பெட்ரோல் டூ-வீலர் லவ்வர்ஸ்களை கட்டாயம் இது கவரும்! கியர்பாக்ஸுடன் விரைவில் வரவிருக்கும் இ-பைக்!
இது இந்திய தயாரிப்புதானா ஆச்சரியத்தை ஏற்படுத்தும் வகையில் எக்கசக்க சிறப்பம்சங்களுடன் மேட்டர் எனெர்ஜி நிறுவனம் ஓர் எலெக்ட்ரிக் பைக்கை உருவாக்கியுள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.
இந்தியாவில் மின்சார வாகனங்களுக்கு நாளுக்கு நாள் டிமாண்ட் அதிகரித்த வண்ணம் இருக்கின்றது. ஆகையால், வாகன உற்பத்தியாளர்கள் புதுமுக எலெக்ட்ரிக் வாகனங்களைக் களமிறக்குவதில் மிக தீவிரமாக ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர். நாம் ஏற்கனவே அறிந்த வாகன உற்பத்தி நிறுவனங்கள் மட்டுமின்றி சில புதுமுக வாகன தயாரிப்பாளர்களும்கூட மின் வாகனங்களைக் களமிறக்குவதில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.

அந்தவகையில், அகமதாபாத்தை மையமாகக் கொண்டு இயங்கும் ஓர் புதுமுக மின் வாகன உற்பத்தி நிறுவனம் இந்தியாவில் வெகுவிரைவில் அதிசயக்கத்தக்க அம்சங்கள் கொண்ட ஓர் எலெக்ட்ரிக் பைக்கை விற்பனைக்குக் கொண்டு வர இருப்பதாக அறிவித்திருக்கின்றது. மேட்டர் எனும் பெயர் கொண்ட அந்நிறுவனமே அதன் முதன் முதல் எலெக்ட்ரிக் பைக் மாடலை இந்திய மின் வாகன சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கின்றது.
இதன் வருகையை உறுதிப்படுத்தும் விதமாக இன்றைய தினம் (நவம்பர் 21) அப்புதுமுக மின்சாரை பைக்கை வெளியீடு செய்தது. அதாவது, பொது பார்வைக்குக் கொண்டு வந்தது. இந்த மின்சார பைக்கை மேட்டர் நிறுவனம் கியர் வசதியுடன் உருவாக்கியிருக்கின்றது. இதுவே, இந்தியாவில் கியர்பாக்ஸ் வசதியுன் உருவாக்கப்பட்ட முதல் மின்சார பைக்காகும். ஆகையால், இந்தியர்கள் மத்தியில் இந்த தகவல் பெருத்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கின்றது.
குறிப்பாக வித்தியாசமான மற்றும் நவீன வசதிகளை விரும்பும் மின்சார இருசக்கர வாகன பிரியர்களை இந்த தகவல் கூடுதல் மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கின்றது. 4 ஸ்பீடு கியர்பாக்ஸே இந்த எலெக்ட்ரிக் பைக்கில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி இன்னும் பல சிறப்பு வசதிகளும் இந்த மின்சார பைக்கில் வழங்கப்பட்டிருக்கின்றது. அந்தவகையில், ஏபிஎஸ், லிக்யூடு கூல்டு தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட 5.0 kWh பேட்டரி பேக் உள்ளிட்டவை மேட்டர் நிறுவனம் உருவாக்கியிருக்கும் மின்சார பைக்கில் வழங்கப்பட்டிருக்கின்றது.
இந்த பேட்டரி பேக்கை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 125 கிமீ முதல் 150 கிமீ வரையில் பயணிக்க முடியும். இதுமட்டுமின்றி, சாவியில்லாமல் வாகனத்தைப் பயன்படுத்தும் வசதி, 7.0 அங்குல தொடுதிரை திரை போன்ற அம்சங்களும் இந்த பைக்கில் வழங்கப்பட்டுள்ளது. இவற்றில் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கக் கூடிய அம்சமாக 7.0 அங்குல அளவில் வழங்கப்பட்டிருக்கும் எல்சிடி திரை உள்ளது.
இந்த திரை திருப்பத்திற்கு திருப்பம் வழி தடம் பற்றிய தகவல், செல்போனுக்கு வரும் அலர்டுகள் ஆகியவற்றை காண்பிக்கும் வசதிக் கொண்டதாக இருக்கிறது. இதுமட்டுமின்றி, இந்த திரையின் வாயிலாக இசை பிரியர்கள் தங்களின் இசை தாகத்தை தீர்த்துக் கொள்ளும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. இதேபோல், மின்சார பைக்கின் வடிவமைப்பிலும் தனித்துமான யுக்தியை நிறுவனம் கையாண்டிருக்கின்றது.
ஆகையால், அதன் தோற்றம் சற்று தனித்துவமானதாக தெரிகின்றது. நேக்கட் ஸ்ட்ரீட்ஃபைட்டர் ஸ்டைலிலேயே எலெக்ட்ரிக் பைக் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் தோற்றம் கேடிஎம் நிறுவனத்தின் புதிய தயாரிப்பாக இருக்குமோ நினைக்கச் செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. கூர்மையான முகப்பகுதி, ஸ்பிளிட் இருக்கை அமைப்பு, உயரமான க்ளிப்-ஆன் ஹண்டில் பார் மற்றும் ஸ்பிளிட் கிராப் ரெயில் உள்ளிட்ட அம்சங்கள் பைக்கின் பிரத்யேக தோற்றத்திற்காக பயன்படுத்தப்பட்டுள்ளன.
மேட்டர் நிறுவனம் இந்த எலெக்ட்ரிக் பைக்கை 2023 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருப்பதாக அறிவித்துள்ளது. இதன் டெலிவரி பணிகள் அதே ஆண்டு ஏப்ரல் மாதத்தில் தொடங்கப்படும். ஆனநால், இதன் விலை எவ்வளவு என இப்போது அறிவிக்கப்படவில்லை. அறிமுகத்தை முன்னிட்டு பின்னாளில் வெளியிட நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இது விற்பனைக்கு வரும்பட்சத்தில் டார்க் க்ரடோஸ் ஆர் மற்றும் ஓபென் ரோர் உள்ளிட்ட எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள்களுக்கு போட்டியாக அமையும்.


Click it and Unblock the Notifications








