பைக் கிக்கரை உதைக்கும்போது ஆன் ஆகாது ஆனா கேஸ் வாசம் மட்டும் வரும்? இந்த பிரச்னைக்கு எப்படி தீர்வு காணலாம்?
பைக் ஸ்டார்ட் ஆக மாட்டிக்குது ஆனா பெட்ரோல் வாசம் மட்டும் வருகிறதா?.. இந்த பிரச்னை என்ன காரணங்களினால் வரும் என்பது பற்றிய தகவலையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.

நாம் பயன்படுத்தும் பைக் கொஞ்சம் பழசாயிடுச்சு வச்சுக்கோங்க எங்கே இருந்துதான் பிரச்னை வரும்னே தெரியாது. தினந்தோறும் ஏதாவது ஒரு புது புது பிரச்னை அதுல ஏற்பட்டுட்டே இருக்கும். பேசாம இந்த வண்டியைப் போட்டு வேற ஒன்ன வாங்கிடலாமானுகூட தோணும். ஆனால், பொருளாதாரம் அதுக்கு ஒத்துழைக்காது. இதனாலதான் பாதி பேரு எவ்ளோ பிரச்னையைக் கொடுத்தாலும் சரி, அத அப்போதைக்கு சரி பண்ணிட்டு மறுபடியும் அந்த வண்டியையே ஓட்ட ஆரம்பிச்சுருவாங்க.

அப்படியான ஓர் பிரச்னைதான் வாகனம் ஸ்டார்ட் ஆகாமல் இருப்பது. ஸ்டார்ட் ஆகாது, அதேநேரத்துல கிக்கரை உதைக்கும் ஒவ்வொரு முறையும் எரிபொருளோட வாசம் பயங்கரமா வெளியே வரும். இந்த பிரச்னை உள்ள பைக்குகளை எப்படி கையாள்வது, இந்த பிரச்னை எதனால் வரும், அதை எப்படி சமாளிப்பது என்பது பற்றிய தகவலையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.

கார்புரேட்டரில் உள்ள ஃப்ளோட்டிங் நீடில் (மிதவை ஊசி) சிக்கியிருக்கலாம்:
பைக்கை பற்றி முழுமையாக தெரிந்தவர்கள் ஃப்ளோட் நீடிலின் முக்கிய பணிகள் பற்றி அறிவார்கள். ஆனா, "எங்களுக்கு அதை பற்றி எதுவுமே தெரியாதுங்க" என கூறக் கூடியவரா நீங்க, இதோ உங்களுக்கான மிதவை ஊசி பற்றிய விளக்கம்.
கார்பிலிருந்து மோட்டாருக்கு செல்லும் எரிபொருளின் ஓட்டத்தை நிர்வகிப்பதே மிதவை ஊசியின் முக்கிய பணியாகும். இந்த மாதிரியான தலையாய பணியை ஆற்றி வரும் ஊசிக்கு இடையூறாக அழுக்குகள் அமைகின்றன. எரிபொருள் ஊடாக உட்நுழையும் மாசுகளாலும் இதன் பணி பாதிக்கப்படுகின்றது.

குறிப்பாக, எஞ்ஜினுக்கு செல்ல வேண்டிய எரிபொருள் தடுக்கப்படுகின்றது. ஆகையால், கிக்கரை பல முறை உதைத்தும் ஆனாகாமல், பெட்ரோல் வாசம் மட்டும் வெளியேறும். இத்தகைய சூழலை தவிர்க்க ஆயில் ஃபில்டர் மற்றும் ஏர் ஃபில்டரை முறையாக பராமரிக்க வேண்டும். இவற்றின் வாயிலாக மட்டுமே எஞ்ஜினுக்குள் நுழையும் தேவையற்ற மாசுக்களை தவிர்க்க முடியும்.

இதை செய்யத் தொடங்கும் முன்னர் கார்புரேட்டரில் ஏதேனும் கசிவுகள் இருக்கின்றதா என்பதை செக் செய்ய வேண்டும். இதற்கு அந்த சாதனத்தை பிரித்துதான் பார்க்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை. கார்புரேட்டரின் அடிப்பகுதியை ஆராய்ந்தாலே போதுமானது. வடிகால் துளையில் எரிபொருள் கசிவு இருப்பது தெரியும். இதனை சரி செய்ய கார்புரேட்டரை சுத்தம் செய்தாலே போதும். அது அதன் பணியை மீண்டும் சீராக மேற்கொள்ள தொடங்கிவிடும்.

ஒரு வேலை கார்புரேட்டரின் வடிகால் துளையில் எரிவாயு கசிவு இருப்பது கண்டறியப்பட்டால், மோட்டார்சைக்கிளை தயவு செய்து ஸ்டார்ட் செய்ய முயற்சிக்க வேண்டாம். இது, ஸ்டார்டே ஆகாமல் மேலும் மேலும் சிலிண்டர்களில் எரிபொருளை நிரப்ப செய்துவிடும். எனவே, பிளக்கை கழட்டிவிட்டு பின்னர் உள்சென்ற எரிபொருளை வெளியேற செய்ய வேண்டும். கிக்கரை கைகளால் தள்ளுவதனால் இதனைச் செய்துவிட முடியும்.

பைக்கின் பெட்காக்கை சரி பார்க்கவும்:
நம்முடைய பைக் ஸ்டார்ட் ஆகாமல் இருப்பதற்கு பெட்காக்கில் ஏற்பட்டிருக்கும் அடைப்பு அல்லது கோளாறும் ஓர் காரணமாக இருக்கலாம். எரிபொருள் தொட்டியில் இருந்து எஞ்ஜினுக்கு பெட்ரோல் செல்ல திரவுகோளாக இருக்கும் கருவியே பெட்காக். குறிப்பாக பெட்ரோலின் ஓட்டத்தைக் கட்டுப்படுத்தக் கூடிய வால்வாக இது செயல்படுகின்றது. பலரின் பைக்குகளில் இருந்து பெட்ரோல் சுலபமாகத் திருடப்படுவதற்கு இந்த கருவியே வழிவகுக்கின்றது.

மேலும், சுலபமாக அடைப்பைச் சந்திக்கக் கூடிய கருவியாகவும் இது காட்சியளிக்கின்றது. குறிப்பாக, பெட்ரோல் டேங்கில் உருவாகும் கசடுகளாலேயே இந்த கருவி எளிதில் அடைப்பைச் சந்திக்கின்றது. இந்த அடைப்பே சில நேரங்களில் வாகனத்தை செயலற்றதாக மாற்றிவிடுகின்றது. அதாவது, பெட்ரோல் சீரான ஓட்டத்தை தவிர்க்கச் செய்துவிடுகின்றது.

எனவே உங்களுடைய இருசக்கர வாகனம் ஸ்டார்ட் ஆகாமல் முரண்டுபிடிக்கின்றது என்றால் இந்த கருவியையும் ஒரு முறை சரிபாத்துவிடுங்கள். அதாவது, பெட்காக்கை முழுமையாக கழட்டி சுத்தம் செய்வதன் வாயிலாக மட்டுமே இதில் ஏற்பட்டிருக்கும் கோளாறை சரி செய்ய முடியும்.

எரிபொருள் தொட்டி, பைப் லைன் அல்லது பிற கசிவு:
உங்கள் வாகனம் சற்று பழையது என வைத்துக் கொள்ளுங்கள். அதிக பயன்பாட்டின் காரணமாக எரிபொருள் தொட்டியில் துரு ஏற்பட்டிருக்கலாம். இந்த துருவே நாளடைவில் பெட்காக் மற்றும் எரிபொருள் செல்லும் பைப் லைனில் அடைப்பு ஏற்பட காரணமாக இருக்கின்றன. இதன் விளைவாக கடைசியில் எஞ்ஜினுக்கு செல்ல வேண்டிய எரிபொருள் முறையாக செல்வதில்லை. இதனால் வாகனம் ஸ்டார்ட் ஆவதிலும் சிக்கல் ஏற்படுகின்றது.

எரிபொருள் தொட்டியில் ஏற்படும் இந்த சிக்கலே பைப் லைன், பெட்காக் பிரச்னைகள் மற்றும் எரிபொருள் கசிவிற்கும் காரணமாக அமைந்துவிடுகின்றது. எனவே எரிபொருள் தொட்டியை முதலில் சோதிக்கவும். அதில், துரு அல்லது பிற தூசிக்கள் தங்கியிருக்குமானால் உடனடியாக அவற்றை அகற்ற வேண்டும். இதைச் செய்வதனால் சீரான பெட்ரோல் ஓட்டத்தை எஞ்ஜினுக்கு உறுதிச் செய்ய முடியும்.

சில நேரங்களில் பெட்ரோல் டேங்க் சரியாக இருக்கும். ஆனால், பெட்ரோல் எஞ்ஜினுக்கு செல்வதில் சிக்கல் ஏற்பட்டிருக்கும். உங்கள் வீட்டில் எலி தொல்லை இருந்தால் இந்த பிரச்னையை ஏற்பட்டிருப்பதை ஆச்சரியத்துடன் பார்க்க வேண்டாம். எலிகள் நம் வாகனத்திற்குள் குடிபெயரும் முன் அவை செய்யக் கூடிய முதல் வேலையே வாகனத்தை பாழாக்குவதான். அவை அனைத்து ஒயர்கள் மற்றும் பைப்புகளையும் துண்டித்துவிடும். ஆகையால், வேறு ஏதேனும் பகுதியில் எரிபொருள் கசிவு ஏற்படுகின்றதா என்பதை ஒரு முறை உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

ஸ்பார்க் பிளக் கோளாறு:
நீண்ட நாள் பயன்பாட்டின் காரணத்தினால் ஸ்பார்க் பிளக்குகள் தேய்மானம் அடைவது வழக்கம்தான். சில நேரங்களில் புகை அடைவதாலும் அவற்றால் ஸ்பார்க்கை ஏற்படுத்த முடியாது. இதன் விளைவாக வாகனம் ஸ்டார்ட் ஆவதில் சிக்கல் ஏற்படும். இதைப் போக்க முதலில் ஸ்பார்க் பிளக்கை கழட்டி அதனை சுத்தமான துணியால் சுத்தம் செய்து, வாகனத்தை ஸ்டார்ட் செய்து பார்க்க வேண்டும்.

இதில் பலனளிக்கவில்லை என்றால் ஸ்பார்க் பிளக்கின் மேற்பகுதியை உப்பு காகிதத்தால் தேய்த்து அதன் மீது படர்ந்திருக்கும் அழுக்குகளை அகற்ற வேண்டும். இதன் பின்னர் வாகனத்தை ஸ்டார்ட் செய்ய முயற்சிக்கலாம். இதிலும், பலனளிக்கவில்லை என்றால், ஸ்பார்க்கை மாற்றுவதுதான் மிக சிறப்பானது.

காற்றும் எரிபொருளும் கலக்கும் திறனில் சிக்கல் ஏற்படுதல்:
காற்றும் எரிபொருளும் சீரான நிலையில் கலந்தால் மட்டும் வாகனம் சீராக இயங்கும். இதில் ஏதேனும் பிரச்னை ஏற்படும் எனில் காற்று அல்லது எரிபொருள் இரண்டில் ஏதேனும் ஒன்றின் அளவு அதிகமாகிவிடும். அவ்வாறு, எதன் அளவு அதிகமாகினாலும் வாகனம் ஸ்டார்ட் ஆவதில் சிக்கல் ஏற்படும். காற்று அதிகம் கலந்தால் எறிபொருளின் அளவு மெல்லியதாகவும், காற்று குறைவாக கலந்தால் எரிபொருளின் அளவு அதிகமாகவும் மாறிவிடும். இதன் விளைவு வாகனம் ஸ்டார்ட் ஆவதில் சிக்கல் ஏற்படாதுங்க, மைலேஜ் திறனிலும் பாதிப்பு ஏற்படும்.

மோட்டார்சைக்கிள் இக்னிஷன் டைமிங் ஆஃப் செய்தல்:
மோட்டார்சைக்கிளில் உள்ள இக்னிஷன் டைமிங் ஆஃப் செய்யப்படுவதனால், ஸ்பார்க் பிளக்குகள் கண்ட நேரங்களில் நெருப்பை ஏற்படுத்தக் கூடும். இதன் விளைவாக எரிக்கப்படாமல் சேமிக்கப்படும் எரிபொருள் தானாக வாயுவாக வெளியேற நேரிடும். இந்த நேரங்களிலும் வாகனம் ஸ்டார்ட் ஆகாமல் வாயுவின் வாசம் வெளியேற காரணமாக இருக்கின்றது.

இதுமட்டுமின்றி, பழுதான கார்புரேட்டர் அமைப்பு மற்றும் விரிசல் அல்லது வெடிப்பு போன்றவற்றைச் சந்தித்திருக்கும் வேக்யூம் சிஸ்டங்களாலும் வாகனம் சில நேரங்களில் சரியாக ஸ்டார்ட் ஆவதில்லை. மேலும், எரிபொருள் லீக்கேஜ் வாசத்தை வெளியேற்றவும் அவை காரணமாகிவிடுகின்றன.


Click it and Unblock the Notifications








