அசத்தலான வடிவில் தைவான் நாட்டின் 4மைகா ஸ்கூட்டர்கள்!! 125சிசி & 150சிசி வெளியீடு!
தைவான் நாட்டை சேர்ந்த ஆட்டோமொபைல் நிறுவனமான SYM அசத்தலான வடிவிலான அதன் புதிய 125சிசி மற்றும் 150சிசி ஸ்கூட்டர்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதுமையான ஸ்கூட்டர்களை பற்றி இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

SYM பிராண்டில் இருந்து வெளியீடு செய்யப்பட்டுள்ள இந்த 125சிசி & 150சிசி ஸ்கூட்டர்கள் 4மைகா என்கிற பெயரில் கொண்டுவரப்பட்டுள்ளன. 4மைகா என்கிற பெயர் 'Formica' என்ற பிளாஸ்டிக் வகையினை குறிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுவாக, ஃபோர்மிகா பிளாஸ்டிக் வலிமையானதாக கருதப்படுகிறது.

ஏற்கனவே கூறியதுபோல், வழக்கத்திற்கு மாறான தோற்றத்தினை கொண்டிருக்கும் SYM 4மைகா கிட்டத்தட்ட மொபெட்டை போன்று பேனல்கள்களை சிறியதாக, குறைவாகவே பெற்றுள்ளது. ட்யூல்-டோன் நிறத்தேர்வு இந்த ஸ்கூட்டர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக, நீலம்-சிவப்பு நிற பெயிண்ட் தேர்வில் 4மைகா ஸ்கூட்டர்கள் நிச்சயமாக சாலையில் எவரொருவரின் கவனத்தையும் கவர்ந்து இழுக்கும்.

புதிய 4மைகா ஸ்கூட்டர்களின் முன்பக்கத்தில் பெரிய அளவில் வட்ட வடிவிலான டிஆர்எல்-களுடன் எல்இடி ஹெட்லைட் பொருத்தப்பட்டுள்ளது. இதன் இரு பக்கங்களில் இண்டிகேட்டர்களும் வழங்கப்பட்டுள்ளன. ஹெட்லைட் அமைப்பு பெரியதாக இருப்பினும் இந்த இண்டிகேட்டர்கள் ஸ்கூட்டருக்கு எளிமையான தோற்றத்தினை வழங்குகின்றன. ஸ்கூட்டரின் பின்பக்கத்தில் பொருட்களை வைத்து செல்வதற்கான கொக்கி கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த 4மைகா ஸ்கூட்டர்கள் பிளவுப்பட்ட இருக்கை அமைப்பினை கொண்டுள்ளன. அத்துடன் பின் இருக்கையினை நீக்கினால் பொருட்களை வைக்க கூடுதல் இடவசதி கிடைக்கும். அதுமட்டுமின்றி ஓட்டுனர் பின் இருக்கையினை முதுகு தலையணையாகவும் பயன்படுத்தி கொள்ளலாம். இது வாடிக்கையாளர்களை வெகுவாக கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஓட்டுனர் கால் வைக்க 410மிமீ-இல் நன்கு பெரியதாகவே இடவசதி வழங்கப்பட்டுள்ளது.

இதனால் இந்த பகுதியில் பயணிகள் பொருட்களை வைத்து செல்லலாம். 4மைகா 125 ஸ்கூட்டரில் 124.7சிசி SOHC என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது அதிகப்பட்சமாக 9.5 பிஎஸ் மற்றும் 9.5 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியது. அதுவே 4மைகா 150 ஸ்கூட்டரில் 11.3 பிஎஸ் மற்றும் 12.25 என்எம் டார்க் திறனை பெறலாம். சஸ்பென்ஷனுக்கு இவற்றில் முன்பக்கத்தில் டெலெஸ்கோபிக் ஃபோர்க்கும், பின்பக்கத்தில் இரட்டை ஷாக் அப்சார்பர்களும் வழங்கப்பட்டுள்ளன.

பிரேக்கிங் பணியினை கவனிக்க டிஸ்க் முன்பக்கத்திலும். ட்ரம் பின்பக்கத்திலும் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் கூடுதல் பாதுகாப்பிற்கு சிங்கிள்-சேனல் ஏபிஎஸ் -உம் வழங்கப்பட்டுள்ளது. 4மைகா ஸ்கூட்டர்களில் 10-இன்ச் சக்கரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இவற்றில் 100/90 என்ற அளவுகளில் டயர்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த தைவான் ஸ்கூட்டர்களின் எடை கிட்டத்தட்ட 125 கிலோ ஆகும்.

ஸ்கூட்டர்களை பொறுத்தவரையில் 125 கிலோ என்பது மிக குறைவு கிடையாது. பொருட்கள் இருப்பினும் சவுகரியமாக கண்ட்ரோல் செய்யக்கூடியதக்கதே. SYM நிறுவனத்தின் இந்த புதிய 4மைகா ஸ்கூட்டர்கள் வழக்கத்தை காட்டிலும் நீளமானவைகளாக விளங்குகின்றன. இவற்றின் வீல்பேஸ் (சக்கரங்களுக்கு இடையேயான தூரம்) 1,390மிமீ ஆகும்.

இந்தியாவின் மிக பிரபலமான ஹோண்டா ஆக்டிவா 125-இன் வீல்பேஸ் 1260மிமீ என்பது குறிப்பிடத்தக்கது. தொழிற்நுட்ப அம்சங்களை பொறுத்தவரையில் 4மைகாவில் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், யுஎஸ்பி சார்ஜிங் துளைகள் மற்றும் ஹசார்ட் விளக்குகள் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன. இந்த 125சிசி & 150சிசி 4மைகா ஸ்கூட்டர்கள் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படுவதற்கு வாய்ப்புகள் மிகவும் குறைவே.

தைவானிலும் இவ்வாறான எரிபொருள் என்ஜின் ஸ்கூட்டர்கள் மட்டுமின்றி, எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் பயன்பாடும் கடந்த சில வருடங்களில் பெரிய அளவில் முன்னேற்றம் கண்டுள்ளது. இந்தியாவில் முன்னணி பிராண்டில் இருந்து விற்பனை செய்யப்படும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் என்று பார்த்தால், பஜாஜ் சேத்தக் & டிவிஎஸ் ஐக்யூப் மாடல்களை சொல்லலாம்.

இவை இரண்டும் நமது சென்னையில் விற்பனையில் உள்ளன. இந்த நிலையில் சமீபத்தில் பஜாஜ் ஆட்டோ நிறுவனம் தனது சேத்தக் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை மேலும் 12 நகரங்களுக்கு விரிவுப்படுத்தியுள்ளது. இதில் நமது தமிழகத்தை சேர்ந்த மதுரை மற்றும் கோயம்புத்தூர் நகரங்களும், டெல்லி, மும்பை போன்ற முக்கிய மாற்று மாநில நகரங்களும் அடங்குகின்றன.

இதன் மூலமாக சேத்தக் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு கிடைக்கும் நகரங்களின் எண்ணிக்கை 20 ஆக அதிகரித்துள்ளது. இந்த நகரங்களில் உள்ள வாடிக்கையாளர்கள் சேத்தக்கை முன்பதிவு செய்து காத்திருக்க வேண்டிய கால அளவு 4-8 மாதங்கள் வரையில் உள்ளது.


Click it and Unblock the Notifications








