பிரம்மாண்ட சேல்ஸ் டார்கெட்... ஓகி90 மின்சார ஸ்கூட்டர் மீது அபார நம்பிக்கை வைத்த ஒகினவா... விலை எவ்ளோ தெரியுமா?
ஓகி90 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மீது ஒகினவா நிறுவனம் அபார நம்பிக்கை வைத்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

விற்பனையில் புதிய மைல்கல்லை எட்டுவதற்கு தங்களது சமீபத்திய தயாரிப்பாக ஓகி90 உதவும் என ஒகினவா ஆட்டோடெக் நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது. 1.22 லட்ச ரூபாய் (எக்ஸ் ஷோரூம், ஃபேம்-2 மானியத்திற்கு பிறகு) என்ற விலையில் ஓகி90 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் நேற்றுதான் (மார்ச் 24) விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.

ஓலா எஸ்1 ப்ரோ, பஜாஜ் சேத்தக், ஏத்தர் 450எக்ஸ் மற்றும் டிவிஎஸ் ஐ-க்யூப் உள்ளிட்ட எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு நேரடி போட்டியாக ஒகினவா ஓகி90 களத்திற் இறக்கப்பட்டுள்ளது. இந்திய சந்தையில் ஒவ்வொரு மாதமும் சுமார் 4,000 ஓகி90 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனை செய்ய வேண்டும் என ஒகினவா நிறுவனம் இலக்கு நிர்ணயித்துள்ளது.

இதன்படி ஒரு ஆண்டுக்கு சுமார் 50,000 ஓகி90 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனை செய்வதற்கு ஒகினவா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து ஒகினவா ஆட்டோடெக் நிறுவனத்தின் நிறுவனரும், நிர்வாக இயக்குனருமான ஜிதேந்தர் ஷர்மா கூறுகையில், ''அடுத்த நிதியாண்டிற்குள் குறைந்தபட்சம் 50,000 ஓகி90 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனை செய்ய வேண்டும் என எதிர்பார்க்கிறோம்'' என்றார்.

அடுத்த ஆண்டில் தங்களது வருடாந்திர விற்பனை எண்ணிக்கை 2 லட்சம் யூனிட்களாக உயரும் என ஒகினவா ஆட்டோடெக் நிறுவனம் எதிர்பார்க்கிறது. இந்த விற்பனை எண்ணிக்கை குறைந்தபட்சம் 25 சதவீத பங்களிப்பை (50,000 யூனிட்கள்) ஓகி90 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் செய்ய வேண்டும் என்பது ஒகினவா ஆட்டோடெக் நிறுவனத்தின் விருப்பமாக உள்ளது.

டிமாண்ட் அதிகரித்து வரும் நிலையில், அதனை பூர்த்தி செய்வதற்காக புதிய உற்பத்தி தொழிற்சாலையை அமைப்பதற்கு ஒகினவா ஆட்டோடெக் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் ஒகினவா ஆட்டோடெக் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் வாகனங்களின் உற்பத்தி உயரும். ஒகினவா ஆட்டோடெக் நிறுவனத்தின் தொழிற்சாலை ராஜஸ்தான் மாநிலம் பிவாண்டி பகுதியில் செயல்பட்டு வருகிறது.

இதுதவிர கூடுதலாக ஒரு தொழிற்சாலையை அமைக்கும் பணிகளில் ஈடுபட்டு வருவதாக ஒகினவா ஆட்டோடெக் நிறுவனம் ஏற்கனவே தெரிவித்துள்ளது. இந்த புதிய தொழிற்சாலை மூலம் ஒகினவா ஆட்டோடெக் நிறுவனத்தின் உற்பத்தி திறன் அதிகரிக்கும். சரி, இனி ஒகினவா ஓகி90 எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு வருவோம்.

ஒகினவா ஓகி90 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில், 72V 50AH லித்தியம் அயான் பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பேட்டரியை ஒரு முறை முழுமையாக நிரப்பினால், 160 கிலோ மீட்டர்கள் வரை பயணம் செய்யு முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுவாக அதிக வேகத்தில் பயணம் செய்தால், எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் சிறப்பான ரேஞ்ஜை வழங்காது.

ஆனால் மணிக்கு 90 கிலோ மீட்டர்கள் என்ற வேகத்தில் பயணித்தால் கூட ஒகினவா ஓகி90 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் 160 கிலோ மீட்டர்கள் ரேஞ்ஜை வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நடைமுறை பயன்பாட்டில் உண்மையிலேயே இந்த அளவிற்கு ரேஞ்ச் கிடைத்தால், ஒகினவா ஓகி90 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விற்பனை மிகவும் சிறப்பாக இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.

நாங்கள் மேலே குறிப்பிட்டிருப்பது ஒகினவா ஓகி90 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்தியா முழுவதும் விற்பனை செய்யப்படும் விலையாகும். ஆனால் ஒரு சில மாநிலங்களில் இதை காட்டிலும் குறைவான விலையிலேயே ஒகினவா ஓகி90 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த மாநில அரசுகள், எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மானியம்தான் இதற்கு காரணம்.

எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு வழங்கப்படும் மானியங்கள் மாநிலத்திற்கு மாநிலம் மாறுபடுகிறது. எனவே ஒகினவா ஓகி90 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலையும் மாநிலத்திற்கு மாநிலம் மாறுபடும். ஒகினவா ஓகி90 எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு முன்பதிவுகளை ஏற்கும் பணிகள் ஏற்கனவே தொடங்கப்பட்டு விட்டன. அதே நேரத்தில் டெஸ்ட் ரைடு பணிகள் இந்த வார இறுதியில் தொடங்கவுள்ளது.

இந்தியாவில் ஒகினவா நிறுவனத்திற்கு 450க்கும் மேற்பட்ட டீலர்ஷிப்கள் இருக்கின்றன. இவற்றின் வாயிலாக ஓகி90 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்படவுள்ளது. விற்பனையை அதிகரிக்கும் முயற்சிகளின் ஒரு பகுதியாக, அடுத்த ஆண்டிற்குள் கூடுதலாக 150 டீலர்ஷிப்களை திறப்பதற்கு ஒகினவா ஆட்டோடெக் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








