ஒரு பைசா செலவு பண்ண வேணாம்.. ஸ்டார்ட் ஆகாத பைக்கை நீங்களே சரி செய்வது எப்படி?
பைக் ஸ்டார்ட் ஆகாமல் தொந்தரவு கொடுத்தால் நீங்களே எப்படிச் சரி செய்வது என இங்கே முழுமையாகக் காணலாம்.
நாம் எல்லோரும் அன்றாடம் டூவீலர்களை பயன்படுத்திக்கொண்டிருக்கிறோம். ஒவ்வொருவருக்கும் தங்களது பைக்கில் ஒவ்வொரு அனுபவம் இருக்கும். நாம் எல்லோருக்கும் வாழ்வில் ஒரு நாளாவது பைக் நடுவழியில் நின்று ஸ்டார்ட் ஆகாமலிருந்திருக்கும்.

இப்படியான நேரம் நமக்குச் சோதனை காலம் தான். உடனடியாக நாம் அருகில் ஏதாவது டூவீலர் மெக்கானிக் கிடைக்கிறாரா எனத் தேடிப்போவோம். இந்த பதிவில் நாம் இப்படி பைக் பாதி வழியில் நின்று விட்டால் மெக்கானிக்கை தேடிப்போகாமல் அதை நாமே எப்படிச் சரி செய்வது எனப் பார்க்கப்போகிறோம். இது எல்லா நேரங்களில் இல்லை என்றாலும் பெரும்பாலான நேரங்களில் பெரும் உதவியாக இருக்கும். பெரும்பாலும் இப்படி பைக் ஸ்டார்ட் ஆகாமல் இருப்பதற்குச் சிறிய சிறிய பிரச்சனைகளே காரணமாக இருக்கும். இதை நாமே சரி செய்ய என்னவெல்லாம் செய்யலாம் எனக் காணலாம்
1. பைக் ஸ்டார்ட் ஆகாமல் இருப்பதற்கு பெரும்பாலான நேரத்தில் பேட்டரி தான் காரணமாக இருக்கும் பேட்டரி டெட் ஆகிவிட்டதா என செக் செய்யுங்கள் அப்படி டெட் ஆகிவிட்டால் ஜம்ப் ஸ்டார்ட் செய்து பாருங்கள்.
2. இன்ஜினிற்கு செல்லும் பெட்ரோல் வால்வு பகுதியில் அடைப்பு இருந்தாலும் இந்த பிரச்சனை இருக்கும். அடைப்பு மட்டுமல்ல வாய்வில் ட்ரையாக இருப்பது அல்லது கிராக் அல்லது லீக் இருந்தாலும் இந்த பிரச்சனை ஏற்படலாம்.
3. சில பைக்குகள் ஸ்டார்ட் ஆக கிளட்ச்களை கட்டாயம் பிடிக்க வேண்டியது இருக்கும். அப்படி நீங்கள் கிளட்சை பிடித்தும் ஸ்டார்ட் ஆகவில்லை என்றால் கிளட்ச் கேபிள் சரியாக இருக்கிறதா என செக் செய்து கொள்ளுங்கள்.
4. சில பைக்குகள் நியூட்டரலில் இருந்தால் மட்டுமே ஸ்டார்ட் ஆகும். கியரை போட்டு கிளட்சை பிடித்து ஸ்டார்ட் செய்ய முடியாது. அப்படியான பைக்குகளில் உங்கள் பைக் நியூட்டரலில் இருக்கிறதா என செக் செய்து கொள்ளுங்கள்.
5. சில பைக்குகளில் சைடு ஸ்டாண்டை எடுக்காமல் பைக் ஸ்டார்ட் ஆகக் கூடாது என்பதற்காக பிளங்கர் பிளக்குகளை பயன்படுத்துவர். அந்த பிளக்கில் ஏதாவது தூசு அடைத்திருந்தால் இந்த பிளக் சரியாக வேலை செய்யாது. அப்பொழுது இந்த பிளக்கில் உள்ள தூசிகளைத் தட்டி துடைத்துவிட்டாலே போதும்.
6. எக்ஸாஸ்டில் ஏதாவது அடைத்திருந்தாலும் இந்த பிரச்சனை வரலாம். குழந்தைகள், அல்லது செல்ல பிராணிகள் ஏதாவது துணி அல்லது பிளாஸ்டிக்கை வைத்து எக்ஸாஸ்ட் அடைக்கப்பட்டிருக்கிறதா என செக் செய்து கொள்ளுங்கள்.
7. பலருக்கு இருக்கும் பிரச்சனை பெட்ரோலை சரியாக செக் செய்யாமல் பைக்கை பயன்படுத்துவது தான். அதனால் உங்கள் பைக்கில் போதுமான பெட்ரோல் இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். எப்பொழுதும் டேங்கில் பெட்ரோல் இருக்கும்படி பராமரிப்பது சிறந்த பழக்கமாகும்.
8. சில நேரம் ஏதாவது பைக்கில் எலெக்ட்ரிக்கல் பிரச்சனை இருக்கலாம். இந்த பிரச்சனையைக் கண்டறிவது சுலபம் ஆனால் பிரச்சனை லூஸ் கனெக்ஷனாக இருக்க வாய்ப்பு இருக்கிறது. அதனால் பைக்கில் உள்ள பிளக்குகளை கழட்டி மாட்டிப் பார்த்தால்கூட பைக் ஸ்டார்ட் ஆகி விடும்.
9. சில பைக்குகளில் இன்ஜின் கட் ஸ்விட்ச் சிவப்பு நிறத்தில் ஹேண்டில் பாரில் இருக்கும். இந்த ஸ்விட்ச் ஆஃப் ஆகி இருப்பதை பார்க்கமலேயே நம்மில் பலர் பைக்கை ஸ்டார்ட் செய்து கொண்டிருப்போம். இதையும் செய்துவிடுங்கள்.
10. பைக்கை நீண்ட நாட்கள் பயன்படுத்தாமல் வைத்திருந்தால் பேட்டரி பவர் குறைந்திருக்கும். அதனால் நீண்ட நாட்களுக்குப் பிறகு பைக்கை எடுத்தால் செல்ஃப் ஸ்டார்ட் செய்யாமல் கிக்கரில் ஸ்டார்ட் செய்யுங்கள் பைக் சில தூரம் ஓடிய பின்பு பேட்டரிக்கு உயிர் வந்துவிடும்.
இது எல்லாம் செய்தும் பைக் ஸ்டார்ட் ஆகவில்லை என்றால் உங்கள் பைக்கில் சிரீயஸாக ஏதோ பிரச்சனை இருக்கிறது என அர்த்தம். இந்த பரிசோதனைகளை எல்லாம் செய்த பின்பு பைக் ஸ்டார்ட் ஆகவில்லை என்றால் நீங்கள் ஒரு நல்ல மெக்கானிக்கையோ அல்லது அருகில் உள்ள சர்வீஸ் சென்டர்களையோ தொடர்பு கொள்ள வேண்டியதைத் தவிர வேறு வழியில்லை.


Click it and Unblock the Notifications








