கோதாவில் களமிறங்க தயாராகும் ஹோண்டா... மின்சார வெர்ஷனில் ஆக்டிவாவை களமிறக்க போவதாக தகவல்!
பிரபல இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமான ஹோண்டா (Honda), அதன் புகழ் பெற்ற ஸ்கூட்டர் மாடல்களில் ஒன்றான ஆக்டிவா (Activa)-வை மின்சார வெர்ஷனில் விரைவில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது குறித்த உண்மை நிலவரத்தையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

நாளுக்கு நாள் மின் வாகனங்களுக்கான டிமாண்ட் நாட்டில் அதிகரித்த வண்ணம் இருக்கின்றது. குறிப்பாக, நாட்டு மக்கள் மத்தியில் எலெக்ட்ரிக் டூ-வீலர்களுக்கு நல்ல வரவேற்புக் கிடைத்து வருகின்றது. இது தொடர்ச்சியாக அதிகரித்த வண்ணமும் காணப்படுகின்றது. குறிப்பாக, ஹீரோ எலெக்ட்ரிக், ஏத்தர் உள்ளிட்ட நிறுவனங்களின் மின்சார இருசக்கர வாகனங்களுக்கு பன்மடங்கு வரவேற்பு அதிகரித்துக் காணப்படுகின்றது. அதேவேலையில், இவற்றின் விற்பனை பெட்ரோல் டூ-வீலர்களின் விற்பனையைத் தொட முடியாத நிலையும் இங்கு தென்படுகின்றது.

இருப்பினும் ஒவ்வொரு மாதமும் எலெக்ட்ரிக் டூ-வீலர்களின் விற்பனை மிக சிறப்பான வளர்ச்சியையே பெற்று வருவதை நம்மால் மறுக்க முடியவில்லை. ஆகையால், வெகு விரைவில் மின்சார இருசக்கர வாகனங்களின் விற்பனை பெட்ரோல் டூ-வீலர்களின் விற்பனையை முந்தும் என நம்பப்படுகின்றது.

இந்த மாதிரியான சூழ்நிலையில் பிரபல இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமான ஹோண்டா (Honda), மின் வாகன வர்த்தகத்தில் மிக விரைவில் களமிறங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன. அதாவது, நிறுவனம் அதன் முதல் எலெக்ட்ரிக் டூ-வீலரை சந்தையில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

இதுகுறித்து சமீபத்தில் இடி ஆட்டோ தளத்திற்கு அளித்த பேட்டியில் ஹோண்டா இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனத்தின் தலைவர் அட்சுஷி ஒகடா, "மிக விரைவில் எங்கள் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் வாகனத்தை பார்ப்பீர்கள்" என தெரிவித்திருக்கின்றார். அடுத்த நிதியாண்டிற்குள் அதன் வருகை அமைய இருப்பதாகவும் அவர் உறுதியளித்துள்ளார்.

ஆகையால், ஹோண்டா எலெக்ட்ரிக் டூ-வீலர் மிக விரைவில் அறிமுகமாக இருப்பது உறுதியாகியுள்ளது. இந்த தகவல் மின் வாகன பிரியர்கள் மற்றும் ஹோண்டா இருசக்கர வாகன காதலர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது. ஹோண்டா நிறுவனத்தின் பென்லீ (benly) எலெக்ட்ரிக் இருசக்கர வாகனம் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட நிகழ்வுகள் இந்தியாவில் கடந்த ஆண்டு நடைபெற்றன.

அப்போதில் இருந்தே நிறுவனத்தின் எலெக்ட்ரிக் வாகனம் மிக விரைவில் விற்பனைக்கு வரும் அனைத்து தரப்பினரும் நம்பி வருகின்றனர். இந்த மாதிரியான சூழ்நிலையிலேயே ஹோண்டா கூடிய விரைவிலேயே எலெக்ட்ரிக் டூ-வீலரை விற்பனைக்குக் கொண்டு வர இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால், எந்த மாடல் மின்சார வாகனத்தை அது அறிமுகப்படுத்தும் என்பது தெரியவில்லை.

தற்போது நிறுவனத்தின் புகழ்பெற்ற மாடலாக ஆக்டிவா (Activa) இருக்கின்றது. ஆகையால், இதையே மின்சார வெர்ஷனில் ஹோண்டா விற்பனைக்குக் கொண்டு வரலாம் என தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஆனால், இதுகுறித்த எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலையும் நிறுவனம் இதுவரை வெளியிடவில்லை.

அதேநேரத்தில், நிறுவனம் புதுமுக எலெக்ட்ரிக் வாகனத்தை நாட்டில் களமிறக்கினாலும் ஆச்சரியமடைவதற்கு ஒன்றுமில்லை என வாகனத்துறை வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். ஹோண்டா உற்பத்தி செய்யும் மின்சார இருசக்கர வாகனத்தில் ஸ்வாப்பபிள் பேட்டரி, விரைவில் சார்ஜாகும் தொழில்நுட்பம், அதிக வேகத்தில் இயங்கு திறன் கொண்ட மின் மோட்டார் உள்ளிட்ட பன்முக சிறப்பம்மசங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.

தற்போது, சந்தையில் பஜாஜ் சேத்தக், டிவிஎஸ் ஐ-க்யூப், ஓலா எஸ்1 உள்ளிட்ட எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனைக்குக் கிடைத்து வருகின்றன. அவற்றிற்கு போட்டியாக ஹோண்டா அதன் எலெக்ட்ரிக் டூ-வீலரை விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது. ஏற்கனவே இந்திய மக்களை மின் வாகன பயன்பாட்டை நோக்கி நகர்த்தும் முயற்சியில் அரசு களமிறங்கியிருக்கின்றது.

மத்திய அரசுடன் சேர்ந்து மாநில அரசுகள் சிலவும் மின் வாகன இயக்கத்தை ஊக்கவிக்கும் பணிகளை மேற்கொண்டு வருகின்றது. ஆகையால், ஹோண்டா நிறுவனத்தின் எலெக்ட்ரிக் வாகனம் இந்தியாவில் மிக சிறந்த ரோலை வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஹோண்டாவைப் போன்று இன்னும் பல முன்னணி நிறுவனங்கள் தங்களின் பிரபலமான ஸ்கூட்டர் மாடல்களை மின்சார வெர்ஷனாக அறிமுகம் செய்யும் முயற்சியில் களமிறங்கியிருக்கின்றன. இதுதவிர சில ஆரம்ப நிலை மற்றும் புதுமுக நிறுவனங்களும் தங்களின் புதிய எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்களைக் களமிறக்க தயாராகி வருகின்றன.


Click it and Unblock the Notifications








