புதிய டிவிஎஸ் ரோனின் பைக்கை வாங்க போறீங்களா? இந்த ஆக்ஸஸரீகளையும் பார்த்து வாங்குங்க!!
புதிய டிவிஎஸ் ரோனின் (TVS Ronin) பைக்கிற்கான அதிகாரப்பூர்வ ஆக்ஸஸரீகள் வெளியிடப்பட்டுள்ளன. அவற்றை பற்றி முழுமையாக இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

ஒரு காலத்தில் புதியதாக பைக்கையோ அல்லது காரையோ வாங்கியவர்கள் தங்களது வாகனம் பிறரது வாகனத்தில் இருந்து தனித்து தெரிய வேண்டும் என்பதற்காக தங்களுக்கு பிடித்தவாறு மெக்கானிக்குகளின் உதவியுடன் கஸ்டமைஸ்ட் செய்து கொண்டனர். ஆனால் தற்போது பெயிண்ட்டை தவிர்த்து பல வாகன மாடிஃபிகேஷன்கள் அரசாங்கத்தால் தடை செய்யப்பட்டுவிட்டன.

இதனால் வாகனத்தை தயாரிக்கும் நிறுவனங்களே கூடுதல் கட்டணத்துடன் ஆக்ஸஸரீகளை வழங்கி வருகின்றன. இந்த வகையில்தான் தற்போது டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் சமீபத்தில் அறிமுகப்படுத்திய அதன் ரோனின் மோட்டார்சைக்கிளுக்கான ஆக்ஸஸரீகளை அறிவித்துள்ளது. இந்த ஆக்ஸஸரீகள் டூர் தொகுப்பு, அர்பன் தொகுப்பு மற்றும் ஸ்டைல் தொகுப்பு என 3 விதமாக பிரிக்கப்பட்டுள்ளன.

டூர் தொகுப்பு - ரூ.9,599
| Tour Kit | Price |
| Saddle Bag Stay | ₹1,798 |
| Rear Rack | ₹1,999 |
| Saddle Bag | ₹1,999 |
| Tail Bag | ₹1,599 |
| Flyscreen | ₹1,079 |
பெயருக்கு ஏற்றாற்போல டூர் தொகுப்பில் அடங்கியுள்ள பாகங்கள் தொலைத்தூர நெடுஞ்சாலை பயணங்களுக்கு ஏற்றவைகளாக வழங்கப்பட்டுள்ளன.

ஃப்ளை ஸ்க்ரீன் நெடுஞ்சாலைகளில் எதிர்வரும் காற்றையும், தூசிகளையும் தடுக்கும். பின் இறுதிமுனை & இருக்கை பைகள் பொருட்களை வைத்து செல்ல உதவியாக இருக்கும். இவை போதாதென்றால், பின்பகுதியில் கூடுதல் அலமாரியை பொருத்திக்கொண்டு, அதிலிலும் பொருட்களை கட்டி எடுத்து செல்லலாம்.

அர்பன் தொகுப்பு - ரூ.4,499
| Urban Kit | Price |
| USB Charger | ₹989 |
| Adjustable Levers | ₹809 - ₹1,439 |
| Tank Bag | ₹1,979 |
இந்த தொகுப்பில் அன்றாட நகர்புற பயன்பாட்டிற்கு தேவையான 3 ஆக்ஸஸரீகள் மட்டுமே அடங்கியுள்ளன.

மொபைல் போனிற்கான யுஎஸ்பி சார்ஜர் தற்போதைய காலக்கட்டத்தில் எல்லா ஓட்டுனர்களுக்கும் தேவைப்படக்கூடிய ஒன்றாக மாறிவிட்டது. இதனை டூர் தொகுப்பிலும் சேர்த்திருக்கலாம். ஏனெனில் தொலைத்தூர பயணங்களின் போதே மொபைல் சார்ஜிங் வசதி அடிக்கடி தேவைப்படும். அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய லிவர்கள் மற்றும் பெட்ரோல் டேங்கில் பை ஆனது தினசரி ரைடிங்கை எளிமையாக்கும்.

ஸ்டைல் தொகுப்பு - ரூ.2,299
| Style Kit | Price |
| Bar End Weights | ₹404 |
| Tank Grip | ₹764 |
| Front Brake Reservoir Cover | ₹404 - ₹494 |
| Engine Cover | ₹269 |
| EFI Cover | ₹584 |
இந்த தொகுப்பில் அடங்கியுள்ள பாகங்கள் அனைத்தும் ரோனின் ஸ்க்ராம்ப்ளர் பைக்கை மேலும் ஸ்டைலிஷாக காட்டக்கூடியவையாக உள்ளன. இதனாலேயே இவற்றின் விலைகள் மிகவும் குறைவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

இந்த 3 ஆக்ஸஸரீ தொகுப்புகளும் வேண்டுமென்பவர்கள் மூன்றையும் பெறலாம். அல்லது தங்களது விருப்பத்திற்கேற்ப, மேற்கூறப்பட்ட விலைகளில் ஒவ்வொரு பாகங்களையும் தனித்தனியாகவும் பெற்று பொருத்தி கொள்ளலாம் எனவும் டிவிஎஸ் மோட்டார் தெரிவித்துள்ளது. இவை தவிர்த்து ஓட்டுனர்களுக்கான ரோனின் டி-சர்ட்களும் டிவிஎஸ் மோட்டாரின் இணையப்பக்கத்தில் விற்பனை செய்யப்படுகின்றன.

கடந்த ஜூலை 6ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட்ட புதிய டிவிஎஸ் ரோனின் பைக்கின் ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலையாக ரூ.1.49 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த விலையில் ஒற்றை-நிற பெயிண்ட் தேர்வில், ஒற்றை-சேனல் ஏபிஎஸ் உடன் ரோனின் பைக்கை வாங்கலாம். இதற்கடுத்து இரட்டை-நிற பெயிண்ட் தேர்வில், சிங்கிள்-சேனல் ஏபிஎஸ் உடன் வழங்கப்படும் இந்த பைக்கின் வேரியண்ட்டின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.1,56,500 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மூவண்ண பெயிண்ட் தேர்வில், இரட்டை-சேனல் ஏபிஎஸ் உடன் வழங்கப்படும் வேரியண்ட் ஆனது ரோனின் டாப் வேரியண்ட்டாகும். இதன் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.1.68 லட்சம். இவை மூன்றும் தான் புதிய டிவிஎஸ் ரோனின் வேரியண்ட்களாகும். இவை ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு விதமான நிறத்தில் ரோனின் பைக்கை பெறலாம். விற்பனையில் இந்த டிவிஎஸ் ஸ்க்ராம்ப்ளர் பைக்கிற்கு போட்டியளிக்கும் விதமாக ராயல் என்பீல்டு ஹண்டர் 350 மற்றும் யெஸ்டி ஸ்க்ராம்ப்ளர் பைக்குகள் உள்ளன.

ரோனின் பைக்கில் 225சிசி ஃப்யுல்-இன்ஜெக்டட் என்ஜினை டிவிஎஸ் நிறுவனம் பொருத்தியுள்ளது. அதிகப்பட்சமாக 20 பிஎச்பி & 20 என்எம் டார்க் திறன் வரையில் வெளிப்படுத்தக்கூடியதாக உள்ள இந்த என்ஜின் உடன் 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. ரோனின் பைக்கின் டாப்-ஸ்பீடு 120kmph ஆகும். இந்த அதிகப்பட்ச வேகத்தை கட்டுப்படுத்தும் பொருட்டே இந்த பைக்கை சிங்கிள்-சேனல் மற்றும் இரட்டை-சேனல் ஏபிஎஸ் தேர்வுகளுடன் டிவிஎஸ் களமிறக்கியுள்ளது.


Click it and Unblock the Notifications








