என்னங்க இவ்வளவு விலை குறைச்சிட்டாங்க... ஓலா இ-ஸ்கூட்டரை வாங்குறதுக்கு டைம் வந்தாச்சு! இப்போ விட்டா அவ்வளவுதான்
பண்டிகை காலத்தை முன்னிட்டு ஓலா எஸ்1 ப்ரோ எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு மிகவும் அட்டகாசமான பணம் தள்ளுபடி சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. அதனை பற்றிய முழுமையான விபரங்களை இனி பார்ப்போம்.

இந்தியாவில் வேகமாக வளர்ச்சிக்கண்டு வரும் எலக்ட்ரிக் ஸ்டார்ட்-அப் நிறுவனமாக விளங்கும் ஓலா எலக்ட்ரிக் கடந்த 2021ஆம் ஆண்டின் மத்தியில் தனது முதல் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களாக எஸ்1 மற்றும் எஸ்1 ப்ரோ -வை அறிமுகப்படுத்தியது. ஆனால் ஸ்கூட்டரை டெலிவிரி கொடுக்கும் பணிகள் டிசம்பர் மாதத்தில் தான் துவங்கப்பட்டன.

அதன்பின் கோடை வெயிலின் தாக்கத்தை தாக்குப்பிடிக்க முடியாமல் ஒரு சில ஸ்கூட்டர்கள் தீப்பிடிப்பு, ஸ்கூட்டர்களின் விலை சற்று அதிகரிப்பு & புதிய அப்டேட்கள் என கடந்த மாதங்களாக ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் விற்பனை ஆனது ஏற்றம், இறக்கமுமாய் இருந்து வருகிறது. இந்த நிலையில் எஸ்1 ப்ரோ எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு அட்டகாசமான சலுகையினை தற்போது ஓலா நிறுவனம் அறிவித்துள்ளது.

பண்டிகை காலத்தை முன்னிட்டு அறிவிக்கப்பட்டுள்ள இந்த சலுகையின்படி, ஓலா எஸ்1 ப்ரோ எலக்ட்ரிக் ஸ்கூட்டரை சுமார் ரூ.10,000 வரையிலான பணம் தள்ளுபடி உடன் வாங்கலாம். அதாவது, எஸ்1 ப்ரோ எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை ரூ.10,000 வரையில் குறைக்கப்படுமாம். இதுகுறித்த அறிவிப்பினை ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் அதன் இணையத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

ரூ.10,000 பணம் தள்ளுபடி மட்டுமின்றி ஏகப்பட்ட சலுகைகளை எஸ்1 ப்ரோ ஸ்கூட்டரை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு வழங்க உள்ளதாக ஓலா தெரிவித்துள்ளது. ஆனால் இதில் பிரச்சனை என்னவென்றால், இந்த சலுகைகள் ஆனது வரும் அக்டோபர் 5ஆம் தேதி வரையில் மட்டுமே அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அக்.5ஆம் தேதிக்கு இன்னும் 1 வார காலம் மட்டுமே உள்ளது.

ஆகையால் ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்க திட்டமிட்டு வருபவர்கள் சலுகை உடன் எஸ்1 ப்ரோ எலக்ட்ரிக் ஸ்கூட்டரை உடனடியாக முன்பதிவு செய்யுங்கள். கடந்த 2021ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டதற்கு பிறகு, ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் அதன் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு அறிவித்துள்ள முதல் சலுகைகள் இதுவாகும். எஸ்1 ப்ரோ இ-ஸ்கூட்டரை பொறுத்தவரையில், ரூ.1.40 லட்சம் என்கிற விலையில் இது விற்பனை செய்யப்படுகிறது.

ஆனால் எஸ்1 ப்ரோ எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வருகிற அக்.5ஆம் தேதி வரையில் மட்டும் ரூ.1.30 லட்சம் என்கிற விலையில் வாங்கலாம். விருப்பப்படும் வாடிக்கையாளர்கள் கூடுதல் தகவல்களுக்கு ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தள பக்கத்தினை அணுகவும். ஓலா நிறுவனத்திற்கு தற்போதைக்கு டீலர்ஷிப் மையங்கள் எதுவும் இல்லை.

ஆதலால், நீங்கள் எஸ்1 & எஸ்1 ப்ரோ ஸ்கூட்டரை இணையம் வாயிலாகவே முன்பதிவு செய்யலாம். நேரடியாக தொழிற்சாலையில் இருந்து ஸ்கூட்டர் உங்கள் வீட்டிற்கு டெலிவிரி செய்யப்படும். தற்போது தசரா & துர்கா பூஜை உள்ளிட்ட பண்டிகை நாட்களை முன்னிட்டு அறிவிக்கப்பட்டுள்ள ரூ.10,000 பணம் தள்ளுபடி ஆனது எஸ்1 ப்ரோ ஸ்கூட்டருக்கு மட்டுமே, விலை குறைவான எஸ்1 மாடலுக்கு கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே கூறியதுபோல், ரூ.10,000 பணம் தள்ளுபடி உடன் மேலும் சில சலுகைகளும் எஸ்1 ப்ரோ எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு அறிவிக்கப்பட்டுள்ளன. அதாவது, கடனுதவிகளுக்கு பூஜ்ஜிய செயலாக்க கட்டணம், 8.99% என்ற குறைந்த வட்டி விகிதம் மற்றும் 5 வருடத்திற்கு உத்தரவாதத்தை நீட்டிப்பதற்கான கட்டணத்தில் ரூ.1,500 குறைப்பு உள்ளிட்டவை அந்த சில சலுகைகளாகும்.

எஸ்1 ப்ரோ எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் 4kWh லித்தியம்-இரும்பு பேட்டரி தொகுப்பு பொருத்தப்படுகிறது. இது முழு சார்ஜில் அதிகப்பட்சமாக 180கிமீ தொலைவிற்கு ஸ்கூட்டரை கொண்டு செல்கிறது. இவ்வளவு தூர பயணத்திற்கு பேட்டரியை வீட்டு உபயோக மின்சாரத்தில் 6.5 மணிநேரங்கள் சார்ஜ் செய்ய வேண்டியிருக்கும்.

ஒரு சில வாடிக்கையாளர்கள் எஸ்1 ப்ரோ ஸ்கூட்டரில் 200கிமீ தொலைவை கூட கடந்துள்ளனர். அத்தகையவர்களுக்கு ஓலா எலக்ட்ரிக் சிஇஓ பாவிஷ் அகர்வால் பரிசு வழங்கி சிறப்பித்துள்ளார். எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனையில் நுழைந்ததை அடுத்து எலக்ட்ரிக் கார்கள் தயாரிப்பிலும் தற்சமயம் ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் ஈடுப்பட்டு வருகிறது.


Click it and Unblock the Notifications








