செம்மையா இருக்கு... இந்த கலரில் டிவிஎஸ் எண்டார்க் ஸ்கூட்டரை வாங்க பாருங்க!! இப்போ தான் புதுசா வந்திருக்கு!
டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் அதன் பிரபலமான ஸ்கூட்டர்களுள் ஒன்றான எண்டார்க்125 ரேஸ் எடிசனில் புதியதாக ஒரு பெயிண்ட் தேர்வை அறிமுகப்படுத்தியுள்ளது. எந்த மாதிரியான பெயிண்ட் தேர்வு அது? என்பது உள்பட எண்டார்க் 125 ரேஸ் எடிசன் ஸ்கூட்டரை பற்றிய முக்கிய விபரங்களை இனி இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவின் முதன்மையான 2-வீலர் & 3-வீலர் பிராண்ட்களுள் ஒன்று டிவிஎஸ் ஆகும். நமது தமிழகத்தை சேர்ந்த டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தில் இருந்து கடந்த காலங்களில் பல்வேறு விதமான வாகனங்கள் விற்பனைக்கு வந்துள்ளன. இந்த வகையில் டிவிஎஸ்-இன் தனித்துவமான தயாரிப்பு வாகனமாக அறிமுகப்படுத்தப்பட்டதுதான், எண்டார்க் 125.

125சிசி ஸ்கூட்டர் மாடலான எண்டார்க்கில் பின்னர் ரேஸ் எடிசன் அறிமுகப்படுத்தப்பட்டது. பெயருக்கு ஏற்ப எண்டார் 125 ரேஸ் எடிசன் ஆனது இளம் தலைமுறையினரை கவரும் விதத்திலான ஸ்டைலில் கிராஃபிக்ஸ் உடன் அறிமுகமானது. சிவப்பு நிற பெயிண்ட்டில் அறிமுகப்படுத்தப்பட்ட எண்டார்க் 125 ரேஸ் எடிசனுக்கு அதன் கிராஃபிக்ஸ்-களினாலேயே சிறப்பான வரவேற்பு கிடைத்து வருகிறது.

எந்த அளவிற்கு என்றால், டிவிஎஸ் எண்டார்க் 125 ஸ்கூட்டர்களின் மொத்த விற்பனையில் அதன் ரேஸ் எடிசனின் பங்கு இன்றியமையாததாக உள்ளது. இந்த வரவேற்பினை மேலும் அதிகரிக்கும் விதமாக நீல நிற பெயிண்ட்டில் எண்டார்க் 125 ரேஸ் எடிசன் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த கவர்ச்சிக்கரமான நீல நிறத்திற்கு டிவிஎஸ் நிறுவனம் மெரைன் நீலம் என பெயர் வைத்துள்ளது.

எண்டார்க் 125 ஸ்கூட்டரின் சிவப்பு நிற ரேஸ் எடிசனில் சிவப்பு நிறம் இருந்த இடங்களில் மெரைன் நீல நிறம் கொடுக்கப்பட்டுள்ளது, அவ்வளவுதான். மற்றப்படி, எண்டார்க் 125 ரேஸ் எடிசனுக்கே உண்டான கட்டக்கட்டமான டிசைன் ஆனது நீல நிற எண்டார்க் 125 ரேஸ் எடிசனிலும் தொடரப்பட்டுள்ளன. இருப்பினும், சிவப்பு நிறத்தை காட்டிலும், பளபளக்கும் நீல நிறம் எண்டார்க் 125 ரேஸ் எடிசனுக்கு மிகவும் எடுப்பாக பொருந்தியுள்ளதை கூறியே ஆக வேண்டும்.

விமானத்தின் தோற்றத்தை அடிப்படையாக கொண்டு டிவிஎஸ் வடிவமைத்த எண்டார்க் 125 ரேஸ் எடிசனில் நேர்த்தியான, கூர்மையான லைன்கள் அதிகளவில் வழங்கப்படுகின்றன. இதனால் மாடர்ன் தோற்றத்தில் காட்சியளிக்கும் இந்த ஸ்பெஷல் எடிசன் ஸ்கூட்டரில் முன் & பின்பக்க ஹெட்லைட்கள் எல்இடி தரத்தில் வழங்கப்படுவது கூடுதல் சிறப்பாகும்.

வழக்கமான டிவிஎஸ் எண்டார்க் 125 ஸ்கூட்டர்களில் இருந்து வேறுப்படும் விதமாக, கூடுதலாக ‘RACE EDITION" என்ற லோகோ உடன் உருவாக்கப்படும் இந்த ஸ்பெஷல் எடிசன் ஸ்கூட்டர்களில் டைமண்ட் கட் அலாய் சக்கரங்கள் பொருத்தப்படுகின்றன. இவை எல்லாம் விட முக்கிய அம்சமாக டிவிஎஸ் பிராண்டின் ஸ்மார்ட் எக்ஸோனெக்ட் (Smart Xonnect) இணைப்பு வசதி உடன் எண்டார்க் 125 ரேஸ் எடிசன் ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

இந்த இணைப்பு வசதியின் வாயிலாக பயனர்கள் தங்களது ஸ்மார்ட்போனை ஸ்கூட்டருடன் இணைத்து கொண்டு 60க்கும் அதிகமான ஸ்மார்ட் இணைப்பு வசதிகளை பெற முடியும். எண்டார்க் 125 ரேஸ் எடிசன் ஸ்கூட்டரில் 124.8சிசி, சிங்கிள்-சிலிண்டர், 4-ஸ்ட்ரோக், 3-வால்வு, ஏர்-கூல்டு SOHC, ஃப்யுல்-இன்ஜெக்டட் என்ஜினை டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் பொருத்துகிறது.

இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 7,000 ஆர்பிஎம்-இல் 7.38 பிஎஸ் பவரையும், 5,500 ஆர்பிஎம்-இல் 10.5 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது. அதிகப்பட்சமாக மணிக்கு 95கிமீ வேகத்தில் செல்லக்கூடிய இந்த டிவிஎஸ் ஸ்பெஷல் எடிசன் ஸ்கூட்டரில் 0-வில் இருந்து 60kmph வேகத்தை வெறும் 9 வினாடிகளில் எட்டிவிட முடியும்.

தொழிற்நுட்ப அம்சங்களாக, பாஸ் பை ஸ்விட்ச், ட்யூவல் சைடு ஸ்டேரிங் லாக், யுஎஸ்பி சார்ஜர் பார்க்கிங் பிரேக் மற்றும் என்ஜின் கில் ஸ்விட்ச் உள்ளிட்டவை எண்டார்க் 125 ரேஸ் எடிசனில் வழங்கப்படுகின்றன. எண்டார்க் 125 ஸ்கூட்டர்களில் பெட்ரோல் நிரப்பும் பகுதியானது பயனர்களின் சவுகரியத்திற்காக ஸ்கூட்டருக்கு வெளியே வழங்கப்படுகிறது. இதனால் இருக்கைக்கு அடியில் சுமார் 20 லிட்டர்கள் கொள்ளளவில் இடவசதி கிடைக்கிறது.

மெரைன் நீல நிறத்திலான புதிய டிவிஎஸ் எண்டார்க் 125 ரேஸ் எடிசனின் எக்ஸ்-ஷோரூம் விலை ஆனது ரூ.87,011 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தற்போது அறிமுகப்படுத்தப்பட்டிருப்பதுடன், இந்த புதிய எண்டார்க் 125 ஸ்கூட்டருக்கான முன்பதிவுகளும் டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் அங்கிகரீக்கப்பட்ட டீலர்ஷிப் மையங்களில் துவங்கப்பட்டுள்ளன.


Click it and Unblock the Notifications








