ஹோண்டா விற்பனை சரிவு... சுஸூகி, ஹீரோ அபார வளர்ச்சி... ஸ்கூட்டர் விற்பனையில் ஏற்படும் திடீர் மாற்றம்....
கடந்த மே மாதம் இந்தியாவில் விற்பனையான டாப் 10 ஸ்கூட்டர்கள் குறித்த பட்டியலைக் காணலாம் வாருங்கள்.இதில் முதலிடத்தில் ஹோண்டா ஆக்டிவா இருந்தாலும் விற்பனையில் கடந்த ஏப்ரல் மாதத்தை விட சரிவை சந்தித்துள்ளது. ஆனால் ஹீரோ மற்றும் சுஸூகி ஸ்கூட்டர்கள் விற்பனையில் எதிர்பாராத வளர்ச்சியை சந்தித்துள்ளனர்.

இந்தியாவில் கடந்த மே 2022ல் விற்பனையான இருசக்கர வாகனங்கள் குறித்த ரிப்போர்ட்கள் தற்போது வெளியாகியுள்ளது. அதில் ஸ்கூட்டர்கள் விற்பனை எப்படி இருக்கிறது. எந்தெந்த ஸ்கூட்டர்கள் அதிகமாக விற்பனையாகியுள்ளது. எது குறைவாக விற்பனையாகியுள்ளது? உள்ளிட்ட பல தகவல்களை இங்கே காணப் போகிறோம். இதில் கடந்தாண்டு மே மாதம் கொரோனா பாதிப்பு நாடுமுழுவதும் இருந்ததால் கடந்த ஏப்ரல் மாத விற்பனையுடன் ஒப்பிடுவதே சரி எனக் கருதி அதனுடன் ஒப்பிட்டுள்ளோம்

ஹோண்டா ஆக்டிவா
ஹோண்டா நிறுவனத்தின் ஆக்டிவா ஸ்கூட்டர் தான் அதிக அளவிலான விற்பனையில் இருக்கிறது. கடந்த மே மாதம் மட்டும் மொத்தம் 1,49,407 ஸ்கூட்டர்கள் விற்பனையாகியுள்ளன. இதுவே கடந்த ஏப்ரல் மாதம் 1,63,357 ஸ்கூட்டர்கள் விற்பனையாகியிருந்தன. கடந்த மே மாத விற்பனை சரிவு தான்.

டிவிஎஸ் ஜூபிட்டர்
பட்டியலில் இரண்டாவது இடத்தில் டிவிஎஸ் நிறுவனத்தின் ஜூபிட்டர் ஸ்கூட்டர் அதிகமாக விற்பனையாகியுள்ளது. இந்த ஸ்கூட்டர் ஆக்டிவாவின் விற்பனையில் பாதியைக் கூட எட்டி பிடிக்க முடியவில்லை. கடந்த ஏப்ரல் மாதம் மொத்தம் 60,957 ஸ்கூட்டர்கள் விற்பனையாகியிருந்த நிலையில் கடந்த மே மாதம் வெறும் 59,613 ஸ்கூட்டர்கள்தான் விற்பனையாகியுள்ளது. விற்பனை சற்று சரிவு தான்.

சுஸூகி ஆக்ஸஸ்
125 சிசி ஸ்கூட்டர்களில் சிறப்பாக விற்பனையாவது சுஸூகி நிறுவனத்தின் ஆக்ஸஸ் ஸ்கூட்டர் தான். கடந்த மே மாதம் மொத்தம் 35,709 வானகங்கள் விற்பனையாகியுள்ளது. இதுவே கடந்த ஏப்ரல் மாதத்தில் இதன் விற்பனை வெறும் 32,932 ஆக இருந்தது. ஒரே மாதத்தில் 8.4 சதவீத வளர்ச்சியைச் சந்தித்துள்ளது.

டிவிஎஸ் என்டார்க்
பட்டியலில் 4வது இடத்தில் டிவிஎஸ் என்டார்க் ஸ்கூட்டர் இருக்கிறது. இந்த ஸ்கூட்டர் மெல்ல மெல்ல மக்கள் மனதைக் கவர்ந்து வருகிறது. ஒவ்வொரு மாதமும் படிப்படியாக விற்பனை அதிகமாகிறது. கடந்த மே மாதம் மட்டும் மொத்தம் 26,005 ஸ்கூட்டர்கள் விற்பனையாகியுள்ளன. இதுவே கடந்த ஏப்ரல் மாதம் 25,267 ஸ்கூட்டர்கள் மட்டுமே விற்பனையாகியுள்ளது. ஒரே மாதத்தில் 2.9 சதவீத வளர்ச்சியாகும்.

ஹோண்டா டியோ
ஹோண்டா ஆக்டிவாவை அடிப்படையாக கொண்வு அந்நிறுவனம் கொண்டுவந்த ஸ்கூட்டர் டியோ, இது கடந்த மே மாதம் மொத்தம் 20,497 ஸ்கூட்டர்கள் விற்பனையாகியுள்ளது. இதுவே கடந்த ஏப்ரல் மாதம் வெறும் 16,033 ஸ்கூட்டர்கள் விற்பனையாகியிருந்தன.

ஹீரோ பிளஸர்
ஹீரோ நிறுவனம் பிளஸர் என்ற ஸ்கூட்டரை பிளஸ் மற்றும் XTEC ஆகிய இரண்டுவேரியன்களில் விற்பனை செய்து வருகின்றன. இரண்டு வேரியன்களையும் பொறுத்தவரையில் மொத்தம் 18,531 ஸ்கூட்டர்கள் கடந்த மே மாதம் விற்பனையாகியுள்ளன. இதுவே கடந்த ஏப்ரல் மாதத்தில் 12,303 ஸ்கூட்டர்கள் விற்பனையாகியிருந்தது. ஒரே மாதத்தில் 50.6 சதவீத வளர்ச்சியைச் சந்தித்துள்ளது.

சுஸூகி பார்க்மேன் ஸ்டிரீட்
சுஸூகி நிறுவனத்தின் பர்க்மேன் ஸ்டிரீட் ஸ்கூட்டர் இந்த பட்டியலில் 7வது இடத்தில் இருக்கிறது. இது கடந்த மே மாதம் மொத்தம் 12,990 ஸ்கூட்டர்களை விற்பனை செய்துள்ளது. கடந்த ஏப்ரல் மாத விற்பனையான 9,088 என்ற எண்ணிக்கையை ஒப்பிடும் போது 43 சதவீதம் அதிகம் ஆகும்.

ஹீரோ டெஸ்டினி
பட்டியலில் 8வது இடத்தில் ஹீரோ நிறுவனத்தின் டெஸ்டினி ஸ்கூட்டர் இருக்கிறது. இது கடந்த மே மாதம் 10,892 வாகனங்கள் விற்பனையாகியிருந்தது. இதுவே கடந்த ஏப்ரல் மாதம் வெறும் 8,981 வாகனங்கள் விற்பனையாகியிருந்தது. ஒரே மாதத்தில் 21.3 சதவீத வளர்ச்சியைப் பெற்றுள்ளது.

ஓலா எஸ்1 ப்ரோ
ஓலா நிறுவனத்தின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இருந்தாலும் கடந்த சில மாதங்களாக அந்நிறுவனத்தின் ஸ்கூட்டர் தீப்பிடித்த செய்த வந்த காரணமாகக் கடந்த மே மாதம் விற்பனை சரிவைச் சந்தித்துள்ளது. கடந்த மே மாதம் மொத்தம் 9247 ஸ்கூட்டர்களை விற்பனை செய்துள்ளது. இதுமே கடந்த ஏப்ரல் மாதத்தில் 12,702 வாகனங்களை விற்பனை செய்திருந்தது. ஒரே மாதத்தில் 27.2 சதவீத விற்பனை சரிவைச் சந்தித்துள்ளது.

ஓலா நிறுவனம் கடந்த மே மாதத்திற்கான தனது விற்பனை விபரங்களை வெளியிடவில்லை. இந்த தரவுகள் பரிவாகன் தளத்திலிருந்து எடுக்கப்பட்டவை இதில் தெலங்கானா, ஆந்திரா, மத்தியப் பிரதேச மாநிலங்களின் தரவுகள் இதில் இடம் பெறாது.

சுஸூகி அவினீஸ்
பட்டியலில் கடைசி இடத்தில் சுஸூகி நிறுவனத்தின் அவினீஸ் ஸ்கூட்டர் இருக்கிறது. கடந்த மே மாதம் இந்த ஸ்கூட்டர் மொத்தம் 8,922 ஸ்கூட்டர்கள் விற்பனையாகியுள்ளது. இது ஏப்ரல் மாதம் விற்பனையான 11,078 என்ற எண்ணிக்கைவிட 19.4 சதவீதம் விற்பனை வீழ்ச்சியாகும்.


Click it and Unblock the Notifications








