ராயல் என்பீல்டுக்கு ஆப்பு வைக்க இந்திய நிறுவனத்துடன் இணைந்த சீன நிறுவனம்! ஒரேடியா 4பைக்குகளை களமிறக்க திட்டம்!
ஒரேடியாக சீன நிறுவனம் ஒன்று இந்தியாவில் நான்கு புதுமுக இருசக்கர வாகனங்களை விற்பனைக்குக் களமிறக்க திட்டமிட்டிருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

சீனாவை மையமாகக் கொண்டு இயங்கும் பிரபல இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமான க்யூஜே மோட்டார் (QJ Motor), வெகு விரைவில் இந்திய சந்தையில் அதன் மோட்டார்சைக்கிள்களை விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கின்றது. ஒன்றல்ல, இரண்டல்ல ஒட்டுமொத்தமாக நான்கு புதுமுக மோட்டார்சைக்கிளை நிறுவனம் அறிமுகம் செய்ய இருக்கின்றது.

இதை உறுதிப்படுத்தும் விதமாக நிறுவனம் தற்போது நான்கு புதுமுக மோட்டார்சைக்கிள்களையும் வெளியீடு செய்திருக்கின்றது. இதுமட்டுமில்லைங்க தனது இந்திய வருகையை முன்னிட்டு, அதாவது, நாட்டில் தனது இருசக்கர வாகனங்களை விற்பனைச் செய்யும் பொருட்டு நாட்டை மையமாகக் கொண்டு இயங்கும் ஆதிஸ்வர் ஆட்டோ ரைடு இந்தியா (Adishwar Auto Ride India) உடன் சீன நிறுவனம் கூட்டணியைத் தொடங்கியிருக்கின்றது.

இந்த நிறுவனத்துடன் இணைந்து ஏற்கனவே பன்னாட்டு நிறுவனங்கள் பல இந்திய சந்தையில் வாகனங்களை விற்பனைச் செய்து வருகின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது. பெனெல்லி, கீவே, மோட்டோ மோரினி மற்றும் ஜோன்டஸ் உள்ளிட்ட நிறுவனங்களே ஆதிஸ்வர் ஆட்டோ ரைடு இந்தியா உடன் இணைந்து இந்தியாவில் செயல்படும் வெளிநாட்டு நிறுவனங்கள் ஆகும்.

இந்த நிறுவனங்களின் வரிசையிலேயே தற்போது புதிதாக க்யூஜே இணைந்திருக்கின்றது. இந்த கூட்டணியின் வாயிலாகவே க்யூ மோட்டார் நிறுவனத்தின் அனைத்து தயாரிப்புகளும் இந்தியாவில் விற்பனைச் செய்யப்பட இருக்கின்றது. நிறுவனம் முதல் கட்டமாகவே நான்கு மோட்டார்சைக்கிள்களை விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது.

இவற்றையே இன்றைய (11 நவம்பர் 2022) தினம் நிறுவனம் வெளியீடு செய்திருக்கின்றது. எஸ்ஆர்சி 250 (SRC 250), எஸ்ஆர்சி 500 (SR C500), என்டிஎக்ஸ் 300 (NTX300) மற்றும் எஸ்ஆர்கே (SRK400) ஆகிய மோட்டார்சைக்கிள்களையே நிறுவனம் இந்தியாவை அலங்கரிக்கும் விதமாக களமிறக்க இருக்கின்றது.

க்யூஜே மோட்டார், ராயல் என்பீல்டு, டிவிஎஸ், யமஹா மற்றும் சுஸுகி ஆகிய நிறுவனங்களின் தயாரிப்புகளுக்கு போட்டியளிக்கும் வகையிலேயே தனது தயாரிப்புகளைக் களமிறக்க இருக்கின்றது. இதற்கு மிக சிறந்த உதாரணம் எஸ்ஆர்சி 250. இது ஓர் மாடர்ன் கிளாசிக் ரோட்ஸ்டர் ரக பைக்காகும். இந்த டூ-வீலர் ராயல் என்பீல்டின் ஹண்டர் 350 மற்றும் டிவிஎஸ் ரோனின் 225 ஆகிய பைக்குகளுக்கு போட்டியாக விற்பனைக்குக் கொண்டு வரப்பட இருக்கின்றது.

இந்த மோட்டார்சைக்கிள் அதிகபட்சமாக 17.5 பிஎச்பி பவரையும், 16.5 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது. இப்பைக்கில் கூடுதல் சிறப்பு வசதிகளாக ஸ்போக் வீல்கள், சிங்கிள் டிஸ்க், டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகள் மற்றும் டூயல் ஸ்பிரிங் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதற்கு அடுத்தபடியாக எஸ்ஆர்சி 500 இருக்கின்றது.

இது ஓர் நியோ-ரெட்ரோ ரக பைக்காகும். இந்த பைக்கில் 480 சிசி மோட்டார் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த மோட்டார் 25.8 பிஎச்பி பவரையும், 36 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது. இது இம்பீரியல் 400 பைக்கிற்கு போட்டியாக இந்தியா வர உள்ளது. மூன்றாவது தயாரிப்பாக என்டிஎக்ஸ் 300 இருக்கின்றது. இந்த பைக்கில் 296 சிசி ட்வின் மோட்டாரே பயன்படுத்தப்பட்டுள்ளது.

இப்பைக்கில் சிறப்பு வசதியாக முழு எல்இடி லைட்டுகள், எல்சிடி இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. க்யூஜே மோட்டார் நிறுவனத்தின் நான்காவது தயாரிப்பாக எஸ்ஆர்கே 400 இருக்கின்றது. இது ஓர் நேக்கட் ஸ்ட்ரீட் பைக்காகும். இந்த பைக் கேடிஎம் 390 ட்யூக் மற்றும் பிஎம்டபிள்யூ ஜி310ஆர் பைக்கிற்கு போட்டியாக விற்பனைக்குக் கொண்டு வரப்பட இருக்கின்றது.


Click it and Unblock the Notifications








