ரூ.1.50 லட்சத்தை நெருங்கியது ராயல் என்பீல்டு புல்லட் 350-இன் ஷோரூம் விலை!! மற்றவையின் விலைகளும் அதிகரிப்பு!
பழமையான, முன்னணி மோட்டார்சைக்கிள் தயாரிப்பு நிறுவனமான ராயல் என்பீல்டு அதன் மோட்டார்சைக்கிள்களின் விலைகளை குறிப்பிடத்தக்க அளவில் உயர்த்தியுள்ளது. இதுகுறித்த முழுமையான விபரங்களை இனி தொடர்ந்து பார்க்கலாம்.

புதிய நிதியாண்டு துவங்கினாலே விற்பனை வாகனங்களின் விலைகள் உயர்த்தப்படும் என்பது எழுதப்படாத விதியாக உள்ளது. இந்த வகையில் இந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து துவங்கிய 2022-23 நிதியாண்டிலும் பல்வேறு ஆட்டோமொபைல் பிராண்ட்கள் விலை உயர்வுகளை மேற்கொண்டு வருகின்றன.

இதன்படி தற்போது பிரபலமான சென்னை மோட்டார்சைக்கிள் பிராண்டான ராயல் என்பீல்டும் அதன் பைக்குகளின் விலைகளை கணிசமாக அதிகரித்துள்ளது. தொடர்ந்து அதிகரித்துவரும் வாகன பாகங்களின் விலை உயர்வுகள் மற்றும் போக்குவரத்து செலவுகளினால் இந்த விலை உயர்வு கொண்டுவரப்பட்டிருக்க வேண்டும் என கூறப்படுகிறது.

இந்த விலை உயர்வின்படி, மீட்டியோர் 350-ஐ தவிர்த்து ராயல் என்பீல்டு 350சிசி பைக்குகளின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் தலா ரூ.3,000 உயர்த்தப்பட்டுள்ளன. இதன் விளைவாக, மலிவான ராயல் என்பீல்டு பைக்காக விற்பனை செய்யப்பட்டு வரும் புல்லட் 350-இன் ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.1.45 லட்சத்தில் இருந்து ரூ.1.48 லட்சமாக அதிகரித்துள்ளது. அதிகப்பட்சமாக புல்லட் 350-இன் எலக்ட்ரிக் ஸ்டார்ட் வேரியண்ட் ரூ.1.63 லட்சம் என்கிற விலையில் கிடைக்கும்.

இதற்கடுத்து, ராயல் என்பீல்டின் சிறந்த விற்பனை மோட்டார்சைக்கிளாக விளங்கும் கிளாசிக் 350-இன் புதிய எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.1.90 லட்சத்தில் இருந்து ரூ.2.21 லட்சம் வரையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. இந்த ரெட்ரோ-ஸ்டைல் மோட்டார்சைக்கிள் இந்தியாவில் ரெட்டிட்ச், ஹல்சியான், சிக்னல்ஸ், டார்க் & க்ரோம் உள்ளிட்ட நிறத்தேர்வுகளில்
கிடைக்கிறது.

மீட்டியோர் 350 ஆனது ரூ.2,000-இல் இருந்து ரூ.4,000 வரையில் விலை அதிகரிப்பை வேரியண்ட்டை பொறுத்து ஏற்றுள்ளது. இதனால் மீட்டியோர் 350-இன் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.2.05 லட்சத்தில் இருந்து ரூ.2.22 லட்சம் வரையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. 2020ஆம் ஆண்டின் இறுதியில் அறிமுகப்படுத்தப்பட்ட மீட்டியோர் 350 பைக் ஃபயர்பால், ஸ்டெல்லர் & சூப்பர்நோவா உள்ளிட்ட வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படுகிறது.

ராயல் என்பீல்டின் சமீபத்திய அறிமுகமான ஸ்க்ராம் 411 பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.2,000-இல் இருந்து ரூ.3,000 வரையில் உயர்த்தப்பட்டுள்ளன. கடந்த மார்ச் மாதத்தில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்ட ஸ்க்ராம் 411 பைக்கின் புதிய எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.2.05 லட்சத்தில் இருந்து ரூ.2.11 லட்சம் வரையில் கொண்டுவரப்பட்டுள்ளன. அறிமுகத்தின்போது இதன் விலைகள் ரூ.2.03 லட்சத்தில் இருந்து ரூ.2.08 லட்சம் வரையில் இருந்தன.

ஸ்க்ராம் 411 சாலை-சார்ந்த பைக்கின் அட்வென்ச்சர் வெர்சனான ஹிமாலயனின் ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.2.19 லட்சமாக அதிகரித்துள்ளது. ஏனெனில் இதன் விலைகள் தலா ரூ.4,000 உயர்த்தப்பட்டுள்ளன. முன்பு ஹிமாலயனின் ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.2.15 லட்சமாக இருந்தது. இந்த அட்வென்ச்சர் பைக்கின் புதிய அதிகப்பட்ச எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.2.26 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சில்வர்-க்ரே, நீலம்-சிவப்பு & கருப்பு-பச்சை என்ற 3 விதமான ட்யுவல்-டோன் நிறத்தேர்வுகளில் ஹிமாலயன் கிடைக்கிறது. இவற்றுடன் ராயல் என்பீல்டின் 650சிசி பைக்குகளான இண்டர்செப்டர் 650-இன் விலை ரூ.2,000-இல் இருந்து ரூ.3,000 வரையிலும், காண்டினெண்டல் ஜிடி650 ரூ.2,000- ரூ.4,000 வரையிலும் விலை அதிகரிப்பை ஏற்றுள்ளன.

இண்டர்செப்டர் 650-இன் புதிய எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.2.88 லட்சத்தில் இருந்து ரூ.3.13 லட்சம் வரையிலும், தற்போதைக்கு ராயல் என்பீல்டின் விலையுயர்ந்த பைக்காக விளங்கும் காண்டினெடல் ஜிடி650-இன் புதிய எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.3.05 லட்சத்தில் இருந்து ரூ.3.31 லட்சம் வரையிலும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. இவையே ராயல் என்பீல்டு பிராண்டில் இருந்து இப்போதைக்கு விற்பனையாகும் பைக்குகளாகும்.

அதேநேரம் ஸ்க்ராம் 411 போன்று, தற்போதைய 350சிசி & 650சிசி பைக்குகளின் ப்ளாட்ஃபாரங்களின் அடிப்படையிலான புதிய தயாரிப்புகளும் ராயல் என்பீல்டு பிராண்டில் இருந்து வெளிவரவுள்ளன. இதில் ஹண்டர் 350, புதிய தலைமுறை புல்லட் 350, சூப்பர் மீட்டியோர் 650 & ஷூட்கன் 650 உள்ளிட்டவை அடங்கவுள்ளன. இவை மட்டுமின்றி ஹிமாலயனின் புதிய தலைமுறை மாடலும் ஆற்றல்மிக்க 450சிசி என்ஜினை பெற்றுவரவுள்ளது.


Click it and Unblock the Notifications








