பொங்கலுக்கு நிறைய பேர் இந்த பைக்கைதான் வாங்க போறாங்க... புத்தாண்டை அதிரடியாக தொடங்கும் ராயல் என்பீல்டு!
இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள பைக்குகளில் ஒன்று ராயல் என்பீல்டு சூப்பர் மீட்டியோர் 650 (Royal Enfield Super Meteor 650). இத்தாலியின் மிலன் நகரில் நடைபெற்ற 2022 எக்மா (2022 EICMA) கண்காட்சியில், ராயல் என்பீல்டு நிறுவனம் சூப்பர் மீட்டியோர் 650 பைக்கை காட்சிக்கு வைத்தது.
இதை தொடர்ந்து கோவாவில் நடைபெற்ற ரைடர் மேனியா (Rider Mania) திருவிழாவில், இந்த பைக்கின் இந்திய அறிமுகம் அரங்கேறியது. ஆனால் இந்த பைக்கின் விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை. வரும் ஜனவரி மாத தொடக்கத்தில், சூப்பர் மீட்டியோர் 650 பைக்கின் விலைகளை ராயல் என்பீல்டு நிறுவனம் அறிவிக்கவுள்ளது. இதன் மூலம் 2023ம் ஆண்டில் ராயல் என்பீல்டு நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்யும் முதல் முக்கியமான தயாரிப்பு என்ற பெருமையை சூப்பர் மீட்டியோர் 650 பெறவுள்ளது.

ராயல் என்பீல்டு சூப்பர் மீட்டியோர் 650 பைக், ஸ்டாண்டர்டு மற்றும் டூரர் ஆகிய 2 வேரியண்ட்களில் விற்பனைக்கு கிடைக்கும். இதில், ஸ்டாண்டர்டு வேரியண்ட் மொத்தம் 2 கலர் ஆப்ஷன்களில் விற்பனை செய்யப்படும். அவை அஸ்ட்ரல் (நீலம், கருப்பு, பச்சை) மற்றும் இன்டர்ஸ்டெல்லர் (சாம்பல் மற்றும் பச்சை). மறுபக்கம் டூரர் வேரியண்ட் ஆனது, செலஸ்டியல் (நீலம் மற்றும் சிகப்பு) கலர் ஆப்ஷனில் விற்பனைக்கு கிடைக்கும்.
அதே நேரத்தில் இந்த 2 வேரியண்ட்களிலும், முழு எல்இடி ஹெட்லேம்ப், ஷோவா யூஎஸ்டி ஃபோர்க் சஸ்பென்ஸன் மற்றும் ட்ரிப்பர் நேவிகேஷன் ஆகிய வசதிகள் ஸ்டாண்டர்டாக வழங்கப்படும். அதே சமயம் ராயல் என்பீல்டு சூப்பர் மீட்டியோர் 650 பைக்கில், 648 சிசி, ஏர் மற்றும் ஆயில் கூல்டு, பேரலல் ட்வின் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 7,250 ஆர்பிஎம்மில் 47 பிஹெச்பி பவரையும், 5,650 ஆர்பிஎம்மில் 52 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது.
ராயல் என்பீல்டு இன்டர்செப்டார் 650 (Interceptor 650) மற்றும் கான்டினென்டல் ஜிடி 650 (Continental GT 650) ஆகிய பைக்குகளிலும் இதே இன்ஜின்தான் பொருத்தப்பட்டுள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். இதற்கிடையே ராயல் என்பீல்டு சூப்பர் மீட்டியோர் 650 பைக்கின் எடை 241 கிலோ ஆகும். நாங்கள் ஏற்கனவே குறிப்பிட்டதை போல், ராயல் என்பீல்டு நிறுவனம் இன்னும் சூப்பர் மீட்டியோர் 650 பைக்கின் விலைகளை அறிவிக்கவில்லை.
எனினும் இந்த பைக்கின் ஸ்டாண்டர்டு வேரியண்ட்டின் விலை 3.50 லட்ச ரூபாய் என்ற அளவிலும், டூரர் வேரியண்ட்டின் விலை 4 லட்ச ரூபாய் என்ற அளவிலும் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ராயல் என்பீல்டு சூப்பர் மீட்டியோர் 650 பைக்கின் விலை எவ்வளவு? என்ற கேள்விக்கு வரும் ஜனவரி மாத தொடக்கத்தில் நமக்கு அதிகாரப்பூர்வமாக பதில் கிடைத்து விடும். இதனை தெரிந்து கொள்வதற்காக ராயல் என்பீல்டு ரசிகர்கள் பலரும் ஆவலுடன் காத்து கொண்டுள்ளனர். நீங்கள் பொங்கல் (Pongal) பண்டிகையை முன்னிட்டு புதிய ராயல் என்பீல்டு பைக்கை வாங்குவதாக இருந்தால், சூப்பர் மீட்டியோர் 650 பைக்கை பரிசீலனை செய்யலாம்.
ராயல் என்பீல்டு நிறுவனம் இந்தியாவின் 650 சிசி செக்மெண்ட்டில் இன்னும் பல்வேறு பைக்குகளை விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கு திட்டமிட்டுள்ளது. அத்துடன் 450 சிசி செக்மெண்ட்டிலும் புதிய பைக்குகளை விற்பனைக்கு அறிமுகம் செய்யும் பணிகளை ராயல் என்பீல்டு நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. இவை எல்லாம் தவிர, 350 சிசி செக்மெண்ட்டிலும், ராயல் என்பீல்டு நிறுவனத்தின் புதிய தயாரிப்புகள் விரைவில் களமிறக்கப்படவுள்ளன. எனவே ராயல் என்பீல்டு ரசிகர்கள் கொண்டாட்டமான மனநிலையில் இருக்கின்றனர்.
ராயல் என்பீல்டு நிறுவனம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஹண்டர் 350 (Royal Enfield Hunter 350) என்ற புதிய பைக்கை இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. தற்போதைய நிலையில் இந்த பைக்கின் ஆரம்ப விலை 1.50 லட்ச ரூபாய் மட்டுமே. அதே நேரத்தில் இந்த பைக்கின் டாப் வேரியண்ட்டின் விலை 1.72 லட்ச ரூபாயாக உள்ளது. இவை எக்ஸ் ஷோரூம் விலையாகும். ஓரளவிற்கு குறைவான விலையில் வந்துள்ளதால், இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் ராயல் என்பீல்டு ஹண்டர் 350 பைக்கிற்கு உற்சாகமான வரவேற்பு கிடைத்துள்ளது.


Click it and Unblock the Notifications








