ஒரு கிமீ ஓட்ட 25 பைசா மட்டுமே செலவாகும்... பயன்பாடும் ரொம்ப அதிகம்... Nahak Exito Solo இ-மொபட் அறிமுகம்!
முழுக்க முழுக்க இந்தியாவில் தயாரிக்கப்பட்ட நஹக் எக்ஸைடோ சோலோ (Nahak Exito Solo) இ-மொபட் நாட்டில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரத்தை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

டிவிஎஸ் எக்ஸ்எல் மொபட்டை பிரதிபலிக்கக் கூடிய தோற்றத்தில் ஓர் மின்சார வாகனம் இந்தியாவில் விற்பனைக்கு வந்திருக்கின்றது. எக்ஸைடோ சோலோ (Exito Solo) எனும் மொபட் ரக மின்சார இருசக்கர வாகனமே விற்பனைக்கு வந்துள்ளது. இது முழுக்க முழுக்க இந்தியாவில் வைத்து தயாரிக்கப்பட்ட எலெக்ட்ரிக் டூ-வீலர் ஆகும்.

ஹரியானா மாநிலாம், ஃபரிதாபாத்தை மையமாகக் கொண்டு இயங்கும் நஹக் மோட்டார்ஸ் (Nahak Motors) எனும் நிறுவனமே இந்த வாகனத்தை விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது. அறிமுக விலையாக எக்ஸைடோ சோலோ இ-மொபட்டிற்கு ரூ. 85,999 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது.

நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலை தளப்பக்கத்தின் வாயிலாக இந்த பணிகள் மேற்கொள்ளப்பட இருக்கின்றன. இத்துடன், டீலர்கள் வாயிலாகவும் புக்கிங் பணிகள் நடைபெற இருக்கின்றது. இதனைத் தொடர்ந்து, ஏப்ரல் மாதத்தில் இருந்து இருசக்கர வாகனம் டெலிவரி செய்யப்பட உள்ளது.

பார்ப்பதற்கு டிவிஎஸ் எக்ஸ்எல்-ஐப் போன்று காட்சியளிக்கும் இந்த மொபட், அதன் தோற்றத்தைப் போலவே பன்முக கவர்ச்சியான அம்சங்களைத் தன்னுள் தாங்கியிருக்கின்றது. டிஜிட்டல் திரை, எல்இடி மின் விளக்குகள் உள்ளிட்ட அம்சங்கள் நஹக் எக்ஸைடோ சோலோ இ-மொபட்டில் இடம் பிடித்திருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

என்ன மாதிரியான அம்சங்கள் இதில் இடம் பெற்றிருக்கின்றன என்பது பற்றிய விபரம் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படாத காரணத்தினால், எங்களால் அதுகுறித்த தகவலை விரிவாக வெளியட முடியவில்லை. அதேநேரத்தில், இந்த இ-மொபட்டின் பிற முக்கிய அம்சங்கள் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

அந்தவகையில், மிக சிறந்த ரேஞ்ஜ் திறனை வழங்கும் விதமாக 48v 30 AH பேக் பயன்படுத்தப்பட்டிருப்பது தெரிய வந்திருக்கின்றது. இதனை முழுமையாக சார்ஜ் செய்தால் 80 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். அதேநேரத்தில் சுமார் 150 கிலோ எடையுள்ள பொருட்களைக் கூட இ-வாகனத்தில் அசால்டாக எடுத்துச் செல்ல முடியும்.

ஆகையால், எக்ஸ்எல்-ஐப் போலவே இதனை சரக்கு ஏற்றிச் செல்லும் வாகனமாகவும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பது தெரிகின்றது. மேலும், இதன் பேட்டரியை வீட்டில் உள்ள பிளக் பாயிண்ட்டிலேயே வைத்துகூட சார்ஜ் செய்து கொள்ள முடியும் என நிறுவனம் தெரிவித்துள்ளது. அவ்வாறு வீட்டில் உள்ள சாக்கெட்டில் வைத்து சார்ஜ் செய்யும்போது இந்த பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்ய 5 மணி நேரங்கள் வரை தேவைப்படும்.

இந்த இ-மொபட்டை பயன்படுத்தினால் பன்மடங்கு லாபம் கிடைக்கும் என நஹக் மோட்டார்ஸ் தெரிவித்திருக்கின்றது. நஹக் எக்ஸைடோ சோலோ இ-மொபட்டை ஒரு கிமீ இயக்க வெறும் 25 பைசா மட்டுமே செலவாகும் என நிறுவனம் தெரிவித்திருக்கின்றது.

நிறுவனத்தின்கீழ் தற்போது இரு உற்பத்தி ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. ஒன்று ஹரியானாவின் ஃபரிதாபாத்திலும், மற்றொன்று உபி மாநிலத்தின் நொய்டாவிலும் இயங்கிக் கொண்டிருக்கின்றது. நஹக் மோட்டார்ஸ் பன்முக மின்வாகன உற்பத்தியில் ஈடுபட்டு வருகின்றது. அந்தவகையில் இரண்டு சக்கர மின் வாகனம் மட்டுமின்றி, மூன்று சக்கர மின் வாகனங்களையும் நிறுவனம் தயாரித்து வருவது குறிப்பிடத்தகுந்தது.

தான் தயாரிக்கும் மின் வாகனங்களை இந்தியா மட்டுமின்றி சில உலக நாடுகளுக்கும் நிறுவனம் ஏற்றுமதி செய்கின்றது. அந்தவகையில், இங்கிலாந்து, நேபாளம், அரபு நாடுகள், மொரிஷியஸ், வங்காளம், கனடா மற்றும் ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளுக்கு நிறுவனம் இ-வாகனங்களை ஏற்றுமதி செய்து வருகின்றது.

எலெக்ட்ரிக் ரிக்ஷா, இ-சைக்கிள், எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் மற்றும் இ-ஸ்கூட்டர்கள் உள்ளிட்டவற்றை நிறுவனம் உற்பத்தி செய்து வருகின்றது. இவற்றில் இ-ரிக்ஷா ம ற்றும் ஆட்டோக்களை அரசுக்கு ஏற்ப கஷ்டமைஸ் செய்து வழங்கி வருகின்றது. பொதுத்துறை பயன்பாட்டிற்கு ஏற்ப மாடிஃபை செய்து அது வழங்குகின்றது.


Click it and Unblock the Notifications








