Indian Motorcycle of the Year 2022 விருதை வென்ற டிவிஎஸ் பைக்... சூப்பருங்க! இது பைக்குகளுக்கான ஆஸ்கார் விருது!
டிவிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பு ஒன்று இந்தியன் மோட்டார்சைக்கிள் ஆஃப் தி இயர் 2022 (Indian Motorcycle of the Year 2022) விருதை வென்றிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

டிவிஎஸ் நிறுவனத்தின் மிக முக்கியமான தயாரிப்பாக ரைடர் 125 இருக்கின்றது. மலிவு விலையில் விற்பனைக்குக் கிடைக்கும் ஸ்போர்ட்ஸ் ரக பைக் இதுவாகும். இந்த பைக்கிற்கு பட்ஜெட் ஸ்போர்ட்ஸ் வாகன பிரியர்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைத்து வருகின்றது. இந்த நிலையில் மிக முக்கியமான விருதை ஒன்றை டிவிஎஸ் ரைடர் 125 வென்றிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. '2022ம் ஆண்டுக்கான இந்தியன் மோட்டார்சைக்கிள்' எனும் அவார்டையே அப்பைக் வென்றிருக்கின்றது.

டிவிஎஸ் ரைடர் 125 மிக சிறந்த தயாரிப்பு என்பதை உறுதிப்படுத்தும் வகையில் இந்த விருது அமைந்துள்ளது. இதனை இந்திய மோட்டார்சைக்கிள்களுக்கான ஆஸ்கர் விருது என்று கூறலாம். அந்தளவிற்கு மிகவும் முக்கியமான விருது இது பார்க்கப்படுகின்றது. இத்தகைய சிறப்புமிக்க விருதையே டிவிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பு தற்போது தட்டிச் சென்றிருக்கின்றது. இது டிவிஎஸ் நிறுவனத்திற்கும் புகழ் சேர்க்கும் வகையில் அமைந்துள்ளது.

செலவு செய்யும் பணத்திற்கு மிகுந்த மதிப்புமிக்க இரு சக்கர வாகனமாக இது காட்சியளிக்கின்றது. இதுமட்டுமின்றி, கவர்ச்சியான தோற்றம், அதிக தொழில்நுட்ப வசதிகள், எரிபொருள் சிக்கனம், சிறந்த எஞ்ஜின் மற்றும் மிக சிறந்த சவாரி அனுபவம் உள்ளிட்டவற்றை வழங்கக் கூடியதாகவும் டிவிஎஸ் ரைடர் 125 இருசக்கர வாகனம் காட்சியளிக்கின்றது.

இத்தகைய சிறப்பு வசதிகளைக் கொண்டிருக்கின்ற காரணத்தினாலேயே ஐமோடி (IMOTY) ஜூரிக்கள் டிவிஎஸ் ரைடர் 125 பைக்கிற்கு 'இந்தியன் மோட்டார்சைக்கிள் ஆஃப் தி இயர் 2022' விருதை வழங்கியிருக்கின்றனர். ராயல் என்பீல்டு கிளாசிக் 350, ஹோண்டா சிபி 200 எக்ஸ், யமஹா எஃப்இசட் எக்ஸ், பஜாஜ் பல்சர் எஃப்250 மற்றும் பஜாஜ் பல்சர் என்250 உள்ளிட்ட பைக்குகளும் இந்த போட்டியில் பங்கேற்றன. ஆனால், டிவிஎஸ் ரைடரே 125 வெற்றியாளராக தேர்வு செய்யப்பட்டது. 2022ம் ஆண்டிற்கான பைக்கை தேர்வு செய்யும் பணிகள் புத் இன்டர்நேஷனல் சர்க்யூட்டில் நடைபெற்றது குறிப்பிடத்தகுந்தது.

டிவிஎஸ் ரைடர் 125 பைக் ஃபையரி மஞ்சள், பிளேசிங் நீலம், ஸ்ட்ரைக்கிங் சிவப்பு, விக்கட் கருப்பு ஆகிய நான்கு விதமான நிற தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இதில் மஞ்சள் நிற தேர்வே மிகவும் அட்டகாசமானதாக காட்சியளிக்கின்றது. இப்பைக்கை டிஸ்க் மற்றும் ட்ரம் என இரு விதமான வேரியண்டுகளில் டிவிஎஸ் நிறுவனம் விற்பனைக்கு வழங்குகின்றது. இதில், ட்ரம் பிரேக் வேரியண்டிற்கு ரூ. 87,641-ம், டிஸ்க் பிரேக் வேரியண்டிற்கு ரூ. 92,157-ம் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இரண்டும் சென்னை எக்ஸ்-ஷோரூம் விலையாகும்.

இந்த பைக்கில் ஏர் மற்றும் ஆயில் கூல்டு எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்ஜின் 124.8 சிசி திறன் கொண்டது. அதிகபட்சமாக 8.37kW பவரையும், 11.2 என்எம் டார்க்கையும் இது வெளியேற்றும் திறன் கொண்டது. 5 ஸ்பீடு கியர்பாக்ஸில் இந்த எஞ்ஜின் இயங்கும். ஈகோத்ரஸ்ட் ஃப்யூவல் இன்ஜெக்சன் தொழில்நுட்பம் கூடுதல் அம்சமாக மோட்டாரில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது அதிக எரிபொருள் சிக்கனம் மற்றும் மைலேஜிற்கு வழி வகுக்க உதவும். இத்துடன், குறைந்த மாசு வெளிப்பாட்டிற்கும் இது உதவும்.

தோற்றத்திற்கு ஏற்பவே இந்த பைக்கின் செயல்பாடும் இருக்கின்றது. ஆம், மேலே கூறியதைப் போல் தனது டிவிஎஸ் ரைடர் 125 ஓர் ஸ்போர்ட்ஸ் பைக்கைப் போன்று செயல்படும். அது பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 60 கிமீ எனும் வேகத்தை தொட வெறும் 5.9 செகண்டுகளேயே எடுத்துக் கொள்கின்றது. இப்பைக்கில் சிறந்த சஸ்பென்ஷன் வசதிக்காக 5 ஸ்டெப் அட்ஜெஸ்டபிள் மோனோஷாக் மற்றும் லோவ் ஃபிரிக்ஷன் ஃப்ரெண்ட் சஸ்பென்ஷன்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

மிக சிறந்த பிரேக்கிங் வசதிக்காக 240 மிமீ டிஸ்க் முன் பக்கத்திலும், 130 மிமீ டிரம் பிரேக் பின் பக்கத்திலும் வழங்கப்பட்டிருக்கின்றது. இத்துடன், சைடு ஸ்டாண்டு இன்டிகேட்டர் எஞ்ஜின் மொபிலிசர் வசதி உடனும், கார்களில் இருக்கும் சீட் பெல்ட் ரிமைண்டர் போல ஹெல்மெட் ரிமைண்டர் வசதியும் கூடுதல் சிறப்பு அம்சம்களாக வழங்கப்பட்டிருக்கின்றன.

பைக்கின் கவர்ச்சியான தோற்றத்தைக் கூடுதலாக மெருகேற்றும் வகையில் 3டி தர எம்பளம், பின் பக்க பயணிக்கான முழு அளவிலான கைப் பிடிகள், எல்இடி ஹெட்லேம்ப், எல்இடி டிஆர்எல்கள் மற்றும் எல்இடி வால் பகுதி மின் விளக்குகள் உள்ளிட்டவையும் ரைடர் 125 இல் இடம் பெற்றிருக்கின்றன.


Click it and Unblock the Notifications








