ஓலா இ-ஸ்கூட்டர்களை வாங்குறதுக்கு என்றே தனிக்கூட்டம் இருக்கு போல!! ஒரே நாளில் 10,000+ ஸ்கூட்டர்கள் புக்கிங்
ஓலா எஸ்1 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் ஒரே நாளில் 10,000க்கும் அதிகமான யூனிட்கள் முன்பதிவு செய்யப்பட்டு பிரம்மிக்க வைத்துள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி தொடர்ந்து பார்க்கலாம்.

எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கான தேவை நாளுக்கு நாள் பெருகி வருவதை அடுத்து, ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் கடந்த 2021 ஆகஸ்ட் மாதத்தில் அறிமுகப்படுத்திய எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் தான் எஸ்1 மற்றும் எஸ்1 ப்ரோ ஆகும். இதில் எஸ்1 ப்ரோ அதிக ரேஞ்ச் மற்றும் டாப்-ஸ்பீடு உடன் சற்று பிரீமியம் தரத்திலானதாக விளங்குகிறது.

கோடைக்காலத்தில் வெயில் தாக்கத்தால் தீப்பிடிப்பு, தரமற்ற பாகங்கள் உள்ளிட்டவற்றால் சில வாடிக்கையாளர்கள் பாதிக்கப்பட்டாலும், ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் விற்பனை தற்போதுவரையில் நல்லப்படியாகவே உள்ளது. இதற்கு மிக சிறந்த உதாரணமாகவே, ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தின் 10,000 எஸ்1 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் ஒரே நாளில் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன.

தமிழகத்தில் ஓசூரில் தொழிற்சாலை அமைத்து செயல்பட்டுவரும் ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் அப்டேட் செய்யப்பட்ட எஸ்1 எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்தது. இதன்படி, எஸ்1 ப்ரோ வேரியண்ட்டில் வழங்கப்பட்டுவந்த கூடுதல் அம்சங்கள் எஸ்1 வேரியண்ட்டிலும் கொண்டுவரப்பட்டன. ஆனால் எஸ்1 -இன் ரேஞ்ச் & டாப்-ஸ்பீடில் எந்த மாற்றமும் இல்லை.

இந்த அப்டேட் செய்யப்பட்ட எஸ்1 எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கான முன்பதிவுகள் அறிவிக்கப்பட்டபடி, கடந்த செப்டம்பர் 1ஆம் தேதி துவங்கப்பட்டது. அந்த நாளில் தான் 24 மணிநேரத்தில் 10,000க்கும் அதிகமான எஸ்1 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் வாடிக்கையாளர்களால் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் இருந்து புதிய ஓலா எஸ்1 எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கான முன்பதிவுகள் எப்போது துவங்கும் என பலர் காத்திருந்துள்ளனர் என்பதை அறிய முடிகிறது.

விருப்பப்படும் வாடிக்கையாளர்கள் புதிய எஸ்1 எலக்ட்ரிக் ஸ்கூட்டரை ஓலா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ மொபைல் போன் செயலி (Ola app) வழியாகவும் அல்லது இணையத்தள பக்கத்தின் வாயிலாகவும் முன்பதிவு செய்துக்கொள்ளலாம். கடந்த செப்டம்பர் 1ஆம் தேதியில் இருந்து விற்பனைக்கு வந்த அப்டேட் செய்யப்பட்ட எஸ்1 எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வாடிக்கையாளர்களுக்கு டெலிவிரி கொடுக்கும் பணிகள் வருகிற செப்டம்பர் 7ஆம் தேதியில் இருந்து துவங்கப்படவுள்ளன.

இந்தியாவின் மிகவும் அட்வான்ஸான எலக்ட்ரிக் ஸ்கூட்டராக விளங்கும் எஸ்1 -இல் 3kWh லித்தியம்-இரும்பு பேட்டரி தொகுப்பு பொருத்தப்படுகிறது. இதன் மூலம் 141கிமீ ரேஞ்சை பெறலாம் என ARAI சான்றளித்துள்ளது. அதேநேரம் ஓலா எலக்ட்ரிக் நிறுவனமோ இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் நார்மல் மோடில் 101கிமீ ரேஞ்சையும், ஈக்கோ மோடில் 128கிமீ ரேஞ்சையும், ஸ்போர்ட்ஸ் மோடில் 90கிமீ ரேஞ்சையும் பெறலாம் என தெரிவிக்கிறது.

ஓலா எஸ்1 ஸ்கூட்டரின் அதிகப்பட்ச வேகம் 95kmph ஆகும். அப்டேட் செய்யப்பட்ட எஸ்1 எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் முக்கிய சிறப்பம்சமாக மூவ் ஒஎஸ் (Move OS) மென்பொருள் சேர்க்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக மியூசிக் ப்ளேபேக், நாவிகேஷன், ஓட்டுனருக்கு தேவையான உதவிகளை வழங்கும் செயலி மற்றும் ரிவர்ஸில் செல்வதற்கான மோட் உள்ளிட்டவற்றை ஓலா எஸ்1 எலக்ட்ரிக் ஸ்கூட்டர் பெற்றுள்ளது.

போர்செலயின் வெள்ளை, ஜெட் கருப்பு, நியோ மிண்ட், கோரல் க்ளாம் மற்றும் லிக்யுடு சில்வர் என்ற நிறத்தேர்வுகளில் புதிய எஸ்1 எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்க முடியும். இதன் எக்ஸ்-ஷோரூம் ஆனது தற்சமயம் ரூ.99,999 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மிக குறைந்த ரூ.2,999 என்ற மாதத்தவணை திட்டத்திலும் எஸ்1 எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வாடிக்கையாளர்கள் வாங்க முடியும்.

புதிய எஸ்1 மட்டுமின்றி, எஸ்1 ப்ரோ வேரியண்ட்டின் புதிய காக்கி எடிசனையும் ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் விற்பனைக்கு கொண்டுவந்துள்ளது. லிமிடெட் எடிசனாக அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் புதிய எஸ்1 ப்ரோ காக்கி -இன் டெலிவிரிகளும் வருகிற செப்டம்பர் 7ஆம் தேதியில் இருந்து ஆரம்பிக்கப்பட உள்ளன. இதற்கிடையில் தனது ஸ்கூட்டர்களில் கொண்டுவர உள்ள மென்பொருள் அப்டேட்டையும் ஓலா எலக்ட்ரிக் உறுதிப்படுத்தி உள்ளது.

மூவ் ஒஎஸ் 3 என்ற பெயரில் வருகிற தீபாவளியில் இருந்து பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட உள்ள இந்த மென்பொருள் அப்டேட்டின் வாயிலாக கூடுதல் ரைடிங் மோட்கள், டிஜிட்டல் சாவி பகிர்வு, அருகாமையில் இருக்கும்போது ஸ்கூட்டரை எளிமையாக ஆன்லாக் செய்யும் வசதி, மேம்படுத்தப்பட்ட எனர்ஜி ரீஜெனரேஷன், ஸ்கூட்டருக்கான ஆவணங்களை சேகரித்தல் உள்ளிட்ட அம்சங்களை பெறலாம் என தெரிவிக்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








