பல்சர் & அப்பாச்சி பைக்குகளின் விற்பனை வெகுவாக குறையுது!! தனியாளாக கெத்து காட்டும் ஹீரோ எக்ஸ்பல்ஸ்200!
150சிசி-200சிசி மோட்டார்சைக்கிள் பிரிவு ஆனது இளைஞர்கள் மத்தியில் பிரபலமான பைக் பிரிவு என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால் கடந்த சில மாதங்களாக மற்ற பைக் பிரிவுகளை போல் 150சிசி-200சிசியிலும் விற்பனை கணிசமாக குறைந்து வருகிறது. இது கடந்த 2022 பிப்ரவரி மாதத்திலும் தொடர்ந்துள்ளது.

கடந்த பிப்ரவரியில் 150சிசி-200சிசியில் மொத்தம் 85,473 பைக்குகள் இந்திய சந்தையில் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது 2021 பிப்ரவரியில் விற்பனை செய்யப்பட்ட 150சிசி-200சிசி பைக்குகளின் எண்ணிக்கை உடன் ஒப்பிடுகையில் கிட்டத்தட்ட 40.29% குறைவாகும். ஏனெனில் அந்த மாதத்தில் மொத்தம் 1,43,138 பைக்குகள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன.

இதில் இருந்து 150சிசி-200சிசி பைக்குகள் விற்பனை எந்த அளவிற்கு குறைந்து வருகிறது என்பதை அறியலாம். இந்த பிரிவில் அதிக எண்ணிக்கையில் கடந்த பிப்ரவரி மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட மாடலாக வழக்கம்போல் பஜாஜ் பல்சர் முதலிடத்தை பிடித்துள்ளது. பஜாஜ் பல்சர் பிராண்டில் இருந்து இந்த பிரிவில் பல்சர் 150, பல்சர் 180, என்எஸ்160, என்எஸ்200 & ஆர்எஸ்200 உள்ளிட்ட பைக்குகள் சந்தைப்படுத்தப்பட்டு வருகின்றன.

இவை மொத்தமாக கடந்த மாதத்தில் 22,470 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆனால் 2021 பிப்ரவரியில் இவற்றின் விற்பனை எண்ணிக்கை 37,193 ஆக பதிவாகி இருந்தது. இந்த வகையில் 150சிசி-200சிசி பல்சர் பைக்குகளின் விற்பனை 39.59% குறைந்துள்ளது. இருப்பினும், மொத்தம் 150சிசி-200சிசி மோட்டார்சைக்கிள்கள் விற்பனையில் பஜாஜ் பல்சர் பைக்குகள் மட்டுமே 26.29 சதவீத பங்கை கொண்டுள்ளன.

பல்சர் பைக்குகளுக்கு அடுத்து இந்த லிஸ்ட்டில் இரண்டாவது இடத்தை டிவிஎஸ் அப்பாச்சி 16,406 யூனிட்களின் விற்பனை உடன் பிடித்துள்ளது. ஆனால் 2021 பிப்ரவரியில் இதனை காட்டிலும் சுமார் 48.30% அதிகமாக, அதாவது கடந்த மாத எண்ணிக்கையை காட்டிலும் கிட்டத்தட்ட டபுள் மடங்காக 31,735 ஆக பதிவாகி இருந்தது. கடந்த மாத மொத்த 150சிசி-200சிசி பைக்குகள் விற்பனையில் டிவிஎஸ் அப்பாச்சி துணை-பிராண்டின் பங்கு 19.19% ஆகும்.

டிவிஎஸ் அப்பாச்சி பிராண்டில் இருந்து அப்பாச்சி ஆர்டிஆர்160, அப்பாச்சி ஆர்டிஆர்160 4வி, அப்பாச்சி ஆர்டிஆர்180, அப்பாச்சி ஆர்டிஆர்200 4வி உள்ளிட்டவை இந்த பிரிவில் சந்தைப்படுத்தப்பட்டு வருகின்றன. இவற்றிற்கு 3வது இடத்தில் உள்ள யமஹா எஃப்.இசட் பைக்குகளின் கடந்த பிப்ரவரி மாத விற்பனையும் 2021 பிப்ரவரியை காட்டிலும் கிட்டத்தட்ட 24.74% குறைந்துள்ளது.

ஏனெனில் அந்த மாதத்தில் 17,798 150சிசி-200சிசி எஃப்.இசட் பைக்குகள் விற்பனை செய்யப்பட்டு இருந்த நிலையில், இந்த எண்ணிக்கை கடந்த பிப்ரவரியில் 13,395 ஆக குறைந்துள்ளது. இவற்றை காட்டிலும் மலிவான விலை கொண்டதாக விளங்கும் ஹோண்டா யுனிகார்ன் 160 12,812 யூனிட்களின் விற்பனை உடன் இந்த வரிசையில் 4வது இடத்தில் உள்ளது. ஆனால் 2021 பிப்ரவரியில் 22,281 யுனிகார்ன் 160 பைக்குகளை ஹோண்டா விற்பனை செய்திருந்தது.

இந்த வகையில் பார்க்கும்போது ஹோண்டா யுனிகார்னின் விற்பனை 42.50% குறைந்துள்ளது. இவை தான் ஒவ்வொரு மாதத்திலும் சராசரியாக 10 ஆயிரம் யூனிட்களுக்கும் மேல் விற்பனையாகுபவையாகும். இவற்றிற்கு அடுத்து 5வது இடத்தை பிடித்துள்ள பிரபலமான ஸ்போர்ட்ஸ் மோட்டார்சைக்கிளான யமஹா ஆர்15 கடந்த பிப்ரவரியில் 6,405 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

ஆர்15-இன் விற்பனையும் 2021 பிப்ரவரியை காட்டிலும் 14.30% குறைந்துள்ளது. ஆனால் 6வது இடத்தில் உள்ள ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200-இன் விற்பனை சுமார் 49.25% அதிகரித்துள்ளது. 2021 பிப்ரவரியில் வெறும் 2,861 எக்ஸ்பல்ஸ்200 பைக்குகள் விற்பனை செய்யப்பட்டு இருந்த நிலையில், இந்தியாவின் மலிவான அட்வென்ச்சர் பைக்காக விளங்கும் இதன் விற்பனை எண்ணிக்கை கடந்த மாதத்தில் 4,270 ஆக பதிவாகியுள்ளது.

இதில் இருந்து சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட எக்ஸ்பல்ஸ்200 4-வால்வு பைக் நல்ல வரவேற்பை பெற்றுவருவதை அறிய முடிகிறது. இருப்பினும் ஹீரோ மோட்டோகார்பின் மற்றொரு தயாரிப்பான எக்ஸ்ட்ரீம் 160ஆர் பைக்கின் விற்பனை 2021 பிப்ரவரியை காட்டிலும் 27.92% குறைந்துள்ளது. கடந்த 2022 பிப்ரவரியில் விற்பனை செய்யப்பட்ட எக்ஸ்ட்ரீம் 160ஆர் பைக்குகளின் எண்ணிக்கை 3,593 ஆகும்.


Click it and Unblock the Notifications








