கொஞ்சம் பொறுங்க இந்த மாசம் பத்துக்கும் அதிகமான பைக் அறிமுகமாக காத்திருக்கு... எல்லாமே செம ஸ்டைலான பைக்குங்க!
இந்த ஆகஸ்டு மாதத்தில் ஒட்டுமொத்தமாக 10 புதுமுக மோட்டார்சைக்கிள்கள் அறிமுகமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவை என்ன என்பது பற்றிய விபரங்களையே இந்த பதிவில் பார்க்க உள்ளோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

நடப்பாண்டின் கடந்த மாதங்களைப் போலவே புதிதாக தொடங்கியிருக்கும் இந்த ஆகஸ்டு மாதத்திலும் பல புதுமுக இருசக்கர வாகனங்கள் இந்தியாவில் அறிமுகமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. அண்மையில்கூட ஹோண்டா நிறுவனம் ஓர் புதிய டீசரை வெளியிட்டு, அதன் புதுமுக இருசக்கர வாகனத்தின் இந்திய வருகையை உறுதிப்படுத்தியது.

இதுபோல் இன்னும் சில நிறுவனங்கள் இந்தியாவின் இருசக்கர வாகன சந்தையை அலங்கரித்து பார்க்கும் பொருட்டு புதுமுக மற்றும் அப்டேட் செய்யப்பட்ட மோட்டார்சைக்கிள்களை விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கின்றன. அந்தவகையில், இந்தியாவின் அறிமுக பட்டியலில் உள்ள டாப் 10 மோட்டார்சைக்கிள்களின் லிஸ்டையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.

ராயல் என்பீல்டு ஹண்டர் 350 (Royal Enfield Hunter 350)
இந்தியாவின் முன்னணி இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான ராயல் என்பீலடு அதன் புதுமுக இருசக்கர வாகனத்தை இந்த மாதத்தில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. ஆகஸ்டு 7ம் தேதியே இருசக்கர வாகனம் அறிமுகம் செய்யப்பட உள்ளது. தற்போது நிறுவனத்தின்கீழ் உள்ள இருசக்கர வாகனங்களைக் காட்டிலும் மிகவும் இலகுவான பைக்காக அது விற்பனைக்குக் களமிறங்க இருக்கின்றது.

180 கிலோ எடைக் கொண்ட வாகனமாக அது உருவாக்கப்பட்டுள்ளது. இந்த இருசக்கர வாகனத்தில் ஜே-சீரிஸ் எஞ்ஜினே பயன்படுத்தப்பட உள்ளது. மீட்டியோர் மற்றும் கிளாசிக் 350 மாடல் பைக்குகளில் இந்த மோட்டாரே பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த மோட்டார் அதிகபட்சமாக 20.2 எச்பி பவரையும், 27 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது. சுமார் 1.5 லட்சம் என்கிற குறைவான விலையில் இப்பைக் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகின்றது.

ராயல் என்பீல்டு புல்லட் 350 (2022 Royal Enfield Bullet 350)
ராய்ல் என்பீல்டு நிறுவனம் புதுமுக ஹண்டர் பைக்கை மட்டுமில்லாமல் மற்றுமொரு புதிய பைக்கையும் விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கின்றது. 2022 புல்லட் 350 பைக்கையே அது அறிமுகம் செய்ய இருக்கின்றது. பன்முக புதிய அப்டேட்டுகளுடன் இப்பைக் அறிமுகமாக உள்ளது. இப்பைக்கில் தற்போது பழைய தலைமுறை யுசிஇ மோட்டார் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இதிலும் மாற்றம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேலும், இந்த பைக்கை தனது ஜே-பிளாட்பாரத்தை பயன்படுத்தியே உருவாக்கிக் கொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆகையால், மாடர்ன் அம்சங்கள் பல இப்பைக்கில் எதிர்பார்க்கப்படுகின்றது. ட்ரிப்பர் நேவிகேஷன் போன்ற அம்சங்கள் பல இப்பைக்கில் வழங்கப்பட்டுள்ளன. இப்பைக் ரூ. 1.7 லட்சம் என்ற விலையில் எதிர்பார்க்கப்படுகின்றது.

ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200டி (Hero Xpulse 200T)
ஹீரோ நிறுவனம் அதன் எக்ஸ்பல்ஸ் 200டி பைக்கின் அப்டேட்டட் வெர்ஷனை நடப்பு ஆகஸ்டு மாதத்தில் அறிமுகம் செய்ய இருக்கின்றது. ஸ்போர்ட்ஸ் அம்சங்களைக் கூடுதலாகக் கொண்ட வாகனமாக அது உருவாக்கப்பட்டு வருகின்றது. அதேவேலையில், குறைவான ஆஃப்-ரோடு பயன்பாட்டிற்கான அம்சங்களையும், அதிக வழக்கமான சாலை பயன்பாட்டு அம்சங்களைக் கொண்டாதகவும் இப்பைக் உருவாக்கப்படுகின்றது.

17 அங்குல காஸ்ட் அலாய் வீல்கள், 4வி மோட்டார் உள்ளிட்ட அம்சங்களும் புதுப்பிக்கப்பட்டு வரும் எக்ஸ்பல்ஸ் 200டி பைக்கில் எதிர்பார்க்கப்படுகின்றன. தற்போது விற்பனையில் இருக்கும் இந்த மாடலில் 2வால்வு மோட்டாரே பயன்படுத்தப்பட்டு வருகின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. புதிய நிறம், புதிய இடத்தில் பொருத்தப்பட்ட நிலையில் ஹெட்லேம்ப் உள்ளிட்ட மாற்றங்களும் எக்ஸ்பல்ஸ் 200டி பைக்கில் எதிர்பார்க்கப்படுகின்றது.

புதிய ஹோண்டா இருசக்கர வாகனம் (New Honda BigWing model)
ஹோண்டா நிறுவனம் அண்மையில் ஓர் டீசரை வெளியிட்டது. இதன் வாயிலாக அது புதுமுக இருசக்கர வாகனத்தை இந்தியாவில் அறிமுகம் செய்ய இருப்பது தெரிய வந்திருக்கின்றது. நிறுவனம் புதுமுக இருசக்கர வாகனம்குறித்த வேறு எந்த தகவல்களையும் வெளியிடவில்லை. ஆகஸ்டு 8 ம் தேதி அதன் வெளியீடு இருக்கும் என்கிற தகவலும், புதிய வாகனம் ஹோண்டாவின் பிக்-விங் ஷோரூம் வாயிலாக விற்பனைக்குக் கிடைக்கும் என்பது மட்டுமே தெரிய வந்திருக்கின்றது.

கீவே (Keeway)
கீவே நிறுவனம் ஏற்கனவே விஸ்டே 300 மேக்ஸி ஸ்கூட்டர் மற்றும் சிக்ஸ்டீஸ் 300ஐ ஆகிய இருசக்கர வாகனங்களை இந்திய சந்தையில் வெளியீடு செய்துவிட்டது. இவற்றை தற்போது விற்பனைக்குக் கொண்டு வரும் முயற்சியில் நிறுவனம் தீவிரமாக களமிறங்கியிருக்கின்றது. இந்த நிலையிலேயே இதன் விற்பனைக்கான அறிமுகம் இந்த ஆகஸ்டு மாதத்தில் அரங்கேற இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. ஒட்டுமொத்தமாக இந்நிறுவனம் எட்டு இருசக்கர வாகனங்களை விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கின்றது. இவற்றில் முதல் கட்டமாகவே இரு மாடல்களை ஆகஸ்டில் அறிமுகம் செய்ய கீவே திட்டமிட்டுள்ளது.

ஹார்லி டேவிட்சன் நைட்ஸ்டர் (Harley Davidson Nightster)
ஹார்லி டேவிட்சன் நிறுவனம் கடந்த ஆண்டின் இறுதியிலேயே நைட்ஸ்டர் பைக்கை முதல் முறையாக அறிமுகப்படுத்தியது. இந்த பைக்கையே நிறுவனம் தற்போது அப்டேட் செய்திருக்கின்றது. பேன் அமெரிக்கா 1250 பைக்கில் உள்ள சிறப்பம்சங்களைக் கொண்டே நைட்ஸ்டர் பைக்கை அது புதுப்பித்துள்ளது. இப்பைக்கே நிறுவனத்தின் முதல் க்ரூஸர் ரக வாகனங்களின் அம்சம் கொண்ட அட்வென்சர் பைக்காகும்.

இந்த பைக் ரூ. 16.51 லட்சம் விலையில் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகின்றது. 975 சிசி ரெவல்யூசன் மேக்ஸ் மோட்டாரே இப்பைக்கில் இடம் பெற இருக்கின்றது. இந்த மோட்டார் அதிகபட்சமாக 89 எச்பி பவரையும், 95 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது.

டுகாட்டி ஸ்ட்ரீட்ஃபைட்டர் வி2, பனிகேல் வி4 மற்றும் பனிகேல் வி4 எஸ்பி2 (Ducati Streetfighter V2, Panigale V4 and Panigale V4 SP2)
டுகாட்டி நிறுவனம் ஒட்டுமொத்தமாக மூன்று இருசக்கர வாகனங்களை இந்த மாதத்தில் அறிமுகம் செய்ய இருக்கின்றது. அனைத்து பைக்குளுக்கும் உலகளவில் மிக சூப்பரான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இதே வரவேற்பு இந்தியாவிலும் கிடைக்கும் என்கிற எதிர்பார்ப்பில் நிறுவனம் அனைத்து பைக்குகளையும் இந்தியாவில் களமிறக்க இருக்கின்றது. ரூ. 13.61 லட்சம் தொடங்கி ரூ. 28.40 லட்சம் வரையிலான விலையில் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகின்றது.

மோட்டோ மோரினி (Moto Morini)
இத்தாலி நாட்டை மைமயமாகக் கொண்டு இயங்கும் மோட்டோ மொரினி நிறுவனம், இரு இரட்டையர்கள் பைக் என ஒட்டுமொத்தமாக 4 மோட்டார்சைக்கிள்களை இந்தியாவில் களமிறக்க இருக்கின்றது. இந்நிறுவனம் ஆரி என்றழைக்கப்படும் ஆதிஸ்வர் ஆட்டோ ரைடு இந்தியா உடன் இணைந்தே அதன் தயாரிப்புகளை இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கின்றது.

இரு அட்வென்சர் ரக மோட்டார்சைக்கிள், ஒரு ரெட்ரோ ஸ்ட்ரீட் மற்றும் ஒரு ஸ்கிராம்ப்ளர் என நான்கு புதுமுக இருசக்கர வாகன மாடல்களை அறிமுகம் செய்ய இருக்கின்றது. எக்ஸ்-கேப் 650 எக்ஸ் (X-Cape 650X), எக்ஸ்-கேப் 650 (X-Cape 650), சீய்ம்மெஸ்ஸோ 6 ½ ஸ்கிராம்ப்ளர் (Seiemmezzo 6 ½ Scrambler) மற்றும் சீய்ம்மெஸ்ஸோ 6 ½ ரெட்ரோ ஸ்ட்ரீட் (Seiemmezzo 6 ½ Retro Street) ஆகிய மாடல்களையே இந்திய அறிமுகத்திற்கு அது தேர்ந்தெடுத்துள்ளது. இவற்றின் வெளியீடு நடப்பு ஆகஸ்டு மாத இறுதிக்குள் அரங்கேறிவிடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜோன்டெஸ் (Zontes)
சீன இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமான ஜோன்டெஸ் இந்திய இருசக்கர வாகன சந்தையில் புதிதாக கால்தடம் பதிக்க இருக்கின்றது. இந்நிறுவனம் அதன் வருகையை முன்னிட்டு இந்தியாவில் ஐந்து புதிய இருசக்கர வாகனங்களை (பைக் மற்றும் ஸ்கூட்டர்களை) அறிமுகம் செய்ய இருக்கின்றது. இந்நிறுவனம் ஆதிஸ்வர் ஆட்டோ ரைடு இந்தியா உடன் இணைந்தே நம் நாட்டில் இருசக்கர வாகன விற்பனையை மேற்கொள்ள இருக்கின்றது.


Click it and Unblock the Notifications








