புதிய காஸ்மெட்டிக் அப்கிரேட்களை பெறும் 2022 கவாஸாகி நிஞ்சா 300!! டீசர் வெளியீடு!
2022 கவாஸாகி நிஞ்சா 300 பைக்கின் இந்திய அறிமுகம் புதிய டீசர் படம் ஒன்றின் மூலமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அந்த டீசரையும், புதிய நிஞ்சா 300 பைக்கை பற்றியும் இனி இந்த செய்தியில் விரிவாக பார்ப்போம்.

ஜப்பானை சேர்ந்த பிரபல ஆட்டோமொபைல் தயாரிப்பு நிறுவனமான கவாஸாகி இந்தியாவிலும் அதன் பைக்குகள் வரிசையை தொடர்ச்சியாக அப்டேட் செய்த வண்ணம் உள்ளது. இந்த வகையில் இந்த நிறுவனத்தின் நிஞ்சா 300 மோட்டார்சைக்கிள் கடந்த 2021 மார்ச்சில் பிஎஸ்4-இல் இருந்து பிஎஸ்6-க்கு அப்டேட் செய்யப்பட்டது.

அதனை தொடர்ந்து விரைவில் இந்த கவாஸாகி ஸ்போர்ட்ஸ் பைக் மற்றொரு அப்டேட்டை நடப்பு 2022ஆம் ஆண்டிற்காக பெறவுள்ளது. இதன் வருகையினை தெரிவிக்கும் விதமாகவே டீசர் படம் ஒன்று கவாஸாகி இந்தியா நிறுவனத்தின் சமூக வலைத்தள பக்கங்களில் வெளியிடப்பட்டுள்ளது. ஆனால் இம்முறையும் என்ஜின், சேசிஸ் அளவிற்கு பெரிய அப்கிரேடாக இல்லாமல், காஸ்மெட்டிக் அப்கிரேட்களாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன்படி புதிய நிறத்தேர்வுகள் இந்த கவாஸாகி பைக்கிற்கு வழங்கப்படலாம். இப்போதைய நிஞ்சா 300 பைக்கிற்கு லைம் பச்சை, கேண்டி லைம் பச்சை மற்றும் எபோனி என்ற 3 நிறத்தேர்வுகள் வழங்கப்படுகின்றன. அத்துடன் சில கூடுதல் வசதிகளும் கொடுக்கப்படலாம். தற்சமயம் கவாஸாகி நிஞ்சா 300 பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.3.37 லட்சமாக உள்ளது. புதிய அப்டேட்களினால் இந்த விலையில் சற்று அதிகரிப்பு கொண்டுவரப்படும்.

கவாஸாகியின் விலை குறைவான ஸ்போர்ட்ஸ் மோட்டார்சைக்கிளாக விளங்கும் இது தற்போதுவரையில் ஒரேயொரு வேரியண்ட்டில் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கூடுதல் வேரியண்ட் கொடுக்கப்படுமா என்றால், வழங்கப்படுவதற்கு வாய்ப்பில்லை என்றுதான் சொல்ல வேண்டும். அதேபோல், ஏற்கனவே கூறியதுதான் பைக்கின் என்ஜின் அமைப்பிலும் எந்த மாற்றமும் இருக்காது.
கவாஸாகி நிஞ்சா 300 பைக்கில் 296சிசி லிக்யுடு-கூல்டு, இணையான-இரட்டை சிலிண்டர் என்ஜின் பொருத்தப்படுகிறது. அதிகப்பட்சமாக 11,000 ஆர்பிஎம்-இல் 39 பிஎஸ் மற்றும் 10,000 ஆர்பிஎம்-இல் 26.1 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ள இந்த என்ஜின் உடன் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ், ஸ்லிப்பர் & உதவி க்ளட்ச் வாயிலாக இணைக்கப்படுகிறது. இரும்பு குழாய் சேசிஸின் அடிப்படையில் நிஞ்சா 300 வடிவமைக்கப்படுகிறது.

சஸ்பென்ஷனுக்கு முன்பக்கத்தில் 37மிமீ டெலெஸ்கோபிக் ஃபோர்க்குகளும், பின்பக்கத்தில் 5-வழிகளில் அட்ஜெஸ்ட் ஆகக்கூடிய, வாயுவால் இயங்கக்கூடிய மோனோ-ஷாக்கும் இந்த பைக்கில் கொடுக்கப்படுகிறது. பிரேக்கிங் பணியை இரு-பிஸ்டன் காலிபர்களுடன் ஒற்றை பெடல்-வடிவ டிஸ்க்குகள் இரு சக்கரங்களிலும் கவனித்து கொள்கின்றன. இந்த ஸ்போர்ட்ஸ் பைக்கில் 17-இன்ச் அலாய் சக்கரங்களை கவாஸாகி வழங்குகிறது.
தற்சமயம் நிஞ்சா 300 பைக்கில் செமி-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல், எல்இடி விளக்குகள் மற்றும் இரட்டை-சேனல் ஏபிஎஸ் என மிகவும் அடிப்படை வசதி மட்டுமே கொடுக்கப்படுகிறது. இதில் ஏதேனும் ஒன்றிற்காகவது அப்கிரேடை நிச்சயமாக எதிர்பார்க்கலாம். ஏற்கனவே கூறியதுபோல் மலிவான கவாஸாகி பைக்காக விளங்கும் நிஞ்சா 300 இந்தியாவிலும் தயாரிக்கப்படுகிறது.

விற்பனையில் இதற்கு டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர்310 மற்றும் கேடிஎம் ஆர்சி390 உள்ளிட்டவை போட்டியாக விளங்குகின்றன. இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதால் இவற்றிற்கு சவாலான விலையில் நிஞ்சா 300-ஐ கவாஸாகியால் சந்தைப்படுத்த முடிகிறது. கடந்த 2022 ஜனவரியில் கவாஸாகி நிறுவனம் வெர்ஸஸ்-எக்ஸ் 250 என்ற குறைந்த சிசி என்ஜின் கொண்ட மோட்டார்சைக்கிளை வெளியீடு செய்தது.
அதனை தொடர்ந்து ஜப்பான், இந்தோனிஷியா, தாய்லாந்து மற்றும் மலேசியா உள்ளிட்ட நாடுகளில் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டது. இந்தியாவிலும் அட்வென்ச்சர் பைக்குகளுக்கு நல்ல வரவேற்பு கிடைக்க துவங்கியுள்ளதால், கவாஸாகி நிறுவனம் நிஞ்சா 300-ஐ போல வெர்ஸஸ்-எக்ஸ் 250-ஐயும் இந்தியாவிலேயே தயாரித்து விற்பனை செய்ய யோசிக்கலாம்.

ஒருவேளை அறிமுகமாகினால் பெனெல்லி டிஆர்கே251 மற்றும் சுஸுகி மோட்டார்சைக்கிளின் சமீபத்திய 250சிசி அட்வென்ச்சர் பைக்கான வி-ஸ்ட்ரோம் எஸ்.எக்ஸ் உள்ளிட்டவற்றின் போட்டியை வெர்ஸஸ்-எக்ஸ் 250 சமாளிக்க வேண்டும். சுஸுகியின் புதிய வி-ஸ்ட்ரோம் எஸ்.எக்ஸ் ஆனது கடந்த 2021இல் அறிமுகப்படுத்தப்பட்ட வி-ஸ்ட்ரோம் 650 எக்ஸ்டி-இன் அடிப்படையிலானது என்பது குறிப்பிடத்தக்கது.
சுஸுகி மோட்டார்சைக்கிளின் வி-ஸ்ட்ரோம் எஸ்.எக்ஸ்250 பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.2.14 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சர்வதேச சந்தைகளில் இந்த 250சிசி அட்வென்ச்சர் பைக்கை 2017இல் இருந்தே சுஸுகி நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்தியாவில் ஜிக்ஸெர் 250 மற்றும் எஸ்.எஃப்250 பைக்குகளில் பொருத்தப்படும் அதே 249சிசி தான் புதிய சுஸுகி வி-ஸ்ட்ரோம் எஸ்.எக்ஸ்250-யிலும் வழங்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








