தமிழக வாசிகளாலும் வாங்கிக்க முடியும்... Oben Rorr எலெக்ட்ரிக் பைக் அறிமுகம்... முன் தொகை ரூ. 999 மட்டுமே!
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஓபென் ரோர் ( Oben Rorr) எலெக்ட்ரிக் பைக் இந்தியாவின் ஏழு முக்கிய நகரங்களில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

பெங்களூருவை மையமாகக் கொண்டு இயங்கும் மின் வாகன உற்பத்தி நிறுவனம் ஓபென் இவி (Oben EV). இது ஓர் வளர்ந்து வரும் எலெக்ட்ரிக் வாகன உற்பத்தி நிறுவனம் ஆகும். இந்நிறுவனமே அதன் முதல் மின் வாகன தயாரிப்பை தற்போது இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. ஓபென் ரோர் (Oben Rorr) எனும் எலெக்ட்ரிக் பைக்கையே நிறுவனம் இன்று (மார்ச் 15) விற்பனைக்கு அறிமுகப்படுத்தியிருக்கின்றது.

அறிமுகமாக இப்பைக்கிற்கு ரூ. 99,999 என்ற விலையை ஓபென் இவி நிர்ணயித்துள்ளது. இது மஹாராஷ்டிரா எக்ஸ்-ஷோரூம் விலை ஆகும். மிக விரைவில் இந்த வாகனத்திற்கான புக்கிங் பணிகள் நாட்டில் தொடங்கப்பட உள்ளன. இதற்கான நல்ல நாளாக நிறுவனம் வரும் 18ம் தேதியை நிர்ணயித்துள்ளது.

மார்ச் 18ம் தேதி ஹோலி பண்டிகை தினமாகும். இந்த தினத்தைச் சிறப்பிக்கும் பொருட்டே நிறுவனம் அந்த நாளை தேர்வு செய்திருக்கின்றது. ரூ. 999 என்ற முன்தொகையில் புக்கிங்குகள் ஏற்கப்படும் என நிறுவனம் அறிவித்துள்ளது. நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலை தள பக்கத்தின் வாயிலாக விருப்பமுள்ளவர்கள் ஓபென் ரோர் எலெக்ட்ரிக் பைக்கை புக் செய்துகொள்ளலாம்.

ஓபென் ரோர் மின்சார பைக் ஓர் அதி-திறன் வாய்ந்த இ-வாகனமாகும். இதனை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் சுமார் 200 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும் என நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுமட்டுமின்றி, முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், இணைப்பு வசதியுடன் வழங்கப்பட்டுள்ளது. இதுபோன்று இன்னும் பல அம்சங்களால் ரோர் எலெக்ட்ரிக் பைக் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில், வட்ட வடிவ எல்இடி ஹெட்லேம்ப், எல்இடி டிஆர்எல்-கள், எல்இடி டர்ன் இன்டிகேட்டர்கள் மற்றும் எல்இடி வால் பகுதி மின் விளக்கு, மூ-வண்ணம் உள்ளிட்டவற்றைக் கொண்டு ஓபென் ரோர் இ-பைக் அலங்கரிக்கப்பட்டுள்ளது. அலங்காரத்தில் மட்டுமல்ல ரைடு விஷயத்திலும் மிக சிறப்பான அனுபவத்தை இது வழங்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

இதனை உறுதிப்படுத்தும் வகையில் மிக சிறப்பான பேட்டரி பேக் மற்றும் எலெக்ட்ரிக் மோட்டார் ரோர் பைக்கில் பயன்படுத்தப்பட்டுள்ளது. 4.4 kWh லித்தியம் அயன் பேட்டரி பேக் மற்றும் 10 kW எலெக்ட்ரிக் மோட்டார் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த மோட்டார் 62 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது.

இத்துடன் வெறும் மூன்றே செகண்டுகளில் பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 40 கிமீ எனும் வேகத்தை எட்டிவிடும். இதன் உச்சபட்ச வேகம் மணிக்கு 100 கிமீ ஆகும். இத்துடன் ஈகோ, சிட்டி மற்றும் ஹவோக் ஆகிய மூன்று விதமான ரைடிங் மோட்களும் இப்பைக்கில் கொடுக்கப்பட்டுள்ளன. இவை ஒவ்வொன்றும் வெவ்வேறு விதமான இயக்க அனுபவத்தை வழங்கும்.

ரோர் இ-பைக்கில் இடம் பெற்றிருக்கும் 4.4 kWh லித்தியம் அயன் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்ய 2 மணி நேரங்கள் வரை தேவைப்படும். இத்தகைய நேரத்தை செலவு செய்து, முழுமையாக சார்ஜ் செய்தால் மட்டுமே நிறுவனம் உறுதியளித்திருக்கும் 200 கிமீ ரேஞ்ஜை பெற முடியும்.

முதல் கட்டமாக ஓபென் ரோர் எலெக்ட்ரிக் பைக் இந்தியாவின் ஏழு முக்கிய மாநிலங்களில் மட்டுமே விற்பனைக்குக் கிடைக்கும் என நிறுவனம் அறிவித்துள்ளது. அதில், நம்முடைய தமிழகமும் ஒன்று. ஆனால், மஹாராஷ்டிராவைக் காட்டிலும் நம் மாநிலத்தில் பன் மடங்கு அதிக விலையிலேயே அது விற்பனைக்குக் கிடைக்கும்.

தமிழகத்தில் ரூ. 1,24,999 என்ற விலையிலேயே விற்பனைக்குக் கிடைக்கும். நம்முடைய மாநிலத்தில் மட்டுமல்ல கர்நாடகா, தெலங்கானா ஆகிய மாநிலங்களிலும் இதே விலையிலேயே எலெக்ட்ரிக் பைக் விற்பனைக்குக் கிடைக்கும். இதற்கு அடுத்தபடியாக ராஜஸ்தான் மாநிலத்தில் ரூ. 1,14,999-க்கும், டெல்லியில் ரூ. 1,02,999-க்கும், குஜராத்தில் ரூ. 1,04,999-க்கும் விற்பனைக்குக் கிடைக்கும்.

தமிழகம், கர்நாடகா மற்றும் தெலங்கானா ஆகிய மாநிலங்களைத் தவிர பிற நான்கு மாநிலங்களில் ரோர் குறைவான விலையில் விற்பனைக்குக் கிடைக்க அந்தந்த மாநில அரசு மின் வாகன பயன்பாட்டை ஊக்குவிக்கப்பதற்காக வழங்கும் மானிய திட்டமே காரணமாக இருக்கின்றது.

ஓபென் ரோர் எலெக்ட்ரிக் பைக்கை புக் செய்வோருக்கு வரும் ஜூலை மாதத்தில் இருந்து டெலிவரி கொடுக்கப்படும் என நிறுவனம் அறிவித்துள்ளது. இதுமட்டுமின்றி, ஆறு மாதங்களுக்கு ஓர் மின் வாகனம் என இந்தியாவின் எலெக்ட்ரிக் வாகன சந்தையை அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு அலங்கரிக்க இருப்பதாகவும் நிறுவனம் கூறியுள்ளது.


Click it and Unblock the Notifications








