பஜாஜ் பல்சர் பைக்குகளின் விற்பனைக்கு என்னதான் ஆச்சு!! விற்பனை எண்ணிக்கை 20 ஆயிரத்திற்கு கீழ் வந்தது!
முந்தைய காலங்களில் 50சிசி-யில் கூட மோட்டார்சைக்கிள்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆனால் தற்போது 100சிசி-யில் பைக்கை சாலையில் பார்ப்பதே அபூர்வமாக உள்ளது. குறைந்தப்பட்சமே 125சிசி என மாறியுள்ளது. ஆனால் இளைஞர்களின் எதிர்பார்ப்பு என்னமோ 150சிசி- 200சிசி பைக்குகளின் மீதுதான்.

இருப்பினும், 150சிசி-200சிசி பிரிவு மோட்டார்சைக்கிள்களின் விற்பனை கடந்த 2022 ஜனவரி மாதத்தில் குறிப்பிடத்தக்க அளவில் குறைந்துள்ளது. கடந்த மாதத்தில் மொத்தமாக இந்த பிரிவில் 89,509 பைக்குகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆனால் 2021 ஜனவரியில் சுமார் 1,56,814 மோட்டார்சைக்கிள்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன.

அதேபோல் கடந்த 2021 டிசம்பர் மாதத்திலும் கிட்டத்தட்ட 24.03% அதிகமாக 1,17,824 பைக்குகள் இந்த பிரிவில் இருந்து விற்பனை செய்யப்பட்டு இருந்தன. இந்த அளவிற்கு 150சிசி- 200சிசி பைக்குகளின் விற்பனை குறைந்துள்ளதற்கு குறைக்கடத்திகளுக்கான பற்றாக்குறை, விலை உயர்வுகள், பெட்ரோல் விலை உயர்வு மற்றும் கொரோனா வைரஸ் பரவல் உள்ளிட்டவற்றை முக்கிய காரணமாக சொல்லலாம்.

மத்திய அரசாங்கத்தின் சமீபத்திய 2022 பட்ஜெட் தான் இந்த விற்பனை குறைவிற்கான காரணிகளுக்கு சரியான தீர்வினை வழங்கும் என ஆட்டோமொபைல் நிறுவனங்கள் நம்பிக்கை உடன் காத்து கொண்டிருக்கின்றன. வழக்கமாக, 150சிசி-200சிசி -யில் பஜாஜ் ஆட்டோ நிறுவனமே அதிக பைக்குகளை விற்பனை செய்யும். ஏனெனில் இந்த பிரிவில் ஏகப்பட்ட பல்சர் பைக்குகள் நிலைநிறுத்தப்படுகின்றன.

ஆனால் இம்முறை பஜாஜ் பல்சர் பைக்குகளை முந்திக்கொண்டு டிவிஎஸ் அப்பாச்சி முதலிடத்தை பிடித்துள்ளது. டிவிஎஸ் அப்பாச்சி வரிசையிலும் நிறைய மாடல்கள் உள்ளன. கடந்த 2022 ஜனவரியில் மொத்தம் 25,925 அப்பாச்சி பைக்குகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு பல்சரை முந்திக்கொண்டு முதலிடத்தை பிடித்திருந்தாலும், உண்மையில் 2021 ஜனவரியை காட்டிலும் அப்பாச்சி பைக்குகளின் விற்பனை கடந்த ஜனவரியில் 8.89% குறைந்துள்ளது.

ஏனெனில் அந்த மாதத்தில் 28,456 அப்பாச்சி பைக்குகள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன. ஆனால் 23,533 அப்பாச்சி பைக்குகள் விற்பனை செய்யப்பட்ட கடந்த டிசம்பர் உடன் ஒப்பிடுகையில் கடந்த மாத விற்பனை எண்ணிக்கை 10.16% அதிகமாகும். கடந்த மாதத்தில் மொத்தமாக விற்பனை செய்யப்பட்ட 89,509 150சிசி-200சிசி பைக்குகளில் டிவிஎஸ் அப்பாச்சியின் பங்கு மட்டுமே 28.96% ஆகும்.

இந்த வரிசையில் இரண்டாவது இடத்தில் உள்ள பல்சர் பைக்குகளின் விற்பனை கடந்த மாதத்தில் பெரிய அளவில் சரிவை கண்டுள்ளது. 2021 ஜனவரியில் 44,190 யூனிட்களும், 2021 டிசம்பரில் 34,445 யூனிட்களும் விற்பனை செய்யப்பட்டிருந்த 150சிசி-200சிசி பல்சர் பைக்குகள் கடந்த மாதத்தில் வெறும் 16,646 யூனிட்கள் மட்டுமே விற்கப்பட்டுள்ளன.

இந்த வகையில் பார்த்தோமேயானால், பஜாஜ் பல்சர் பைக்குகளின் விற்பனை வருடம்-வருடம் ஒப்பிடுகையில் சுமார் 62.33 சதவீதமும், மாதம்-மாதம் ஒப்பிடுகையில் 51.67 சதவீதமும் குறைந்துள்ளது. இதனால் கடந்த டிசம்பரில் 29.23 சதவீதமாக இருந்த, மொத்த விற்பனையில் பல்சர் பைக்குகளின் பங்கு கடந்த ஜனவரி மாதத்தில் 18.60% ஆக சரிந்துள்ளது.

பஜாஜ் பல்சரை மிக நெருக்கமாக பின் தொடர்ந்தவாறு மூன்றாவது இடத்தில் யமஹா எஃப்.இசட் பைக்குகள் (எஃப்.இசட்25 மாடலை தவிர்த்து) உள்ளன. ஏனெனில் கடந்த மாதத்தில் 15,734 எஃப்.இசட் பைக்குகளை யமஹா விற்பனை செய்துள்ளது. இது கடந்த மாதத்தில் விற்கப்பட்ட 150சிசி-200சிசி பல்சர் பைக்குகள் உடன் ஒப்பிடுகையில் சில நூறு யூனிட்கள் மட்டுமே குறைவாகும்.

ஆனால் 2021 ஜனவரியிலும், சரி, 2021 டிசம்பரிலும் சரி 150சிசி-200சி பல்சர் பைக்குகளின் விற்பனைக்கும், எஃப்.இசட் பைக்குகளின் விற்பனை எண்ணிக்கைக்கும் இடையே கிட்டத்தட்ட 15 ஆயிரம் யூனிட்கள் அளவில் வித்தியாசம் இருந்தது. இதனால் எஃப்.இசட் பைக்குகளின் விற்பனை வழக்கத்தை காட்டிலும் அதிகரித்துள்ளதாக எண்ணிவிட வேண்டாம். ஏனெனில் 2021 ஜனவரியில் 150சிசி-200சிசி எஃப்.இசட் பைக்குகள் 21,496 யூனிட்களும், கடந்த டிசம்பரில் 19,790 யூனிட்களும் விற்பனை செய்யப்பட்டு இருந்தன.

இவற்றிற்கு அடுத்து இந்த வரிசையில் நான்காவது இடத்தில் ஹோண்டா யூனிகார்ன் 160 பைக் உள்ளது. கடந்த மாதத்தில் மொத்தம் 11,349 யூனிகார்ன் 160 பைக்குகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆனால் 2021 ஜனவரியில் இதனை காட்டிலும் சுமார் 56.01% அதிகமாக 25,799 யூனிகார்ன் பைக்குகளும், 2021 டிசம்பரில் 41.26% அதிகமாக 19,321 யூனிகார்ன் பைக்குகளும் விற்பனை செய்யப்பட்டு இருந்தன.


Click it and Unblock the Notifications








