ஒரே நேரத்தில் 3 மின்சார ஸ்கூட்டர்களை அறிமுகப்படுத்திய இந்திய நிறுவனம்... மூனுமே வேற லெவல்! விலையும் கம்மிதான்!
வ்ரோலி (Wroley) நிறுவனம் அதன் 3 மாடல் மின்சார ஸ்கூட்டர்களை இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களைக் கீழே உள்ள பதிவில் பார்க்கலாம், வாங்க.

நொய்டாவை மையமாகக் கொண்டு இயங்கும் மின் வாகன உற்பத்தி நிறுவனம் வ்ரோலி (Wroley). இந்நிறுவனம் இன்று (ஏப்ரல் 12) இன்று ஒரே நாளில் மூன்று விதமான எலெக்ட்ரிக் இருசக்கர வாகன மாடல்களை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. மார்ஸ் (Mars), பிளாட்டினா (Platina) மற்றும் போஷ் (Posh) ஆகிய மின்சார ஸ்கூட்டர் மாடல்களையே நிறுவனம் இன்று விற்பனைக்கு அறிமுகப்படுத்தியிருக்கின்றது.

அனைத்து எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களும் சிங்கிள் சார்ஜில் 90 கிமீ தூரம் பயணிக்கும் திறன் கொண்டவையாகக் காட்சியளிக்கின்றன. அதேநேரத்தில் இவற்றை ஒரு கிமீ இயக்க 0.10 பைசா முதல் 0.15 பைசா வரை மட்டுமே செலவாகும் என நிறுவனம் தெரிவித்துள்ளது. நிறுவனத்தின் இந்த தகவல் மின்வாகன பிரியர்களின் கவனத்தை வெகுவாகக் கவர்ந்துள்ளது.

வ்ரோலி மின்சார ஸ்கூட்டர்கள் தற்போது டெல்லியில் அனைத்து விற்பனையாளர்களிடத்திலும் விற்பனைக்குக் கிடைக்கும் என நிறுவனம் தெரிவித்துள்ளது. நிறுவனத்தின் இந்த அறிவிப்பு பிற நகரங்களில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் கிடைக்காதா என்ற கேள்வியை எழுப்பும் வகையில் அமைந்துள்ளது.

இதற்கேற்ப நிறுவனம் இப்போதே அதன் விற்பனையகங்களை அமைக்கும் பணியில் களமிறங்கியிருக்கின்றது. ஆனால், தலைநகர் டெல்லியில் ஷோரூம்கள் கணிசமாக செயல்பட தொடங்கியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மின்சார ஸ்கூட்டர்கள் மிக சூப்பரான பேட்டரி பேக் தேர்வுகளுடன் விற்பனைக்கு வந்துள்ளது.

48V மற்றும் 60V ஆகிய லித்தியம் அயன் பேட்டரி பேக் தேர்வுகளிலேயே இது விற்பனைக்குக் கிடைக்க இருக்கின்றது. இதுமட்டுமின்றி மூன்று மின்சார ஸ்கூட்டர் மாடல்களிலும் தொழில்நுட்ப வசதிகளை வ்ரோலி நிறுவனம் வாரி வழங்கியிருக்கின்றது.

ரிவர்ஸ் மோட், சாவியில்லாமல் ரிமோட் வாயிலாக ஸ்டார்ட் செய்யும் வசதி, ஆன்டி தெஃப்ட் சென்சார், சைடு ஸ்டாண்டு சென்சார், க்ரூஸ் கன்ட்ரோல், பார்க்கிங் சென்சார், ரியர் டிஸ்க், எல்இடி ரக ஹெட்லேம்ப் மற்றும் பெரிய ஸ்டோரேஜ் வசதி உள்ளிட்ட அம்சங்கள் வ்ரோலி எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் கொடுக்கப்பட்டுள்ளன.

வசதிகளில் ஒரே மாதிரியான நிறுவனத்தின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் காணப்பட்டாலும் அவை தோற்றத்தில் ஒன்றுக்கு ஒன்று மாறுபட்டுக் காட்சியளிக்கின்றன. இத்துடன், கணிசமான சிறப்பம்சங்கள் மாற்றமும் அவற்றிற்கு இடையில் தென்படுகின்றன. ஆகையால், விலை விஷயத்தில் அனைத்தும் வித்தியாசம் கொண்டதாக இருக்கின்றன.

வ்ரோலி நிறுவனம் அதன் மார்ஸ் மின்சார ஸ்கூட்டருக்கு ரூ. 66 ஆயிரம் என்ற விலையை நிர்ணயித்துள்ளது. இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். இதனை நான்கு விதமான நிற தேர்வுகளில் நிறுவனம் விற்பனைக்கு வழங்கும். இத்துடன், 48v/30Ah லித்தியம் அயன் பேட்டரி பேக் தேர்வும் வழங்கப்படும். இதனை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் சுமார் 75 கிமீ முதல் 90 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும்.

இந்த ரேஞ்ஜ் திறனை பெற 4 மணி நேரங்கள் வரை சார்ஜ் செய்ய வேண்டும். அதாவது, முழுமையாக பேட்டரியை சார்ஜ் செய்ய 4 மணி நேரங்கள் தேவைப்படும். இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 25 கிமீ ஆகும். இந்தமாதிரியான குறைந்தபட்ச வேகத்தில் இயங்கக் கூடிய வாகனங்களுக்கு பதிவு சான்றோ அல்லது ஓட்டுநர் உரிமமோ வைத்திருக்க வேண்டிய அவசியம் இருக்காது.

இதேபோல் குறைந்த வேக இயக்கம் திறன் கொண்ட மின்சார ஸ்கூட்டராகவே பிளாட்டினாவும் காட்சியளிக்கின்றது. ஆனால், இதற்கு ரூ. 73,700 என்ற விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. டிஜிட்டல் டிஸ்பிளே, அலாய் வீல், 60V/30Ah லித்தியன் அயன் பேட்டரி பேக், 250W/ BLDC ஹப் மோட்டார் உள்ளிட்ட திறன்களுடன் இது விற்பனைக்குக் கிடைக்கும். இந்த ஸ்கூட்டரில் முழுமையான சார்ஜ் திறனில் 90க்கும் அதிகமான கிமீ பயணிக்க முடியும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.

வ்ரோலி நிறுவனம் விற்பனைக்கு கொண்டு வந்திருப்பதிலேயே அதிக விலைக் கொண்டதாக போஷ் (POSH) இருக்கின்றது. இதன் ஸ்டைல் பிரீமியமானதாக இருப்பதன் காரணத்தினாலேயே இதற்கு அதிக விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இத்துடன் பிற இரு மாடல்களைக் காட்டிலும் கணிசமாக சிறப்பு வசதிகளை அதிகளவில் கொண்டிருப்பதும் இதன் அதிக விலைக்கு காரணமாக இருக்கின்றது.
டிஸ்க் பிரேக், ஆறு விதமான நிற தேர்வுகள், 200 கிலோவிற்கும் அதிகமான எடையைத் தாங்கும் திறன், 140 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் என பல்வேறு சிறப்பு வசதிகளை இதுக் கொண்டுள்ளது. இத்தகைய அம்சங்களின் காரணத்தினால் இதற்கு சற்று அதிக விலையாக ரூ. 78,100 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால், இதன் உச்சபட்ச வேக திறன் மற்ற தயாரிப்புகளைப் போலவே மணிக்கு 25 கிமீட்டராக மட்டுமே இருக்கின்றது. ஆகையால், இதை இயக்கவும் ஆவணங்கள் தேவைப்படாது.


Click it and Unblock the Notifications








