மிகவும் ஸ்டைலிஷான நான் ஜீரோ ஒன் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்!! 140கிமீ தொலைவிற்கு சிங்கிள்-சார்ஜில் இயங்குமாம்!
எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் அறிமுகங்கள் அதிகரித்துவரும் தற்போதைய சூழலில், இவற்றின் மூலமாக பயன்பாட்டில் உள்ள எரிப்பொருள் மாற்றம் காண உள்ளது மட்டுமின்றி, ஸ்கூட்டர்களின் தோற்றமும் புதிய பரிணாம வளர்ச்சியை கண்டு வருகின்றன. அதாவது எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் தற்போதைய எரிபொருள் என்ஜின் ஸ்கூட்டர்களை காட்டிலும் மிகவும் ஸ்டைலிஷாக இருகின்றன.

எதிர்காலத்தில் ஸ்கூட்டர்கள் இவ்வாறு தான் இருக்கும் என நாம் ஒரு பத்து வருடங்களுக்கு முன்பு நினைத்ததை போல் ஒரு சில எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் மிகவும் முற்போக்கு சிந்தனை உடன் வடிவமைக்கப்பட்டுள்ளன. அத்தகைய எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுள் ஒன்றுதான் நாம் இந்த செய்தியில் பார்க்கவுள்ள நான் ஜீரோ ஒன் (Naon Zero One) ஆகும்.

ஜெர்மனியை சேர்ந்த எலக்ட்ரிக் வாகன ஸ்டார்ட்-அப் நிறுவனமான நான் தனது முதல் எலக்ட்ரிக் இருசக்கர வாகனமாக ஜீரோ ஒன் -ஐ ஐரோப்பிய சந்தைகளில் அறிமுகப்படுத்தி உள்ளது. இருப்பினும் இன்னமும் இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கான முன்பதிவுகள் துவங்கப்படவில்லை என அங்கிருந்துவரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. எல்1இ மற்றும் எல்3இ என்கிற இரு விதமான வேரியண்ட்களில் இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனை செய்யப்பட உள்ளது.

இவற்றின் விலைகள் முறையே 4,920 யூரோக்கள் மற்றும் 6,420 யூரோக்களாக நிர்ணயிக்கப்பட்டுள்ளன. இந்திய ரூபாயில் இவற்றின் மதிப்புகள் சுமார் ரூ.4.20 லட்சம் மற்றும் ரூ.5.48 லட்சம் ஆகும். இந்த விலைகளில் நம் நாட்டில் ஒரு காரையே புதியதாக வாங்கிவிடலாம். படங்களில் இந்த ஸ்கூட்டரை பார்க்கும்போதே தெரிந்திருக்கும் இத்தகைய விலைகளுக்கு ஏற்ப இது ஒரு மிகவும் ஸ்டைலிஷான பிரீமியம் ஸ்கூட்டர் என்று.

இத்தகைய தோற்றத்தில் எந்த நாட்டிலும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனையிலோ அல்லது அறிமுகப்படுத்தப்பட்டோ இல்லை என்றே நினைக்கிறோம். ஹேண்டில்பாருக்கு கீழே முன் பேனல்கள், பயணிகள் அமருவதற்கு மிகவும் காம்பெக்ட்டான இருக்கை, அடிப்பக்க சேசிஸில் இருந்து இருக்கையை தாங்கி பிடிக்க ஒரு பில்லர் மற்றும் 2 சக்கரங்கள் இவ்வளவுதான் நான் ஜீரோ ஒன் -இல் உள்ளன.

சற்று தூரத்தில் இருந்து படத்தில் இந்த ஸ்கூட்டரின் தோற்றத்தை பார்த்தோமேயானால், இருக்கை காற்றில் மிதப்பு போன்று உள்ளது. அந்த அளவிற்கு நடு பில்லரினை நான் ஸ்டார்ட்-அப் நிறுவனம் நுட்பமாக வடிவமைத்துள்ளது. இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் ஹேண்டில்பாரில் இருந்து இருக்கை நன்கு தூரமாகவே வழங்கப்பட்டுள்ளதை இங்கு கூறியே ஆக வேண்டும். இதன் மூலமாக ஓட்டுனருக்கு கால் வைக்கவும், பொருட்களை வைக்கவும் கூடுதல் இடவசதி கிடைத்துள்ளது.

காற்று இயக்கவியலுக்கு இணக்கமானதாக வடிவமைக்கப்பட்டுள்ள ஸ்கூட்டரின் முன்பக்கத்தின் மத்தியில் அளவில் சிறியதாக எல்இடி ஹெட்லைட் வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் பின்பக்கத்திலும் இருக்கையின் இறுதி முனைக்கு அடியில் டெயில்லைட் அமைப்பும் சிறியதாகவே உள்ளது. தடிமனான அடிப்பகுதியின் மீதாக, இருக்கை அமைப்பிற்கு கீழே பேட்டரி தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது.

இத்தகைய அமைப்பு ஸ்கூட்டருக்கு மிகவும் குறைந்த மைய ஈர்ப்புவிசையை கொடுக்கும். இதன் மூலமாக நிலையான சிறந்த பயணத்தை பெறுவது மட்டுமின்றி, கூடுதல் வேகத்தையும் பெறலாம் என்கிறது நான் நிறுவனம். இந்த நிறுவனத்தின் முதல் எலக்ட்ரிக் ஸ்கூட்டரான ஜீரோ ஒன் -இல் 2.4 kWh லித்தியம்-இரும்பு பேட்டரி தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது. இது சிங்கிள் சார்ஜில் 70கிமீ தொலைவிற்கான இயக்கத்தை வழங்கக்கூடியதாக உள்ளது.

கூடுதலாக பேட்டரி தொகுப்பை வழங்குவதன் மூலம் இதனை 140 கிமீ ரேஞ்சாகவும் அதிகரித்து கொள்ள முடியும். ஜீரோ ஒன் எலக்ட்ரிக் ஸ்கூட்டரானது இரு விதமான வேரியண்ட்களில் விற்பனை செய்யப்பட உள்ளதாக முன்னரே கூறினோம் அல்லவா. இதில் ஆரம்ப நிலை எல்1இ வேரியண்ட்டில் 3 கிலோவாட்ஸ் எலக்ட்ரிக் மோட்டாரும், எல்3இ வேரியண்ட்டில் 7 கிலோவாட்ஸ் எலக்ட்ரிக் மோட்டாரும் வழங்கப்பட உள்ளன.

எலக்ட்ரிக் மோட்டாரின் ஆற்றல் மாற்றம் அடைவதால், ஸ்கூட்டரின் டாப் ஸ்பீடும் மாறுப்படுகிறது. அதாவது எல்1இ வேரியண்ட்டின் அதிகப்பட்ச வேகம் 45kmph மற்றும் எல்3இ வேரியண்ட்டின் டாப் ஸ்பீடு 100kmph ஆகும். இதில் டாப் வேரியண்ட்டில் அதிகப்பட்சமாக 10 கிலோவாட்ஸ் (13.4 பிஎச்பி) மற்றும் 200 என்எம் டார்க் திறன் கிடைக்குமாம். இதனால் தான் ஜீரோ ஒன் -இன் இந்த வேரியண்ட்டால் மணிக்கு 100கிமீ வேகத்தில் இயங்க முடிகிறது.

அலுமினியம் சட்டகத்தில் உருவாக்கப்பட்டுள்ள நான் ஜீரோ ஒன் எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் சஸ்பென்ஷனுக்கு முன்பக்கத்தில் யுஎஸ்டி ஃபோர்க்குகளும், பின்பக்கத்தில் மோனோ-ஷாக்கும் வழங்கப்பட்டுள்ளன. பழையது ஆகினாலும் இந்த ஸ்கூட்டரின் சட்டகத்தையும், உடல் பேனல்களையும் மறுசுழற்சி செய்து மீண்டும் பயன்படுத்த முடியும் என்கிறது நான் நிறுவனம்.

பிரேக்கிங் பணியை கவனிக்க இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் டிஸ்க் ப்ரேக்குகள், ஏபிஎஸ் உடன் வழங்கப்பட்டுள்ளன. மற்றப்படி இந்த ஜீரோ ஒன் ஸ்கூட்டரில் இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல் பகுதி எதுவும் இல்லை. அதற்கு பதிலாக ரைடர் தனது மொபைல் போனை பொருத்தி, பயணம் குறித்து விபரங்களை அறிய நான் நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது. அடிப்பக்க சேசிஸ் உடன் இருக்கையை இணைக்கும் பில்லரினுள் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளதால், இருக்கைக்கு அடியில் நன்கு இடவசதி கிடைத்துள்ளது.


Click it and Unblock the Notifications








