ஒருமுறை சார்ஜ் செய்தால் 172கிமீ பயணம்... ஸ்பெயின் இவி நிறுவனத்தின் கவர்ச்சிகரமான எலக்ட்ரிக் ஸ்கூட்டர் - மோ 50!
இந்தியா, உலகளவில் மிக பெரிய ஆட்டோமொபைல் சந்தைகளுள் ஒன்று என்றால் அதில் மிகையில்லை. இதனாலேயே வெளிநாட்டை சேர்ந்த பல ஆட்டோமொபைல் நிறுவனங்கள் இந்திய சந்தையில் கடந்த காலங்களில் நுழைந்துள்ளன. சில நிறுவனங்கள் புதியதாக நுழையவும் திட்டமிட்டு வருகின்றன. இந்த வகையில் இந்தியாவில் கால்பதிக்க முனைப்பு காட்டி வரும் ஆட்டோமொபைல் நிறுவனம் தான் சியாட் (SEAT) ஆகும்.
உலகளவில் எலக்ட்ரிக் 2-சக்கர வாகனங்களின் பயன்பாடு கடந்த சில வருடங்களில் பெரிய அளவில் வளர்ச்சி கண்டுள்ளது. குறிப்பாக, எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்குவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனை நன்கு புரிந்துகொண்டதன் விளைவாக பல ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் புதியது புதியதாக தோன்றி வருகின்றன. அதேநேரம் வெளிநாடுகளில் ஏற்கனவே எலக்ட்ரிக் 2-வீலர்கள் தயாரிப்பு & விற்பனையில் கோலோச்சி வரும் பிராண்ட்களின் கவனமும் இந்தியாவின் பக்கம் திரும்பி உள்ளது.

இந்த வகையில் சமீபத்தில் மோ 125 என்ற பெயரில் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை விற்பனைக்கு கொண்டுவந்த சியாட் நிறுவனம் அதன் 2வது எலக்ட்ரிக் ஸ்கூட்டராக மோ 50 (Mo 50) எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வெளியீடு செய்துள்ளது. இந்தியாவில் வருகிற 2023ஆம் ஆண்டின் முதல் பாதியில் விற்பனைக்கு கொண்டுவரப்படலாம் என எதிர்பார்க்கப்படும் மோ 50 ஆனது சியாட் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் வரிசையில் குறைந்த விலையிலான ஆரம்ப-நிலை எலக்ட்ரிக் ஸ்கூட்டராக கொண்டுவரப்பட்டுள்ளது.
ஸ்பெயின் நாட்டை சேர்ந்த சியாட் நிறுவனம் கார்கள் உற்பத்தியில் அந்த நாட்டில் பிரபலமானதாக உள்ளது. அத்தகைய நிறுவனத்தில் களமிறக்கப்பட்டுள்ள புதிய மோ 50 எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆனது ஸ்பானிஷ் எலக்ட்ரிக் 2-வீலர் நிறுவனமான சைலன்ஸின் எஸ்01 எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது ஆகும். மோ 50 இ-ஸ்கூட்டரில் 5.6kWh திறன் கொண்ட பேட்டரி தொகுப்பு மற்றும் 7.3 கிலோவாட்ஸ் எலக்ட்ரிக் மோட்டார் இயக்க ஆற்றலை வழங்குவதற்கு பொருத்தப்பட்டுள்ளன.
மோ 50-இன் பேட்டரியை முழுவதுமாக சார்ஜ் செய்தால் அதிகப்பட்சமாக 172கிமீ தொலைவிற்கு பயணிக்க முடியும் என கூறும் சியாட் நிறுவனம் இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் 3 விதமான ரைடிங் மோட்களை வழங்கியுள்ளது. சிட்டி, ஸ்போர்ட் & ஈக்கோ என்பன அந்த 3 ரைடிங் மோட்கள் ஆகும். சஸ்பென்ஷனுக்கு இந்த மோ 50 இ-ஸ்கூட்டரில் முன்பக்கத்தில் டெலெஸ்கோபிக் ஃபோர்க்குகளும், பின்பக்கத்தில் ப்ரீ-லோடு அட்ஜெஸ்ட்மெண்ட் வசதி கொண்ட மோனோஷாக்கும் பொருத்தப்பட்டுள்ளன.

பிரேக்கிங் பணியை இந்த ஸ்கூட்டரில் இரு சக்கரங்களிலும் வழங்கப்பட்டுள்ள டிஸ்க் பிரேக்குகள் கவனித்து கொள்ளும். ஏற்கனவே கூறியதுபோல், புதிய சியாட் மோ 50 எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்தியாவில் 2023இன் முதல் அரையாண்டிற்குள் விற்பனைக்கு வந்துவிடும். மற்றப்படி இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலைகள் எதுவும் தற்போதைக்கு வெளியிடப்படவில்லை. விலைகள் குறித்த விபரங்களை அதிகாரப்பூர்வ அறிமுகத்தின்போதே எதிர்பார்க்க முடியும். இது சியாட்டின் விலை குறைவான எலக்ட்ரிக் ஸ்கூட்டர் என்பதை மறந்துவிட வேண்டாம்.
இருப்பினும் தரமான சஸ்பென்ஷன் & பிரேக்குகள் வழங்கப்பட்டுள்ளதால், மோ 50-இன் விலைகள் ரூ.80 ஆயிரத்திற்கு அதிகமாகவே நிர்ணயிக்கப்படும். இந்தியாவில் விற்பனைக்கு வந்த பிறகு சியாட் எம் 50 எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு டிவிஎஸ் ஐ-க்யூப், பஜாஜ் சேத்தக், ஏத்தர் 450எக்ஸ் மற்றும் ஓலா எஸ்1 உள்ளிட்ட தற்போதைய பிரபலமான எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் கடுமையான போட்டியாக விளங்கும். அதிலிலும் குறிப்பாக ஓலா எஸ்1 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் போட்டி சற்று அதிகமாகவே இருக்கும் எனலாம்.
ஏனெனில் ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் சில மாதங்களுக்கு முன்னர்தான் அதன் விலை குறைவான எஸ்1 எலக்ட்ரிக் ஸ்கூட்டராக எஸ்1 ஏர் மாடலை சந்தையில் விற்பனைக்கு கொண்டுவந்தது. ரூ.84,999 என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்படும் ஓலா எஸ்1 ஏர் ஸ்கூட்டரானது தோற்றத்தை பொறுத்தவரையில் கிட்டத்தட்ட மற்ற விலைமிக்க எஸ்1 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களையே ஒத்து காணப்படுகிறது. எஸ்1 ஏர் இ-ஸ்கூட்டரின் சஸ்பென்ஷன், பிரேக்குகள் உள்ளிட்டவற்றை தான் ஓலா நிறுவனம் சற்று மலிவானவைகளாக பொருத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications








