திடீரென டாப்-கியரில் பஜாஜ் பிளாட்டினா பைக்குகளின் விற்பனை!! ஹீரோ மோட்டோகார்ப்பிற்கு டஃப் கொடுக்கும் ஹோண்டா!
2022ஆம் ஆண்டின் முதல் பண்டிகை மாதமான கடந்த ஜனவரி மாதத்தில் இந்தியாவில் அதிகளவில் விற்பனை செய்யப்பட்ட இருசக்கர வாகனங்கள் குறித்த விபரங்கள் வெளியாகியுள்ளன. அவற்றை பற்றி முழுமையாக இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

சுருக்கமாக SIAM எனப்படும் இந்திய ஆட்டோமொபைல் தயாரிப்பாளர்கள் சமூகத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள இந்த விபரங்களின்படி, கடந்த ஜனவரி மாதத்திலும் அதிகளவில் விற்பனையான இருசக்கர வாகனமாக ஹீரோ ஸ்பிளெண்டர் விளங்குகிறது.

கடந்த மாதத்தில் மொத்தம் 2,08,263 ஸ்பிளெண்டர் பைக்குகளை ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் விற்பனை செய்துள்ளது. வழக்கம்போல் முதலிடத்தை பிடித்திருந்தாலும், 2021 ஜனவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் ஸ்பிளெண்டர் பைக்குகளின் விற்பனை கிட்டத்தட்ட 7.60% குறைந்துள்ளது. ஏனெனில் அந்த மாதத்தில் மொத்தம் 2,25,382 ஸ்பிளெண்டர் பைக்குகள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன.

ஸ்பிளெண்டர் பைக்குகள் மட்டுமின்றி, கடந்த மாதத்தில் பெரும்பான்மையான இருசக்கர வாகனங்களின் விற்பனை எண்ணிக்கைகள் கடந்த ஆண்டு ஜனவரியை காட்டிலும் குறிப்பிடத்தக்க அளவில் குறைந்துள்ளன. இவ்வாறு விற்பனை வழக்கத்தை விட சற்று குறைந்து இருப்பினும், கடந்த ஜனவரி மாத மொத்த 2-வீலர்ஸ் விற்பனையில் ஸ்பிளெண்டர் பைக்குகள் மட்டுமே 25.87 சதவீதத்தை கொண்டுள்ளன.

இதற்கடுத்து வழக்கம்போல் ஹோண்டா மோட்டார்சைக்கிள் & ஸ்கூட்டர் இந்தியா நிறுவனத்தின் ஆக்டிவா ஸ்கூட்டர் இரண்டாவது இடத்தில் உள்ளது. இருப்பினும் ஆக்டிவா ஸ்கூட்டர்களின் விற்பனை 2021 ஜனவரியை காட்டிலும் கடந்த மாதத்தில் கிட்டத்தட்ட 32.33% சரிந்துள்ளது. ஏனெனில் அந்த மாதத்தில் சுமார் 2,11,660 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்த ஸ்பிளெண்டர் பைக்குகள் கடந்த மாதத்தில் வெறும் 1,43,234 யூனிட்களே விற்கப்பட்டுள்ளன.

மொத்த விற்பனையில் ஹோண்டா ஆக்டிவாவின் பங்கு 17.79% ஆகும். ஒருவழியாக 1 லட்சத்திற்கும் அதிகமான யூனிட்கள் விற்கப்பட்டுள்ள ஹோண்டா சிபி ஷைன் இந்த முறை 3வது இடத்தை தனதாக்கியுள்ளது. கடந்த மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட சிபி ஷைன் பைக்குகளின் எண்ணிக்கை 1,05,159 யூனிட்களாகும். அதுவே கடந்த ஆண்டு ஜனவரியில் இதனை காட்டிலும் 9.52% அதிகமாக 1,16,222 சிபி ஷைன் பைக்குகள் விற்கப்பட்டு இருந்தன.

| Rank | Model | Jan-22 | Jan-21 | Growth (%) |
| 1 | Hero Splendor | 2,08,263 | 2,25,382 | -7.60 |
| 2 | Honda Activa | 1,43,234 | 2,11,660 | -32.33 |
| 3 | Honda CB Shine | 1,05,159 | 1,16,222 | -9.52 |
| 4 | HF Deluxe | 85,926 | 1,34,860 | -36.29 |
| 5 | Bajaj Pulsar | 66,839 | 97,580 | -31.50 |
| 6 | Bajaj Platina | 46,492 | 27,131 | 71.36 |
| 7 | TVS Jupiter | 43,476 | 51,952 | -16.32 |
| 8 | Suzuki Access | 42,148 | 45,475 | -7.32 |
| 9 | TVS XL100 | 35,785 | 59,007 | -39.35 |
| 10 | Honda Dio | 27,837 | 28,914 | -3.72 |
இந்த லிஸ்ட்டில் நான்காவது இடத்தில் உள்ள ஹீரோ எச்.எஃப் டீலக்ஸ் பைக்கின் விற்பனை கடந்த மாதத்தில் வெகுவாக குறைந்துள்ளது. பொதுவாக இந்த லிஸ்ட்டில் ஆக்டிவாவிற்கு அடுத்து 3வது இடத்தை பிடிக்கக்கூடிய இந்த பைக் இம்முறை சுமார் 36.29 சதவீத விற்பனை சரிவுடன் 1 இடம் இறக்கம் கண்டுள்ளது. கடந்த மாதத்தில் மொத்தம் 85,926 எச்.எஃப் டீலக்ஸ் பைக்குகள் விற்பனையாகியுள்ள நிலையில், 2021 ஜனவரியில் இதே ஹீரோ பைக்கின் விற்பனை எண்ணிக்கை 1,34,860 ஆக பதிவாகி இருந்தது.

இதேபோல் 2021 ஜனவரியில் கிட்டத்தட்ட 1 லட்ச யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்த பஜாஜ் பல்சர் பைக்குகள் கடந்த மாதத்தில் 31.50% சரிவுடன் 66,839 யூனிட்கள் விற்கப்பட்டுள்ளன. ஆனால் இதற்கடுத்து 6வது இடத்தில் உள்ள மற்றொரு பஜாஜ் ஆட்டோ மோட்டார்சைக்கிளான பிளாட்டினாவின் விற்பனை வருடம்-வருடம் ஒப்பீடுகையில் சுமார் 71.36% அதிகரித்துள்ளது.

2021 ஜனவரியில் வெறும் 27,131 பிளாட்டினா பைக்குகள் விற்பனை செய்யப்பட்டு இருந்த நிலையில், கடந்த மாதத்தில் மொத்தம் 46,492 யூனிட் பிளாட்டினா பைக்குகளை பஜாஜ் ஆட்டோ நிறுவனம் விற்பனை செய்துள்ளது. இன்னும் சொல்லப்போனால், கடந்த மாதத்தில் அதிகம் விற்பனை செய்யப்பட்ட 2-வீலர்களின் டாப்-10 லிஸ்ட்டில் 2021 ஜனவரியை காட்டிலும் அதிக யூனிட்களுடன் நேர்மறையான விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்துள்ள ஒரே மோட்டார்சைக்கிள் பஜாஜ் பிளாட்டினா ஆகும். இதற்கடுத்து 7வது இடத்தில் டிவிஎஸ் ஜூபிட்டர் ஸ்கூட்டர் 43,476 யூனிட்களின் விற்பனை உடன் உள்ளது.


Click it and Unblock the Notifications








