நம்பவே முடியல! ஒரு முறை சார்ஜ் செய்தால் 300 கிமீ ஓடும் மின்சார ஸ்கூட்டர்! விலை எவ்ளோனு தெரிஞ்சா அசந்திருவீங்க!
ஒரு முறை சார்ஜ் செய்தால் 300 கிலோ மீட்டர்களுக்கும் மேல் பயணிக்கும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

பெங்களூர் நகரை சேர்ந்த எலெக்ட்ரிக் வாகன உற்பத்தி நிறுவனங்களில் ஒன்று சிம்பிள் எனர்ஜி (Simple Energy). சிம்பிள் ஒன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் (Simple One E-Scooter) இந்த நிறுவனத்தின் தயாரிப்புதான். இந்த சூழலில் சிம்பிள் எனர்ஜி நிறுவனம் தற்போது சிம்பிள் ஒன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை மேம்படுத்தியுள்ளது.

சிம்பிள் ஒன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் ஒரு பேட்டரி பொருத்தப்பட்ட மாடலின் ரேஞ்ச் (ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் பயணிக்கும் தொலைவு) 236 கிலோ மீட்டர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் நடைமுறை பயன்பாட்டில், அதாவது நாம் வழக்கமான சாலைகளில் ஓட்டும்போது 200-205 கிலோ மீட்டர்கள் மட்டுமே ரேஞ்ச் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது ஈக்கோ மோடில் கிடைக்கும் ரேஞ்ச் ஆகும். சிம்பிள் ஒன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் ஒரு பேட்டரி பொருத்தப்பட்ட மாடலின் விலை 1.09 லட்ச ரூபாய் ஆகும். இது எக்ஸ் ஷோரூம் விலை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சூழலில், சிம்பிள் ஒன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் பெரிய 2 பேட்டரிகள் பொருத்தப்பட்ட மாடல் தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்த மாடலின் ரேஞ்ச் 300 கிலோ மீட்டர்களுக்கும் அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால், 300 கிலோ மீட்டர்களுக்கும் அதிகமான தூரம் பயணிக்க முடியும். ஒரு பேட்டரி மாடலை போலவே, இரண்டு பேட்டரி பொருத்தப்பட்ட மாடலிலும், 2 பேட்டரிகளையும் கழற்றி மாற்ற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் விற்பனை செய்யப்படும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தொலைதூர பயணங்களுக்கு ஏற்றவை அல்ல என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. நகர பகுதிகளில் ஓட்டுவதே கூட சிரமம்தான் என பலரும் நினைக்கின்றனர். பெரும்பாலான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் ரேஞ்ச் மிகவும் குறைவாக இருப்பதுதான் இதற்கு காரணம்.

ஆனால் சிம்பிள் ஒன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் 2 பேட்டரி பொருத்தப்பட்ட மாடல் ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தாலே 300 கிலோ மீட்டர்களுக்கும் அதிகமான தூரம் பயணிப்பது மிகவும் சிறப்பான விஷயம். இதன் மூலம் தொலைதூர பயணங்களையும் கூட இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் மிக எளிதாக மேற்கொள்ள முடியும்.

மேலும் நகர பகுதிகளில் பயன்படுத்துவதற்கும் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மிகவும் ஏற்றதாக இருக்கும். சார்ஜ் தீர்ந்து விடுமோ? என்ற கவலை இல்லாமல், இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை பயன்படுத்தலாம். 2 பேட்டரிகள் பொருத்தப்பட்ட சிம்பிள் ஒன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை 1.45 லட்ச ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது எக்ஸ் ஷோரூம் விலையாகும்.

300 கிலோ மீட்டர்களுக்கும் அதிகம் என்ற மிக சிறப்பான ரேஞ்ச் மூலமாக இந்திய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் சந்தையில் முன்னணி தயாரிப்பாக சிம்பிள் ஒன் உருவெடுத்துள்ளது. இதற்கு முன்பு சிம்பிள் ஒன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 40 கிலோ மீட்டர்கள் என்ற வேகத்தை, 2.95 வினாடிகளில் எட்டி வந்தது.

ஆனால் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் புதிய மாடல் பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 40 கிலோ மீட்டர்கள் என்ற வேகத்தை 2.85 வினாடிகளிலேயே எட்டி விடும். அதே நேரத்தில் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் டாப் ஸ்பீடு மணிக்கு 105 கிலோ மீட்டர்கள் ஆகும். எனவே 1.45 லட்ச ரூபாய் என்ற விலைக்கு இது மிக சிறப்பான எலெக்ட்ரிக் ஸ்கூட்டராக பார்க்கப்படுகிறது.

சிம்பிள் ஒன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் டெலிவரி பணிகள் வரும் ஜூன் மாதத்தில் இருந்து தொடங்கும் என சிம்பிள் எனர்ஜி நிறுவனம் அறிவித்துள்ளது. சிம்பிள் ஒன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்திய சந்தையில் கடந்த 2021ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி (சுதந்திர தினம்) அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.

விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு சுமார் 9 மாதங்கள் கழித்து சிம்பிள் ஒன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் டெலிவரி பணிகள் தொடங்கப்படவுள்ளன. இதற்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே உள்ளதால் வாடிக்கையாளர்களின் ஆவல் அதிகரித்துள்ளது. சிம்பிள் ஒன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முன்பதிவுகள் குவிந்துள்ளன.

வாடிக்கையாளர்கள் மத்தியில் எவ்வளவு பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது என்பதற்கு இந்த எண்ணிக்கை ஒரு சாட்சியாக பார்க்கப்படுகிறது. இந்திய சந்தையில் டிவிஎஸ் ஐக்யூப், பஜாஜ் சேத்தக், ஓலா எஸ்1 மற்றும் எஸ்1 ப்ரோ, ஏத்தர் 450எக்ஸ் உள்ளிட்ட எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுடன் சிம்பிள் ஒன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் போட்டியிடும்.


Click it and Unblock the Notifications








