ராயல் என்பீல்டு போஸ்டரில் மறைந்திருக்கும் ரகசியம்... ஊரே இன்னைக்கு இதை பத்திதான் பேசிகிட்டு இருக்கு!
ராயல் என்பீல்டு நிறுவனம் போஸ்டர் மூலமாக மிகவும் முக்கியமான ரகசியம் ஒன்றை வாடிக்கையாளர்களுக்கு கூறியுள்ளதாக தெரிகிறது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவின் 350 சிசி பைக் செக்மெண்ட்டில் ராயல் என்பீல்டு நிறுவனம் இரண்டு புதிய தயாரிப்புகளை வெகு விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது. இதில், ராயல் என்பீல்டு ஹண்டர் 350 (Royal Enfield Hunter 350) ஒன்றாகும். மற்றொன்று புதிய தலைமுறை ராயல் என்பீல்டு புல்லட் 350 (New Gen Royal Enfield Bullet 350) பைக் ஆகும்.

இதில், ராயல் என்பீல்டு ஹண்டர் 350 பைக் எப்போது விற்பனைக்கு வருகிறது? என்பது ஏற்கனவே உறுதி செய்யப்பட்டு விட்டது. இதன்படி ராயல் என்பீல்டு நிறுவனம் ஹண்டர் 350 பைக்கை வரும் ஆகஸ்ட் 7ம் (August 7) தேதி விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது. இது ராயல் என்பீல்டு நிறுவனத்தால் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ள தேதியாகும்.

இதற்கு இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், புல்லட் 350 பைக்கின் புதிய தலைமுறை மாடல் எப்போது விற்பனைக்கு வரும்? என்ற கேள்வி அனைவர் மத்தியிலும் எழுந்துள்ளது. இது தொடர்பாக ராயல் என்பீல்டு நிறுவனம் இன்னும் அதிகாரப்பூர்வமாக எதையும் அறிவிக்கவில்லை. எனினும் ராயல் என்பீல்டு நிறுவனம் நமக்கு தற்போது 'க்ளூ' ஒன்றை கொடுத்துள்ளது.

ராயல் என்பீல்டு நிறுவனம் சமீபத்தில் ஹண்டர் 350 பைக்கிற்கான டீசர் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தது. இதில், 'Bullet Meri Jaan' என எழுதப்பட்ட போஸ்டர் ஒன்றை நம்மால் காண முடிகிறது. இங்கே 'Meri Jaan' என்பது இந்தி வார்த்தையாகும். தமிழில் இதற்கு 'என் அன்பே' என்பதுதான் அர்த்தமாகும். அதாவது 'புல்லட் என் அன்பே' என நாம் இதனை புரிந்து கொள்ளலாம்.

இங்கே சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், இந்த போஸ்டரில், '05.08.22' என்பதையும் காண முடிகிறது. இதையெல்லாம் வைத்து பார்க்கையில், ராயல் என்பீல்டு நிறுவனம் வரும் ஆகஸ்ட் 5ம் தேதி, புல்லட் 350 பைக்கின் புதிய தலைமுறை மாடலை இந்திய சந்தையில் விற்பனைக்கு கொண்டு வரவுள்ளதா? என்ற சந்தேகம் நம் மனதில் எழுகிறது.

ராயல் என்பீல்டு நிறுவனம் இன்னும் இதனை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. இருப்பினும் இந்த போஸ்டர் அப்படிதான் நம்மை யோசிக்க வைக்கிறது. வாடிக்கையாளர்கள் இதை பற்றி அதிகம் பேச வேண்டும் என்பதற்காக ராயல் என்பீல்டு நிறுவனம் இந்த யுக்தியை கையாண்டிருக்கலாம் என கருதப்படுகிறது.

அதற்கு ஏற்ற வகையில், ராயல் என்பீல்டு ரசிகர்கள் பலரும் தற்போது இதை பற்றிதான் அதிகமாக விவாதித்து கொண்டுள்ளனர். ஒருவேளை ராயல் என்பீல்டு நிறுவனம் வரும் ஆகஸ்ட் 5ம் தேதி புதிய புல்லட் 350 பைக்கை விற்பனைக்கு அறிமுகம் செய்யாவிட்டாலும் கூட, பொது பார்வைக்கு கொண்டு வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

ராயல் என்பீல்டு நிறுவனத்தின் கிளாசிக் 350 (Royal Enfield Classic 350), மீட்டியோர் 350 (Royal Enfield Meteor 350) ஆகிய 2 பைக்குகளும், ஜே-பிளாட்பார்ம் (J-platform) அடிப்படையில் கட்டமைக்கப்பட்டுள்ளன. புதிய தலைமுறை புல்லட் 350 பைக்கிலும் இதே பிளாட்பார்ம்தான் பயன்படுத்தப்பட்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதே நேரத்தில் நமக்கு நன்கு பரிட்சமயான 349 சிசி, சிங்கிள்-சிலிண்டர் இன்ஜினை புதிய தலைமுறை புல்லட் 350 பைக் பெற்றிருக்கலாம். இந்த இன்ஜின் அதிகபட்சமாக 20 பிஹெச்பி பவரையும் மற்றும் 27 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியதாக இருக்கும். அதேபோல் புதிய தலைமுறை புல்லட் 350 பைக் பல்வேறு வசதிகளையும் பெற்றிருக்கும்.

இதன்படி ராயல் என்பீல்டு நிறுவனத்தின் ட்ரிப்பர் நேவிகேஷன் (Tripper Navigation) வசதியுடன், அப்டேட் செய்யப்பட்ட இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல், புல்லட் 350 பைக்கின் புதிய தலைமுறை மாடலில் வழங்கப்பட்டிருக்கலாம். இந்த பைக் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் நமக்கு வரும் நாட்களில் தெரியவரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒட்டுமொத்தத்தில் ஹண்டர் 350 மற்றும் புதிய தலைமுறை புல்லட் 350 ஆகிய புதிய பைக்குகளின் வருகை மூலமாக இந்த செக்மெண்ட்டில் ராயல் என்பீல்டு நிறுவனத்தின் ஆதிக்கம் இன்னும் அதிகரிக்கும். இந்த 2 பைக்குகள் தவிர, 650 சிசி செக்மெண்ட்டிலும் புதிய தயாரிப்புகளை களமிறக்குவதற்கு ராயல் என்பீல்டு நிறுவனம் திட்டமிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








