தோல்விய ஏத்துகிட்டு ஒதுங்கிடுங்க.. ராயல் என்பீல்டு நகர்த்தும் வெற்றி காய்! சூப்பரான புதுமுக பைக் வெளியீடு!
சூப்பர் மீட்டியோர்650 பைக்மீது பெரிதும் எதிர்பார்ப்பு நிலவி வந்தநிலையில் நேற்றைய தினம் அப்பைக்கை ராயல் என்பீல்டு நிறுவனம் வெளியீடு செய்தது. இதைத்தொடர்ந்து, சற்றும் எதிர்பார்த்திராத மற்றுமொரு புதுமுக பைக்கையும் தற்போது நிறுவனம் வெளியீடு செய்துள்ளது.

தமிழக தலைநகர் சென்னையை தலைமையமாகக் கொண்டு இயங்கும் ராயல் என்பீல்டு நிறுவனம் இருசக்கர வாகன பிரியர்களைக் கவரும் விதமாக புதுமுக வாகனங்களை வெளியீடுச் செய்துக் கொண்டிருக்கின்றது. தற்போது இத்தாலியில் உள்ள மிலன் பகுதியில் 2022 இஐசிஎம்ஏ வாகன கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

உலக புகழ்பெற்ற இந்த வாகன கண்காட்சியில் உலகம் முழுவதிலும் உள்ள வாகன உற்பத்தியாளர்கள் தங்களின் படைப்புகளைக் காட்சிப்படுத்தி வருகின்றனர். அந்தவகையில், ராயல் என்பீல்டு நிறுவனம் ஏற்கனவே சூப்பர் மீட்டியோர் 650 பைக்கைக் காட்சிப்படுத்தியிருந்த நிலையில் தற்போது மற்றுமொரு அட்டகாசமான தயாரிப்பையும் அது வெளியீடு செய்திருக்கின்றது.

650 ஸ்கிராம்ப்ளர் எனும் பைக் மாடலையே நிறுவனம் காட்சிப்படுத்தியுள்ளது. உலக அரங்கில் இந்த வாகனம் காட்சிப்படுத்தப்படுவது இதுவே முதல் முறையாகும். நிறுவனத்தின் கான்டினென்டல் ஜிடி 650 மற்றும் இன்டர்செப்டார் 650 ஆகிய இரு 650 சிசி பைக்குகளுக்கும் உலகளவில் நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இதற்கு கிடைத்த வெற்றியைத் தொடர்ந்தே ராயல் என்பீல்டு நிறுவனம் 650 சிசி பைக்குகளைக் களமிறக்குவதில் அதிக ஆர்வத்துடன் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது.

இதன் வெளிப்பாடாகவே சூப்பர் மீட்டியோர் 650 மற்றும் தற்போதைய ஸ்கிராம்ப்ளர் 650-ன் வெளியீடு அமைந்துள்ளது. முற்றிலும் மாறுபட்ட ஸ்டைல் மற்றும் அம்சங்களைக் கொண்டதாக ஸ்கிராம்ப்ளர் 650 உருவாக்கப்பட்டுள்ளது. 650 சந்தையை ஒட்டுமொத்தமாக ஆக்கிரமிப்பு செய்யும் விதமாக இந்த வாகனங்களை வெளியீடு செய்திருக்கின்றது. ராயல் என்பீல்டு நிறுவனத்தின் இந்த தயாரிப்பு ராயல் என்பீல்டோடையதுதானா என்கிற சந்தேகத்தை எழுப்பச் செய்யும் அளவிற்கு உருவாக்கப்பட்டுள்ளது.

நிறுவனத்தின் புதிய வெளியீடான ஹண்டர் 350 பைக்கில் இடம் பெற்றிருக்கும் அம்சங்கள் சில இந்த பைக்கில் பயன்படுத்தப்பட்டிருப்பதை நம்மால் காண முடிகின்றது. அந்தவகையில், இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், சுவிட்சுகள், இன்டிகேட்டர்கள் மற்றும் டெயில் லேம்புகள் உள்ளிட்டவை ஹண்டர் 350 இடம் இருந்து பெறப்பட்டதைப் போல் காட்சியளிக்கின்றது.

அதேவேலையில் சில தனித்துவமான அம்சங்களும் இந்த பைக்கில் இடம் பெற்றிருக்கின்றன. ஆன்ரோடு- ஆஃப்ரோடு என இரட்டைப் பயன்பாட்டு வசதிக் கொண்ட டயர்கள், ஒற்றை துளைக் கொண்ட இரு பாதை எக்சாஸ்ட், வட்ட வடிவ ஹெட்லேம்ப், டியர் டிராப் ரக ஃப்யூவல் டேங்க், ஒற்றை இன்ஸ்ட்ரூமென்ட் பாட், அகலமான ஹேண்டில் பார் மற்றும் மையப்பகுதியில் ஃபூட் பெக்குகள் என பல தனித்துவமான அம்சங்கள் இந்த இருசக்கர வாகனத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

ஏற்கனவே கூறியதைப் போல் இந்த பைக்கில் ராயல் என்பீல்டு நிறுவனம் அதன் இரட்டையர்கள் பைக் மாடலில் பயன்படுத்தி வரும் 648 சிசி பாரல்லல் ட்வின் மோட்டாரையே பயன்படுத்தியிருக்கின்றது. இந்த மோட்டார் 47 பிஎச்பி பவரையும், 52 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது. இதே மோட்டாரே இதற்கு முன்னதாக வெளியீடு செய்யப்பட்ட சூப்பர் மீட்டியோர் 650 பைக்கிலும் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது.

ராயல் என்பீல்டு நிறுவனம் இந்த பைக்கை (சூப்பர் மீட்டியோர் 650) இன்னும் ஒரு சில தினங்களில் விற்பனைக்குக் கொண்டு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. ஆனால், அது எப்போது விற்பனைக்கு வரும் என்கிற விபரம் இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை. இருப்பினும், இருசக்கர வாகன பிரியர்கள் மத்தியில் இப்பைக்கின் மீதான வரவேற்பு பலமடங்கு அதிகரித்துக் காணப்படுகின்றது.

இதைத்தொடர்ந்து, தற்போது காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் ஸ்கிராம்ப்ளர் 650 பைக்கும் விற்பனைக்குக் கொண்டு வரப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால், இதன் வருகைகுறித்த எந்தவொரு தகவலையும் ராயல் என்பீல்டு இதுவரை வெளியிடவில்லை. ஆகையால், இதன் வருகை அமைய இன்னும் பல மாதங்கள் எடுக்கலாம் என தெரிகின்றது.

இது விற்பனைக்கு வரும்பட்சத்தில் பலரின் மனம் கவர்ந்த கனவு வாகனமாக மாறும் என யூகிக்கப்படுகின்றது. ஏனெனில் அந்தளவிற்கு அழகியதாகவும், தனித்துவமான வசதிகள் கொண்டதாகவும் இப்பைக்கை ராயல் என்பீல்டு உருவாக்கியிருக்கின்றது.
குறிப்பு: முதலில் வழங்கப்பட்ட நான்கு படங்கள் உதாரணத்திற்கு வழங்கப்பட்டவை ஆகும்.


Click it and Unblock the Notifications








