ஒகினவாவின் புதிய அதிவேக எலக்ட்ரிக் ஸ்கூட்டர், ஒகி90!! புதிய டீசர் வீடியோ வெளியீடு!
ஒகினவாவின் புதிய ஒகி90 (Okhi 90) எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தொடர்பான புதிய டீசர் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்தும், இந்த புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர் குறித்தும் விரிவாக இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

பெட்ரோலின் விலை உயர்வு உள்பட சில காரணிகளால் எலக்ட்ரிக் இருசக்கர வாகனங்களுக்கான தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை கண்கூடாக பார்த்து வருகிறோம். அதிலிலும் குறிப்பாக எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை வாங்குவோரின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக கடந்த சில வருடங்களில் பல இவி ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் புதியதாக சந்தையில் களமிறங்கியுள்ளன.

இதில் ஒன்று ஒகினவா ஆட்டோடெக் ஆகும். இன்னும் சொல்லப்போனால், தற்போதைக்கு இந்தியாவின் முன்னணி எலக்ட்ரிக் இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனங்களுள் ஒன்றாக ஒகினவா விளங்குகிறது. இத்தகைய நிலையை வரும் மாதங்களுக்கும் தொடரும் முனைப்பில் உள்ள இந்த நிறுவனம் அடுத்ததாக புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒன்றினை அறிமுகப்படுத்த உள்ளது.

ஒகி90 என்கிற பெயரில் கொண்டுவரப்படும் இந்த புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வருகிற மார்ச் 24ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதற்கிடையில் குருக்ராமை சேர்ந்த இவி ஸ்டார்ட்-அப் நிறுவனம் ஒகி90 இ-ஸ்கூட்டரை தொடர்ந்து விளம்பரப்படுத்தும் வேலைகளில் ஈடுப்பட்டு வருகிறது. இந்த வகையில் தற்போது மீண்டும் இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தொடர்பான டீசர் வீடியோ ஒன்று ஒகினவா ஆட்டோடெக் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ சமூக வலைத்தள பக்கங்களில் வெளியிடப்பட்டுள்ளது.

வெறும் 10 வினாடிகள் மட்டுமே ஓடக்கூடியதாக உள்ள இந்த டீசர் வீடியோவில் ஸ்கூட்டரின் பின் சக்கரம் ஹைலைட்டாக காட்டப்பட்டுள்ளது. சில தினங்களுக்கு முன் இதேபோன்று வெளியிடப்பட்டிருந்த டீசரில் ஒகி90 ஸ்கூட்டரின் முன்பக்க எல்இடி ஹெட்லேம்ப் அமைப்பு ஹைலைட்டாக சுட்டிக்காட்டப்பட்டு இருந்தது. ஒகி90 ஆனது அதிவேக எலக்ட்ரிக் ஸ்கூட்டராக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதனாலேயே இந்த டீசர் பதிவுகளில் ஸ்கூட்டரின் வேகத்தினை ஒகினவா நிறுவனம் பறைச்சாற்றி வருகிறது. தற்போது வெளியிடப்பட்டுள்ள டுவிட்டர் பதிவிலும், "குறை வேகம் எவரொருவரையும் ஆச்சிரியப்படுத்தாது" என குறிப்பிடப்பட்டுள்ளது. ஒகினவாவின் புதிய ஒகி90 எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்திய சாலைகளில் சில முறை சோதனை ஓட்டங்களின்போதும் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த வகையில் சமீபத்தில் இணையத்தில் வெளியாகி இருந்த இதன் ஸ்பை படங்களில், 2020 ஆட்டோ எக்ஸ்போவில் எத்தகைய தோற்றத்தினை கொண்டிருந்ததோ கிட்டத்தட்ட அதே போன்றதான தோற்றத்தில் இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர் காட்சியளித்தது. தோற்றத்தை பொறுத்தவரையில், ஒகி90-இன் முன்பக்கம் எல்இடி டிஆர்எல்கள் மற்றும் டர்ன் இண்டிகேட்டர்களுடன் நன்கு அகலமானதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதன் சிங்கிள்-பேட் எல்இடி ஹெட்லேம்ப் ஆனது ஹேண்டில்பாருக்கு சரியாக மத்தியில் பொருத்தப்பட்டுள்ளது. ஹேண்டில்பாருக்கு இரு முனைகளிலும் வழங்கப்பட்டுள்ள பின்பக்கத்தை காட்டும் கண்ணாடிகள் க்ரோம்-ஆல் ஃபினிஷ் செய்யப்பட்டவைகளாக கொடுக்கப்பட உள்ளன என்பது சமீபத்தில் வெளியாகி இருந்த ஸ்பை படங்களின் மூலம் தெரிய வந்திருந்தது. இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் அளவில் பெரிய அலாய் சக்கரங்கள் வழங்கப்பட உள்ளன.

அதேநேரம் ஓட்டுனர் கால் வைக்கும்பகுதி நன்கு நம்பகத்தன்மையை வழங்கக்கூடியதாக தடிமனானதாக கொடுக்கப்பட உள்ளது. இதனால் இதற்கு அடியில் தான் பேட்டரி தொகுப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கிறோம். இதன் விளைவாக ஸ்கூட்டரின் நிலைத்தன்மை சிறப்பானதாக இருக்கும். இவற்றுடன் ஒகி90 ஸ்கூட்டரின் மற்ற அம்சங்களாக நீட்டிக்கப்பட்ட பின் இருக்கை, ஒற்றை-துண்டாக சில்வர் நிறத்தில் பின் இருக்கை பயணி பிடித்து கொள்ளும் கம்பி உள்ளிட்டவை வழங்கப்பட உள்ளன.

இத்துடன் இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் பின்பக்கத்தில் போதுமான அளவில் பொருட்களை வைக்கும் பெட்டகம் மற்றும் அகலமான எல்இடி டெயில்லேம்ப் முதலியவற்றை எதிர்பார்க்கிறோம். மற்றப்படி ஒகி90 எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் எத்தகைய திறன் கொண்ட எலக்ட்ரிக் மோட்டார் & பேட்டரி தொகுப்பு வழங்கப்பட உள்ளது என்பது தற்போதைக்கு உறுதியாக தெரியவில்லை.

எங்களுக்கு தெரிந்த வரையில் ஸ்கூட்டரில் இருந்து நீக்கக்கூடியதாக லித்தியம்-இரும்பு பேட்டரி தொகுப்பு வழங்கப்படலாம். இதன் ரேஞ்ச் 150- 180கிமீ என இருக்கலாம். இதனை 1 மணிநேரத்தில் 80% சார்ஜ் நிரப்பக்கூடியதாக ஒகினவா ஆட்டோடெக் நிறுவனம் வழங்கும். ஒகி90 இ-ஸ்கூட்டரின் டாப்-ஸ்பீடை 80-90kmph என எதிர்பார்க்கிறோம். ராஜஸ்தானில் அமைக்கப்பட்டுள்ள ஒகினவாவின் புதிய தொழிற்சாலையில் இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிக்கப்பட உள்ளது.


Click it and Unblock the Notifications








