இ-ஸ்கூட்டரை வாங்கும் பிளானில் இருக்கீங்களா? உங்களைபோல் இந்தியால இன்னும் எத்தனபேரு இந்த திட்டத்துல இருக்காங்க?
இந்தியாவில் மின்சார இருசக்கர வாகனங்களுக்கு என்ன மாதிரியான டிமாண்ட் நிலவுகின்றது என்பது பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

இந்தியாவில் மின்சார வாகனங்களின் எண்ணிக்கை முன்பைக் காட்டிலும் இப்போது பலமடங்கு அதிகரித்துக் காணப்படுகின்றது. இந்த எண்ணிக்கை எதிர்காலத்தில் இன்னும் சில மடங்கு உயரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அரசும் இந்த நம்பிக்கையிலேயே தற்போது வரை இருக்கின்றது. மத்திய அரசு அதன் பங்காக மின் வாகன பயன்பாட்டை ஊக்குவிக்கும் பொருட்டு மானியம் உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை வழங்கி வருகின்றது.

இந்த நிலையில், சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஓர் சர்வே இந்தியர்கள் மத்தியில் மின் வாகனம் மீதான மோகம் குறைந்துக் காணப்படுவதை உறுதிப்படுத்தியிருக்கின்றது. நூறு கோடிக்கும் அதிகமான ஜனத் தொகைக் கொண்ட நம் நாட்டில் சுமார் 1 சதவீத மக்களே அடுத்த ஆறு மாதங்களில் மின்சார ஸ்கூட்டரை வாங்கும் திட்டத்தில் உள்ளனர் என்பதை குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பொதுமக்களிடத்தில் மேற்கொள்ளப்பட்ட சர்வே வாயிலாக தெரிய வந்திருக்கின்றது.

மின் வாகனங்களுக்கு ஆரம்பத்தில் நல்ல டிமாண்ட் கிடைத்தது என்னமோ உண்மைதான். மத்திய அரசு மட்டுமின்றி மாநில அரசுகள் சிலவும் மின் வாகன பயன்பாட்டை ஊக்குவிக்கும் விதமாக மானியம், பதிவு கட்டணம் மற்றும் வரி சலுகைளை அறிவித்தன. இதன் விளைவாக நாட்டு மக்கள் பலர் மின்சார வாகனங்களை வாங்கிக் குவிக்கத் தொடங்கினர்.

இந்த மாதிரியான சூழ்நிலையிலேயே அனைத்து மின் வாகன பயன்பாட்டாளர்களையும் அச்சுறுத்தும் வகையில் எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் தொடர்ச்சியாக தீ விபத்தில் சிக்கத் தொடங்கின. ஓடிக் கொண்டிருக்கும் போதே பற்றி எரிதல், சார்ஜ் போடும்போது திடீரென தீ பிடித்தல் மற்றும் சும்மா நின்றுக் கொண்டிருக்கும் போதும்கூட தீ பிடித்தல் என தொடர்ச்சியாக மின்சார இருசக்கர வாகனங்கள் சார்ந்து தீ விபத்துகள் அரங்கேறின.

இந்த நிலையே மின் வாகனங்களின் வளர்ச்சிக்கு ஆப்பு வைக்கும் வகையில் அமைந்துள்ளது. ஆமாங்க, பலர் முன்னதாக மின்சார வாகனம் வாங்குவதற்காக போட்டு வைத்திருந்த பிளானை தொடர் தீ விபத்து காரணமாக அத்திட்டத்தைக் கைவிட்டிருக்கின்றனர். இன்னும் பல்வேறு காரணங்களுக்காகவும் மின்சார வாகனத்தை வாங்கும் திட்டத்தை இந்தியர்கள் தள்ளி போட்டிருப்பது தனியார் அமைப்பினர் மேற்கொண்ட சர்வேவின் வாயிலாக தெரிய வந்திருக்கின்றது.

நிறுவனம் 11 ஆயிரம் பேரிடத்தில் மேற்கொண்ட சர்வேவில் 1 சதவீதம் பேர் மட்டுமே அடுத்த ஆறு மாதங்களில் மின்சார வாகனங்களை வாங்க திட்டமிட்டிருக்கின்றனர் என்பது தெரிய வந்திருக்கின்றது. 5 சதவீதம் பேர் தாங்கள் பணி புரியும் இடம் மற்றும் வசிக்கும் பகுதிகளில் மின்சார வாகனங்களுக்கான அடிப்படைக் கட்டமைப்பு வசதி துளியளவும் இல்லை. ஆகையால், மின்சார வாகனம் வாங்கும் திட்டமே எங்களிடத்தில் இல்லை என தெரிவித்திருக்கின்றனர்.

இன்னும் ஒரு சிலர் மின்சார வாகனம் தாங்கள் வாங்கக் கூடிய அளவிற்கு குறைவான விலையில் இல்லை என காரணம் காட்டியிருக்கின்றனர். 7 சதவீதம் பேர் இத்தகைய காரணத்தை கூறியிருப்பது அதிர்ச்சியளிக்கும் வகையில் உள்ளது. அரசு சார்பில் மானியம் வழங்கிக் கொண்டிருக்கின்றபோதிலும் இன்னும் பலருக்கு மின்சார வாகனங்கள் எட்டக் கனியாக இருப்பதை இந்த தகவல் வெளிச்சம் போட்டுக் காட்டும் வகையில் உள்ளது.

மேலும், 31 சதவீதம் பேர் தங்களுக்கு இதுவரை மின்சார வாகனம் மீது இன்டரஸ்ட் வரவில்லை என்றும், 9 சதவீதம் பேர் தங்களிடத்தில் போதுமான வாகனம் பயன்பாட்டில் இருப்பதால் மின் வாகனத்திற்கான தேவை இதுவரை வரவில்லை என்றும் கூறியிருக்கின்றனர். குறிப்பாக, இதில் பலர் மின்சார வாகனத்தைத் தவிர்க்க முக்கிய காரணமாக தீ விபத்துகளையே காரணம் கூறியிருக்கின்றனர்.

இதுவரை பத்துக்கும் மேற்பட்ட மின்சார இருசக்கர வாகன தீ விபத்து இந்தியாவில் அரங்கேறியிருக்கின்றது. இதுவே மக்கள் மனதை பெரியளவில் பாதிக்கச் செய்திருக்கின்றது. சில இடங்களில் பெரும் பாதிப்பையும், சில இடங்களில் உயரிகாவையும் அவை வாங்கியிருக்கின்றன. இதன் விளைவாகவே தற்போது பல மடங்கு குறிப்பிட்ட சில பிராண்டுகளின் விற்பனை பாதித்துள்ளது. உதாரணமாக ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் விற்பனை எண்ணிக்கை பல மடங்கு குறைந்துள்ளது.

கடந்த காலங்களில் மின் வாகன விற்பனையில் முதல் இடத்தைப் பிடித்து வந்த ஓலா எலெக்ட்ரிக் தற்போது ஹீரோ எலெக்ட்ரிக் மற்றும் பிற மின் வாகன உற்பத்தி நிறுவனத்தால் பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளது. ஓலாவின் இந்த நிலைக்கு அந்நிறுவனத்தின் மோசமான வாடிக்கையாளர் அணுகு முறையும், வாகனங்கள் பாதிக்கப்பட்ட நிலையில் டெலிவரிக் கொடுத்ததுமே முக்கிய காரணமாக உள்ளது.

இருப்பினும், ஒரு சிலர் மின்சார வாகனங்களை தற்போதும் வாங்க தயாராக இருக்கின்றனர். ஆனால், அவற்றின் பாதுகாப்பு மற்றும் செயல்திறன் உள்ளிட்டவை கேள்விக் குறியாக இருக்கின்றதால் அந்த பிளானை தள்ளிப்போட்டிருக்கின்றனர். அரசு இந்த விவகாரத்தில் ஏற்கனவே தலையிட ஆரம்பித்துவிட்டது. அது, தற்போது ஓர் கமிட்டியை உருவாக்கியுள்ளது. இந்த குழு மின்வாகனங்களின் தொடர் தீ விபத்திற்கான காரணங்களைக் கண்டறிந்து, எதிர்காலத்தில் தீ விபத்தே இல்லாத வாகனங்களைத் தயாரிப்பதற்கான வழிகாட்டுதல்களை உருவாக்க இருக்கின்றது.


Click it and Unblock the Notifications








