக்கும் மிகவும் உற்சாகத்தைக் கொடுக்கும் ஒரு நிகழ்ச்சியாகும். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான மக்கள் தங்களுக்குப் பிடித்த கார், பைக்குகளை பார்க்கவே இந்த ஆட்டோ எக்ஸ்போவில் கலந்து கொள்வார்கள்.அவர்கள் விரும்பிய சூப்பர் பைக்குகளுடன் புகைப்படம் எடுத்துக்கொள்வது, கார்களுடன் புகைப்படம் எடுத்துக்கொள்வது, கார் பைக் குறித்துப் பல விதமான தகவல்களை அறிந்து கொள்வது எனப் பல விஷயங்கள் இந்த நிகழ்வில் நடைபெறும்.
இப்படியான ஆட்டோ எக்ஸ்போவில் இந்தாண்டு சில டூவீலர் தயாரிப்பு நிறுவனங்கள் பங்கு பெறப்போவதில்லை என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, ஹீரோ மோட்டாகார்ப், ஹோண்டா மோட்டார் சைக்கிள், டிவிஎஸ் மோட்டார்ஸ், பஜாஜ் ஆட்டோ மற்றும் ராயல் என்ஃபீல்டு ஆகிய நிறுவனங்கள் இந்த ஆட்டோஎக்ஸ்போவில் கலந்து கொள்ளப்போவதில்லை எனத் தெரிவித்துள்ளனர். இந்தியாவின் மிகப்பெரிய நிகழ்வை இந்த நிறுவனங்கள் மிஸ் செய்யவுள்ளனர்.
ராயல் என்ஃபீல்டு மற்றும் ஹார்லி டேவிட்சன் ஆகிய நிறுவனங்கள் எப்பொழுதும் ஆட்டோ எக்ஸ்போவில் கலந்துகொள்வதில்லை. ராயல் என்ஃபீல்டு தங்கள் வாடிக்கையாளர்களுக்காக ரைடர் மேனியா என்ற பிரத்தியேகமாக ஒரு நிகழ்ச்சியை நடத்தி வருகின்றனர். ஆனால் டிவிஎஸ் நிறுவனம் எப்பொழுதும் தங்கள் புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்தும் அல்லது காட்சிப்படுத்தும் இடமாக ஆட்டோ எக்ஸ்போ இருந்தது. ஆனால் இந்தாண்டு டிவிஎஸ் நிறுவனம் அதிலிருந்து விலகிவிட்டது.
டிவிஎஸ் நிறுவனம் தங்கள் வாடிக்கையாளர்களைக் கவரத் தனியாக டிவிஎஸ் மோட்டோ சோல் என்ற ஒரு நிகழ்ச்சியை வரும் மார்ச் மாதம் கோவாவில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அங்குத் தனது புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்தவும் காட்சிப்படுத்தவும் போகிறது. இந்த ஆட்டோ எக்ஸ்போவில் டிவிஎஸ் நிறுவனம் கலந்து கொள்ளப்போவதில்லை. ஆனால் சுஸூகி, பியாஜியோ போன்ற பெரிய நிறுவனங்கள் கலந்து கொள்கின்றனர்.
இந்த ஆட்டோ எக்ஸ்போவை நடத்தும் இந்திய ஆட்டோமொபைல் தயாரிப்பாளர்கள் சொசைட்டி மற்றும் சிஐஐ ஆகியோர் பங்குபெற விரும்பாத நிறுவனங்களுடன் இதுகுறித்து பேச்சு வார்த்தை நடத்தினர். ஆனால் அவர்கள் திட்டவட்டமாக ஆட்டோ எக்ஸ்போ தங்களுக்குத் தேவையில்லை என மறுத்துவிட்டனர். இதனால் அந்நிறுவனங்கள் இல்லாமலேயே இந்த நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
இதேபோக கார் தயாரிப்பு நிறுவனங்கள் பெரும்பாலும் இடம் பெறவுள்ளன. இதனால் அட்டோ எக்ஸ்போவில் சுவாரஸ்யங்களுக்கும், ஆச்சரியங்களுக்கும் பஞ்சம் இருக்காது. பல ஆட்டோமொபைல்விரும்பிகள் ஆட்டோ எக்ஸ்போவிற்காக காத்துக்கொண்டிருக்கின்றனர். இந்தியாவில் 2023ம் ஆண்டிற்கான ஆட்டோ எக்ஸ்போ வரும் ஜனவரி மாதம் 13ம் தேதி முதல் 15ம் தேதி வரை டில்லியில் வைத்து நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








